தலித் ஜனாதிபதியால் என்ன மாற்றாம் வந்துவிடப் போகிறது?

on Friday, June 23, 2017
பாரத நாட்டின் ஜனாதிபதியாக ஒரு தலித் முன்னிறுத்தப்பட்ட நிலையில் தான் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி, தலித் வகுப்பைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ் கர்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தரமுடியாதுன்னு அடம்பிடிக்குது. அப்படி ஜாமீன் தரமுடியாது சொல்ற நீதிபதிகளின் உடம்பின் குறுக்கே நூல் உள்ளது.
ஜாமீன் கொடுக்கக் கூடாத அளவுக்கு நீதிபதி கர்ணன் என்ன செய்தார்? 'யோவ், நீதிபதிகளா, நீதி கொடுக்க பொட்டிபொட்டியா பணம் வாங்கலாமா'ன்னு ஆதிக்கசாதி நீதிபதிகளைப் பார்த்து கேள்வி கேட்டுட்டார். அதுவும் அவங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்த அறைக்கே சென்று காட்டுக் கூச்சல் எழுப்பியிருக்கார். அதுதான் விஷயம்... ஒரு தலித் எங்கள பார்த்து குறை சொல்லலாமான்னு ஈகோ பிச்சுகிச்சு. அதனால ஜாமீன் கூட கொடுக்காம ஓடி ஓடி, விரட்டி விரட்டி கைது செஞ்சாச்சு... இனி என்ன நடக்கும்? சிறையில் தள்ளுவார்கள்.
இது நீதித்துறையில் புரையோடி இருக்கும் சாதி மனோபாவத்தைக் காட்டுகிறது. 'நீ என்ன படிச்சு...எத்தன பெரிய ஆளாவும் இரு. ஆனா எங்கள எதிர்த்தா ஆண்டாண்டா நாங்க ஆண்டுகிட்டு வர்ற எங்க பவரைக் காண்பிப்போம்னு துரத்துறாங்க. இதன்மூலம் மற்ற தலித்துகளுக்கு 'கீப் கொயட்'ன்னு எச்சரிக்கை விடுக்குது...யாரு? உச்சநீதிமன்றம்.
பாரத நாட்டு கடைசி குடிமகனுக்கும் நீதி சொல்ற நீதித்துறையிலேயே இன்னும் நீதிபதிகள் இடஒதுக்கீட்டில் தலித்துகளுக்கு முழுமையா இடம் கொடுக்கல. தலித்துகளின் இடத்தை அபகரித்துதான் இன்னொரு உயர்சாதி நீதிபதி ஆணவமாக அமர்ந்திருக்கிறார்.
அண்மையில் நீதிபதியா இருந்த ஒரு அம்மா, தன் வீட்டுல ஒழுங்கா வேல செய்யலன்னு ஒரு கடைநிலை ஊழியருக்கு மெமோ கொடுத்து, அந்த கடிதம் இணையம் பூரா சுத்துனது நினைவிருக்கலாம். சாதி மனோபாவம் நீதித்துறையையும் விட்டு வைக்கல.
இந்தியா டுடே என்கிற பார்ப்பன பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஊழல் ஊறிய துறை எதுன்னு ஒரு சர்வே நடத்துச்சு. அப்போ அது வெளியிட்ட முடிவில் ஊழலில் ஊறிய துறையில் முதல் இடம் பிடிப்பது நீதித்துறை, இரண்டாவது பத்திரப்பதிவுத் துறைன்னு சொல்லுச்சு. அப்பவெல்லாம் வாயமுட்டிக் கிடந்தாங்க குறுக்கு நூல்கள். இப்போ ஒரு தலித் அதையே சொன்னதும் குதிக்கிறாங்க...
சாதிய மனோபாவத்தில் ஊறிபோனவர்கள் நீதிபதிகளாகவும் பிரதமர்களாகவும் மந்திரிகளாகவும் அதிகாரிகளாகவும் போலீசாகவும் இருக்கும் தேசத்தில் ஒரு தலித் ஜனாதிபதியால் இந்த தேசத்தை சாதியற்றதாக மாற்றிவிட முடியுமா கனவான்களே!

நான் உடைத்துக் கொண்டிருக்கிறேன்

on Wednesday, June 27, 2012
என் நடையை
என் சிரிப்பை
என் ரசனையை
என் அழுகையை
நீயே தீர்மானிக்கிறாய்

நீ கட்டமைத்திருக்கும்
குடுவைக்குள்
என்னை கட்டாயப்படுத்தி
நுழைக்கிறாய்

வாழ்கிறேன்
மூச்சுத்திணறல் உடன்

திணறும் என் மூச்சை
உணருவதே இல்லை நீ

வார்த்தைகளால்
செய்கைகளால்
கெஞ்சல்களால்
புரிய வைக்க முயன்றேன்

என் மூச்சுத் திணறலை
உணருவதே இல்லை
அழுத்தம் பொறுக்காது
நானே என் கைகளால்
என் செயல்களால்
போராடிப் போராடி குடுவையை
உடைக்க முயன்றுகொண்டிருக்கிறேன்

திணறல் இல்லா சுதந்திர வெளியில் நிற்கும்
நீ என்னை
உனக்குத் தெரிந்த கடும் வார்த்தைகளை
என்னை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறாய்

நான் உடைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வார்த்தைகளையும்
நீ கட்டமைத்த குடுவையையும்

இனி ஊருக்கு போக என்ன இருக்கு?

on Friday, June 22, 2012
என்னடி மருமகளே
என்று வாஞ்சையுடன்
அழைக்கும் அத்தைகள் இல்லை

ஏய் குந்தாணி
என்று வம்பிழுக்கும்
மாமன்கள் இல்லை

பள்ளிகூடமா போற
பாத்து போம்மா என்கிற
அக்கறை தாத்தாக்கள் இல்லை

இன்னும் பத்து நாள்ல சமைஞ்ச்சிடுவா போல இருக்கு
என்று ஆருடம் சொல்லும்
பாட்டிகள் இல்லை

எங்க வீட்டு மாடு கன்னு போட்டிருக்கு
என்று கண் விரிய சொல்லும்
பாவாடை சட்டைகள் இல்லை

அத்தைகள் எல்லாம்
நோக்கியா கம்பெனிக்கு போயிட்டாங்க
மாமாக்கள் எல்லாம் பட்டணத்து
ஓட்டல்களுக்குப் போயிட்டாங்க
தாத்தா, பாட்டி போயே போயிட்டாங்க

தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கு
வீடெல்லாம் பூட்டியே கிடக்கு
இனி ஊருக்கு போக என்ன இருக்கு?

இருந்தாலும்... இந்த கணம் நீ என் தோழமை

on Tuesday, June 19, 2012
என் இறுதி சடங்கில்
நீ பங்கு கொள்வாயா
என்று தெரியாது

என்னுடன் சுற்றித் திரிந்த
நினைவுகளை
என்னுடன் பேசித் திரிந்த
பொழுதுகளை
உன் பிள்ளைகளிடம்
சொல்லி மகிழ்வாயா
என்று தெரியாது

என்னுடன் பழகியதற்காகவும்
தோளோடு தோள் ஒன்றி
நடந்ததற்காகவும் பின்னாளில்
பெருமை கொள்வாயா
என்று தெரியாது

தாங்க முடியாத துயரின் போதேல்லாம்
என்னை நினைத்துக்கொள்வாயா
என்று தெரியாது


இருந்தாலும்
இந்த கணம் நீ என் தோழமை
நான் உன் தோழமை என்பது
மட்டுமே நிதர்சனமாய் விரிந்துகொண்டே......

வார்த்தைகள் அற்ற சூனியத்தில் நான்!

என் வார்த்தைகளை நீ
சுமந்துகொண்டே
அலைந்துகொண்டு இருக்கிறாய்

உண்ணும் போதும்
என் வார்த்தைகளையும் சேர்த்தே
மெல்லுகிராய்

உறங்கும்போதும் என் வார்த்தைகளை
அணைத்துக் கொண்டே சிரிக்கிறாய்
பல இரவுகளில் அழுகிறாய்

என் வார்த்தைகள் சிலசமயங்களில்
மிகவும் குளிர்ச்சியாய் இருந்திருக்கலாம்
பல சமயங்களில்
கொடும் தணலாய் தகித்து இருக்கலாம்

சில வார்த்தைகள்
சொல்லிப் சொல்லிப் பழக்கப்பட்ட
வார்த்தைகள் என்பதலாயே
அதன் வீரியம் தெரியாமல்
உன்னிடம் புழங்கி இருக்கிறேன்

பல வார்த்தைகளை
என்னை நிருபிப்பதற்காகவே
உன்னை நோக்கி வீசியிருக்கிறேன்
என் அத்தனை பலத்தையும் பிரயோகித்து

காயம் செய்த வார்த்தைகளுக்காக
மண்டியிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க
எத்தனிக்கையில்
வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறாய்
என் வார்த்தைகளை சுமந்தபடி

வார்த்தைகள் அற்ற சூனியத்தில் நான்!

கனவுகளை இழந்தபிறகு கண்கள் கூட எதற்கு?!

on Tuesday, May 8, 2012
என் கனவுகளை அம்மாவுக்காக விற்றேன்
கொஞ்சம் அப்பாவுக்காக இழந்தேன்
அண்ணனுக்காகவும் அக்காவுக்காகவும்
சமரசம் இன்றி கொஞ்சம் விற்றேன்
திருமணம் ஆனது
மாமியாருக்காக நிறைய கனவுகளை
நின்ற இடங்களில் எல்லாம்
தெரிந்தே இழந்தேன்
மாமனாருக்காகவும்
பல கனவுகளை எங்கோ தொலைத்தேன்
கணவர் கேட்டார் என அத்தனை கனவுகளையும்
மொத்தமாய் தொலைத்தேன்
கண்கள் சொல்லிவிட்டன
இனி கனவு காண்பதற்கு
எனக்கு உரிமை இல்லை என்று!
அட,
கனவுகளை இழந்தபிறகு கண்கள் கூட எதற்கு?!

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்

on Wednesday, March 14, 2012


தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

* இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களில் ஒருவர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாதம் ஒன்றுக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்கள் அனைவருமே 15-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* கடந்த ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 10982 பேரும் கேரளாவில் 11300 பேரும் கர்நாடகாவில் 10934 பேரும் ஆந்திராவில் 9433 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

* முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் மட்டும் நாள்தோறும் 32 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நமது நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வண்ணமயமான வாழ்விலிருந்து விடுபட்டு வெள்ளைத் துணியில் அடைக்கலம் தேடும் இவர்கள், தங்களின் வாழ்வை விட்டு ஒதுங்குவதற்கான காரணங்கள் என்னென்ன? ஒரு துண்டுக் கயிற்றிலோ,ஒரு துளி விஷத்திலோ இவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும்போது அவற்றுக்கான காரணத்தை நாம் அறியாமால் போவது ஏன்? அந்த மர்ம முடிச்சுதான் என்னவோ? தற்கொலைகள் நடைபெறுகின்றபோது அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய காவல் துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்டும் வேகம், பிறகு படிப்படியாகக் குறைந்து அந்த வழக்குகள் தூசு படிந்த கோப்புகளில் உறங்கிக் கிடப்பது ஏன்?

கடந்த 2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் 1.8 % 14 வயதுக்கும் கீழே உள்ள சிறுமியர்கள் ஆவர்.(இது சிறுவர்களின் விகிதத்தை விட அதிகமாகும்) 15 முதல் 30 வயது வரையுள்ளவர்களின் விழுக்காடு 25.7% ஆகும்.

பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களைக் குடும்பப் பிண்ணனி, சமூக சூழல் ஃஆகியவற்றை மையப் படுத்தி விவாதிக்க வேண்டியுள்ளது.

குடும்பம்

* தாய் தந்தையரின் அவசரகோல வாழ்க்கை 
* குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் இல்லாமை
* தவறு செயுதால் தன்னைப் பாதுகாக்க குடும்பத்தில் எவருமே இல்லை என்ற எண்ணம்
* எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்ற தாய்,தந்தை இருவரில் ஒருவரை மிக எளிதாக தனது ‘கைக்குள்’ போட்டுக் கொள்வதில் கிடைக்கின்ற வெற்றி.

நாகரிகச் சூழல்
* செல்பேசி கேமரா, இணையம் ஆகியவற்றின் தவறான பயன்பாடு
* போட்டி மனப்பாங்கு
* ஆடம்பர வாழ்வின் மீதான மோகம்
* தவறான ஆண்-பெண் உறவு
*பொருளாதார நெருக்கடிகள்

உளவியல் சார்ந்தவை
* உணர்ச்சிவசப்பட்டு நடுநிலை தவறுதல்
* பருவம் அடைகின்றபோது ஏற்படுகின்ற உளவியல் பிரச்சனைகள்
* தனிமை எண்ணம்
* அன்பு,காதல் ஆகியவை குறித்த தவறான புரிந்துணர்வு
* எதையும் சாமளிக்கின்ற திறமை இன்மை
* துக்கம், கவலை
உடல் சார்ந்தவை
* மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஹார்மோன்களின் காரணமாக உண்டாகும் வேதனை
* ஆரோக்கியமின்மை
*தீரா நோய்கள்
* அழகின்மை
அரசியல்-கல்வி சார்ந்தவை
* மாஃபியா ரவுடி கும்பலின் துணையுடன் நடைபெறுகின்ற விபச்சாரம்.
* விபச்சாரக் கும்பல்களுக்கு ஆதரவளிக்கும் பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கு
* ஊடகங்கள் தருகின்ற அதிகப் படியான முக்கியத்துவம்
* துன்புறுத்தப்படுதல்
* கல்வித் திட்டங்களில் ஒழுக்கப் பாடங்களை இணைக்காதது
* ஆரோக்கியமற்ற பள்ளிக்கூட சுற்றுப்புறம்
மொபைல் கேமராவில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி, வன் புணர்ச்சி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற முறையற்ற செயலகளில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்கள் அல்லர். இதன் பின்னணியில் பல விபச்சாரக் கும்பல்கள் உள்ளன.
மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி இந்தியாவில் 43000 கோடி ரூபாய் அளவுக்குப் பாலியல் தொழில் நடைபெறுகிறது. சுற்றுலா வளர்ச்சி எனும் பெயரில் அரங்கேற்றப்படுகின்ற செயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மஸாஜ் செண்டர்கள் என்னும் போர்வையிலும் அழகு நிலையங்களின் பின்னணியிலும் விபச்சாரக் கும்பல்கள் செயல்படுகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களைப் பாதுகாப்பது யார் தெரியுமா? அரசியல்வாதிகள்தாம். இவர்களின் செயல்களினால் சீரழிகின்ற பெண்கள் இறுதியாகத் தற்கொலை செய்து கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனை தடுக்க பள்ளி நிர்வாகம், பொற்றோர், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.விழிப்பு உணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். பெண்களின் கைப்பேசிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களையும் படங்களையும் அனுப்புகிற ஈனர்களைக் கண்டறிந்து கைது செய்யும் வசதியை செல்பேசி நிறுவனங்களே உருவாக்கித் தர வேண்டும். அத்தகையர்களின் சிம் கார்டுகளைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்களின் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருமுறை இவர்களின் வலையில் ஒரு பெண் சிக்கிவிட்டால் அதன் பாதிப்புகளை மனம் விட்டுப் பரிமாறிக் கொள்ள குடும்பத்திலோ பள்ளிக்கூடத்திலோ அவர்களுக்கு யாரும் இல்லை. பள்ளியிலேயே இதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஓர் ஆலோசனை மையத்தை நிறுவலாம்.
ஒழுக்கக் கல்வியை கல்வித் திட்டத்தில் இணைக்க வேண்டும். பாடத் திட்டத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மணவர்களின் செல்பேசி,கணினி, புத்தகங்கள் ஆகியவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கின்றோம் எனும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படாதவாறு இது அமைய வேண்டும் என் தற்கொலைத் தடுப்பு மைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தற்கொலைக்காஅன் எண்ணம் இறுக்கமான வாழ்க்கை முறையிலிருந்துதான் தொடங்குகின்றது.குறிப்பாக சமூகத்தில் பெருகி வருகின்ற ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து எல்லாமே தொடங்குகின்றது. உலகம் அடைந்து வருகின்ற முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்காமல் விலகி இருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அன்று. கைவிட்டுப் போன நன்மைகளைப் பற்றிய, அமைதியும் நிம்மதியும் தவழுகின்ற குடும்ப அமைப்பு குறித்த விழிப்பு உணர்வே இன்று நமக்கு தேவை.

நன்றி: சமரசம்
படம் கூகுள்