கட்டுரை

தற்கொலையில் தீர்வை தொலைக்கும் பெண்கள்

தென் இந்தியாவைத் தற்கொலைகளின் தலைநகரம் எனச் சொன்னால் அது மிகையல்ல.

* இந்தியாவில் 15 நிமிடங்களுக்கு 3 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்களில் ஒருவர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாதம் ஒன்றுக்கு 15 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அவர்கள் அனைவருமே 15-30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* கடந்த ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 10982 பேரும் கேரளாவில் 11300 பேரும் கர்நாடகாவில் 10934 பேரும் ஆந்திராவில் 9433 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

* முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் மட்டும் நாள்தோறும் 32 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நமது நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வண்ணமயமான வாழ்விலிருந்து விடுபட்டு வெள்ளைத் துணியில் அடைக்கலம் தேடும் இவர்கள், தங்களின் வாழ்வை விட்டு ஒதுங்குவதற்கான காரணங்கள் என்னென்ன? ஒரு துண்டுக் கயிற்றிலோ,ஒரு துளி விஷத்திலோ இவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும்போது அவற்றுக்கான காரணத்தை நாம் அறியாமால் போவது ஏன்? அந்த மர்ம முடிச்சுதான் என்னவோ? தற்கொலைகள் நடைபெறுகின்றபோது அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டிய காவல் துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் காட்டும் வேகம், பிறகு படிப்படியாகக் குறைந்து அந்த வழக்குகள் தூசு படிந்த கோப்புகளில் உறங்கிக் கிடப்பது ஏன்?

கடந்த 2007 ஆம் ஆண்டுக் கணக்கின்படி தற்கொலை செய்து கொள்பவர்களில் 1.8 % 14 வயதுக்கும் கீழே உள்ள சிறுமியர்கள் ஆவர்.(இது சிறுவர்களின் விகிதத்தை விட அதிகமாகும்) 15 முதல் 30 வயது வரையுள்ளவர்களின் விழுக்காடு 25.7% ஆகும்.

பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களைக் குடும்பப் பிண்ணனி, சமூக சூழல் ஃஆகியவற்றை மையப் படுத்தி விவாதிக்க வேண்டியுள்ளது.

குடும்பம்

தாய் தந்தையரின் அவசரகோல வாழ்க்கை 
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் இல்லாமை
* தவறு செயுதால் தன்னைப் பாதுகாக்க குடும்பத்தில் எவருமே இல்லை என்ற எண்ணம்
* எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்ற தாய்,தந்தை இருவரில் ஒருவரை மிக எளிதாக தனது ‘கைக்குள்’ போட்டுக் கொள்வதில் கிடைக்கின்ற வெற்றி.

நாகரிகச் சூழல்
* செல்பேசி கேமரா, இணையம் ஆகியவற்றின் தவறான பயன்பாடு
* போட்டி மனப்பாங்கு
* ஆடம்பர வாழ்வின் மீதான மோகம்
* தவறான ஆண்-பெண் உறவு
*பொருளாதார நெருக்கடிகள்

உளவியல் சார்ந்தவை
* உணர்ச்சிவசப்பட்டு நடுநிலை தவறுதல்
* பருவம் அடைகின்றபோது ஏற்படுகின்ற உளவியல் பிரச்சனைகள்
* தனிமை எண்ணம்
* அன்பு,காதல் ஆகியவை குறித்த தவறான புரிந்துணர்வு
* எதையும் சாமளிக்கின்ற திறமை இன்மை
* துக்கம், கவலை
உடல் சார்ந்தவை
* மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு ஹார்மோன்களின் காரணமாக உண்டாகும் வேதனை
* ஆரோக்கியமின்மை
*தீரா நோய்கள்
* அழகின்மை
அரசியல்-கல்வி சார்ந்தவை
* மாஃபியா ரவுடி கும்பலின் துணையுடன் நடைபெறுகின்ற விபச்சாரம்.
* விபச்சாரக் கும்பல்களுக்கு ஆதரவளிக்கும் பிரமுகர்களின் அரசியல் செல்வாக்கு
* ஊடகங்கள் தருகின்ற அதிகப் படியான முக்கியத்துவம்
* துன்புறுத்தப்படுதல்
* கல்வித் திட்டங்களில் ஒழுக்கப் பாடங்களை இணைக்காதது
* ஆரோக்கியமற்ற பள்ளிக்கூட சுற்றுப்புறம்
மொபைல் கேமராவில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து, மிரட்டி, வன் புணர்ச்சி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற முறையற்ற செயலகளில் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்கள் அல்லர். இதன் பின்னணியில் பல விபச்சாரக் கும்பல்கள் உள்ளன.
மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி இந்தியாவில் 43000 கோடி ரூபாய் அளவுக்குப் பாலியல் தொழில் நடைபெறுகிறது. சுற்றுலா வளர்ச்சி எனும் பெயரில் அரங்கேற்றப்படுகின்ற செயல்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மஸாஜ் செண்டர்கள் என்னும் போர்வையிலும் அழகு நிலையங்களின் பின்னணியிலும் விபச்சாரக் கும்பல்கள் செயல்படுகின்றன. இந்தச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களைப் பாதுகாப்பது யார் தெரியுமா? அரசியல்வாதிகள்தாம். இவர்களின் செயல்களினால் சீரழிகின்ற பெண்கள் இறுதியாகத் தற்கொலை செய்து கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனை தடுக்க பள்ளி நிர்வாகம், பொற்றோர், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.விழிப்பு உணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். பெண்களின் கைப்பேசிகளுக்கு ஆபாசக் குறுந்தகவல்களையும் படங்களையும் அனுப்புகிற ஈனர்களைக் கண்டறிந்து கைது செய்யும் வசதியை செல்பேசி நிறுவனங்களே உருவாக்கித் தர வேண்டும். அத்தகையர்களின் சிம் கார்டுகளைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த நிறுவனங்களின் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருமுறை இவர்களின் வலையில் ஒரு பெண் சிக்கிவிட்டால் அதன் பாதிப்புகளை மனம் விட்டுப் பரிமாறிக் கொள்ள குடும்பத்திலோ பள்ளிக்கூடத்திலோ அவர்களுக்கு யாரும் இல்லை. பள்ளியிலேயே இதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஓர் ஆலோசனை மையத்தை நிறுவலாம்.
ஒழுக்கக் கல்வியை கல்வித் திட்டத்தில் இணைக்க வேண்டும். பாடத் திட்டத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மணவர்களின் செல்பேசி,கணினி, புத்தகங்கள் ஆகியவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிக்கின்றோம் எனும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படாதவாறு இது அமைய வேண்டும் என் தற்கொலைத் தடுப்பு மைய நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தற்கொலைக்காஅன் எண்ணம் இறுக்கமான வாழ்க்கை முறையிலிருந்துதான் தொடங்குகின்றது.குறிப்பாக சமூகத்தில் பெருகி வருகின்ற ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து எல்லாமே தொடங்குகின்றது. உலகம் அடைந்து வருகின்ற முன்னேற்றத்தின் பலனை அனுபவிக்காமல் விலகி இருக்க வேண்டும் என்பது இதன் பொருள் அன்று. கைவிட்டுப் போன நன்மைகளைப் பற்றிய, அமைதியும் நிம்மதியும் தவழுகின்ற குடும்ப அமைப்பு குறித்த விழிப்பு உணர்வே இன்று நமக்கு தேவை.

நன்றி: சமரசம்
படம் கூகுள்
அம்மா,அப்பா,டீச்சர்... குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள் !


தொகுப்பு: நாச்சியாள்
அவள் விகடன் டீம்

சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு... உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்... இதையெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்துவிட்டால் போதும்... குழந்தைகளை நாம் நல்லபடியாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. ஆனால்...
'அந்த பிஞ்சு மனதில் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைத் தாண்டி... என்னென்ன ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன?
அம்மா, அப்பாவிடம் குழந்தைகள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்?
ஸ்கூலில் டீச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்?
அம்மா, அப்பா, டீச்சர் பற்றியெல்லாம் அவர்களுடைய மனதில் படிந்திருக்கும் அபிப்பிராயங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்னென்ன?’
- இப்படிப்பட்ட கேள்விகளை எப்போதாவது அவர்களிடம் எழுப்பியிருக்கிறோமா என்று கேட்டால்... பெரும்பாலான பெற்றோரின் பதில்... 'இல்லை' என்பதாகத்தான் இருக்கிறது இங்கு!
ஆனால், இனியும்கூட இத்தகைய கேள்விகளை எழுப்பி நாம் விடை காணாவிட்டால், நாளைய தலைமுறையைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் அனைத்துமே தூள் தூளாகிவிடும் என்று எச்சரிக்கிறது... பிஞ்சுக் குழந்தைகளிடம் 'அவள் விகடன்' நடத்திய ஸ்பெஷல் சர்வே!
சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்கள்; பழனி, கரூர், திருவண்ணாமலை, கோவில்பட்டி, உசிலம்பட்டி போன்ற நகரங்கள்; மண்மாரி, கீழ்நாச்சிப்பட்டு, வில்லிசேரி, தொட்டப்பநாயக்கனூர், சாமிநாதபுரம் போன்ற சிற்றூர்கள்... இங்கெல்லாம் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் 2,673 மாணவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரான 11 கேள்விகள் அடங்கிய தாளைக் கொடுத்து, அவற்றைப் படித்துச் சொல்லி 'அப்ஜெக்டிவ்' டைப்பில் அதை பூர்த்தி செய்ய வைத்தோம். சர்வே பேப்பரை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டுவராமல், குழந்தைகளிடம் நெஞ்சுக்கு நெருக்கமாக பேசிப்பேசி... பற்பல  தகவல்களையும் பெற்று வந்துள்ளனர் இப்பணியை முன்னின்று செய்த... விகடன் மாணவ பத்திரிகையாளர்கள். குழந்தைகளின் மனதை முழுமையாகப் புரிந்துகொள்ள, தாய்மை நிரம்பிய அக்கறையுடன் அந்த முடிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுஉள்ளன.
எல்லாக் குழந்தைகளும்... அம்மா மீது அதீதப் பாசத்துடனும் அன்புடனும் இருப்பதால், ''அம்மாவை மிகவும் பிடித்திருக்கிறது'' என்று சொல்லியுள்ளன. ஆனால், அம்மாவின் வகைவகையான சமையலும், வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளும்... அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். மாநகரம், நகரம், சிற்றூர் என எந்தக் குழந்தைகளும் இதில் வேறுபடவில்லை.
குழந்தைகள் அப்பாவிடம் அதிக அன்பை எதிர்பார்க்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. 'அப்பா அவ்வப்போது பார்க், பீச், சினிமா, கோயில் என்று எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்' என்பதை பெரும்பாலும் வலியுறுத்தியிருக்கின்றன குழந்தைகள்.
'அப்பாவிடம் பிடிக்காத விஷயம்..?' என்ற கேள்விக்கு 'அம்மாவிடம் சண்டை போடுவது', 'அம்மாவைத் திட்டுவது', 'சிகரெட், குடி என்று அப்பாவிடம் இருக்கும் தவறான பழக்க வழக்கங்கள்' என்று பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டிருக்கின்றன.
இந்த சர்வே முடிவுகளையெல்லாம் எடுத்து வைத்து, ''குழந்தைகளின் இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் எதனை உணர்த்துகின்றன?'' என்று மனநல ஆலோசகர் டாக்டர் ராஜ்மோகன் மற்றும் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பியபோது... அவர்கள் தந்த பதில்கள்...
''வேலைப்பளு, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சமூக நிர்ப்பந்தம் காரணமாக அப்பாக்கள் வேலை மற்றும் தொழில் சார்ந்து வீட்டுக்கு வெளியிலேயே அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதனால்தான் இன்றைய தலைமுறைக் குழந்தைகள், 'வெளியே போகும்போதாவது அதிக நேரம் அப்பா நம்முடன் இருப்பார்' என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதிக நேரத்தை குழந்தையுடன் செலவிட முடியாத அப்பா, அதை ஈடு செய்கிறேன் பேர்வழி என்று நிறைய பொம்மைகள் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். 'குவாலிட்டி' நேரத்தை செலவிட முடியாவிட்டால், அதனை பொருளாகக் கொடுத்து குழந்தையையும் பொருள்சார்ந்த வாழ்க்கைக்குள் இழுக்கிறார் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. எவ்வளவு  நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதைவிட, எப்படி செலவிடுகிறீர்கள் என்பதும்  முக்கியம். வீட்டில் காலையில் ஒரு மணிநேரம் இருக்கிறீர்கள் என்றால்... அதில் குழந்தைக்கு என்று சிலநிமிடங்களை செலவிடுங்கள் என்கிற படிப்பினையைத்தான் சொல்கிறது, உங்கள் சர்வே முடிவுகள்'' என்று அக்கறையுடன் சொன்னார் ராஜ்மோகன்.
''இன்று பெரும்பான்மையான மத்தியதரக் குடும்பங்களில் வீட்டு லோன், டூ-வீலர் லோன், கார் லோன் என்று பலதரப்பட்ட லோன்களை வாங்கி வைத்துள்ளனர். அதையெல்லாம் அடைப்பதற்காக, எப்போதும் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார் அப்பா. இத்தகைய பொருளாதாரம் சார்ந்த சுமைகள் அதிகமிருப்பதால்... குடும்ப உறவுகளுக்குள் சிக்கல் இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. மாறிவரும் கலாசார பொருளாதாரச் சூழலையும் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்வது போல் இருக்கிறது இந்த சர்வே முடிவுகள்'' என்றார் ஜெயந்தினி.
''முதல் காரணம், பொருளாதாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கார், வீடு என்று அதிகம் சம்பாதிக்க ஓடும்போது... குழந்தை, மனைவி என நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படுகிறது. அது சண்டையாக வெடிக்கிறது. தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம்'' என்று கூடுதல் விளக்கம் தந்தார் ராஜ்மோகன்.
'அம்மாவிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?' என்ற கேள்விக்கு 'வெளியில்  விளையாட அனுமதிக்காததுதான்' என்று சிற்றூர் குழந்தைகளும்... 'டி.வி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அனுமதிப்பது இல்லை' என்று நகர்ப்புறக் குழந்தைகளும் கூறியுள்ளன.
 
''விளையாட்டு என்பது, பெற்றோரைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அலட்சியமான விஷயம் ஆகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. நகர்ப்புறக் குழந்தைகள் டி.வி, வீடியோ கேம்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. வெளியே சென்று விளையாடுவதற்கு இடம் இல்லாததாலும், பெரும்பாலும் ஒற்றைக் குழந்தைகளே இருப்பதாலும் நகர்புறத்தில் வாழும் குழந்தைகள் மனதளவில் இப்படி தயாராகிவிடுகின்றன. ஆனால், சிற்றூர்களில் வாழும் குழந்தைக்கு வாய்ப்பு இருந்தும்... படிப்பு, பாதுகாப்பு போன்ற காரணங்களால் விளையாட அனுமதி கிடைப்பதில்லை. விளையாடும் குழந்தைக்குத்தான் உடல், மனம் வலிமையாக இருக்கும்; விளையாட்டு புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் ஜெயந்தினி.
டீச்சர்கள் நட்புடன் இருப்பதையும், தாங்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்துவதையுமே 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் விரும்புகின்றன. தண்டனை தருவது, போர் அடிப்பது போல் பாடம் நடத்துவது ஆகியவற்றை பிடிக்காத விஷயங்களாகவும் குழந்தைகள் வரிசைப்படுத்தியுள்ளன.
''நட்புடன் சிரிக்கும் டீச்சரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அத்தகைய ஆசிரியர் நடத்தும் பாடத்தைத்தான் விரும்பிப் படிக்கின்றன குழந்தைகள். இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஆசிரியருக்கு கிடைக்கும் தகவல்கள், இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்கூட்டியே மாணவனுக்கும் கிடைத்துவிடுகிறது என்பதையும் ஆசிரியர்கள் உணர வேண்டும்.
ஒரு விதை எப்படி வளர்கிறது என்பதை கையில் விதையைக் கொடுத்து, மண்ணில் போட்டு வளர், செம்மண்ணில் வைத்து வெயிலில் படும்படி வை என்றெல்லாம் பிராக்டிகலாக சொல்லிக் கொடுப்பதற்கும், 'விதை வளர்வதற்கு சூரிய ஒளி, தண்ணீர், மண் வேண்டும்' என்று வாசித்து மனப்பாடம் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் ஜெயந்தினி.
குழந்தைகளின் மனங்களைக் குடைந்து, உள்ளே குடிகொண்டிருக்கும் குமுறல்களை இங்கே கொட்டிவிட்டோம். தீர்வு காண வேண்டியது... பெற்றோரும்... ஆசிரியர்களும்தான்!

எட்டு சவால்கள்....எதிர்கொள்ளும் வழி !



நாச்சியாள்
படம்: வீ.நாகமணி
உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.
'இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை  இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யா ஆகியோரிடம் முன் வைத்து பேசினோம். இருவரும் வரிசைப்படுத்திய எட்டு சவால்கள், இங்கே... பெற்றோர்களின் கவனத்துக்காக இடம் பிடிக்கின்றன.
1. தனிமை: 'நோபல்’ பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், 'ஒரு காலத்தில் நியாயத்தைக் கருதி உருவாக்கி வைக்கப்பட்ட உறவுகள், இன்று லாபம் கருதும் உறவுகளாக சுருங்கிவிட்டன’ என்று வேதனையுடன் சொல்லியுள்ளார். இன்றைய குழந்தை, தான் யாருடன் விளையாடுவது என்று தீர்மானிப்பதில்கூட லாபம், சுயநலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 'இன்னாருடன் சேர்ந்து விளையாடினால்தான் என் குழந்தை நல்லவனாக வளருவன்’ என்ற கற்பிதத்தில் ஒவ்வொரு குழந்தையின் நட்பு வட்டமும் பெற்றோர்களால் கண்காணிக்கப்படுகிறது, சுருக்கப்படுகிறது.
பல வீடுகளில் சி.டி-க்களும் கார்ட்டூன்களுமே குழந்தைகளின் தோழமை ஆகின்றன. இப்படித் தனிமையில் வளரும் குழந்தைகள், எப்படி சோஷியலைஸ்டாக வளர முடியும்? எனவே, நண்பர்கள், உறவினர்கள் என சமூகத்திடம் பழகவிட்டு  வளர்த்தெடுங்கள் குழந்தைகளை.
2. மலையேறிப்போன விளையாட்டுப் பொழுதுகள்: குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடிய காரணத்தால்... சாதிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன. ஆனால், இன்று ஓர் குழந்தை குழுவாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதைவிட, அந்தக் குழந்தை விளையாடுவதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. 'விளையாடுற நேரம் அந்த கணக்கைப் போட்டுப் பாரு’ என்பது போன்ற பெற்றோர்களின் சுயநலம் சார்ந்த தவறான புரிதலால், குழந்தைகளால் தங்கள் இயல்புக்குரிய விளையாட்டை அனுபவிக்க முடிவதில்லை.
பாரதி சொன்ன 'ஓடி விளையாடு பாப்பா’வை தான் மருத்துவர்களும் சொல்கிறார்கள். உடல், மன ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தை வளர, அடுத்த முறை... 'விளையாடச் செல்கிறேன்' என்று கேட்டால், மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள்.
3. முதலீடாகும் குழந்தைகள்: 'உனக்கு நான் எல்.கே.ஜி-க்கு பத்தாயிரம் செலவு செய்தேன், ஐந்தாம் வகுப்புக்கு 20 ஆயிரம் செலவு செய்தேன், எட்டாம் வகுப்புக்கு 30 ஆயிரம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றே பெரும்பாலான பெற்றோரும், குழந்தைக்காக செய்யும் கடமை என்பதை உருமாற்றி... குழந்தை மேல் செய்திருக்கும் முதலீடு என்கிற எண்ணத்தை குழந்தையின் மனதில் விதைக்கிறார்கள்; அந்தக் குழந்தைக்கு... முதலீட்டுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள். இந்த இன்வெஸ்ட்மென்டை மதிப்புமிக்க பொருளாக மாற்றுவது போல்தான் கொடுக்கப்படுகின்றன 'எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸ்’ என்கிற நடனம், இசை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு கிளாஸ் போன்றவை. அன்பை முதலீடு செய்யுங்கள் குழந்தை மேல்... பதில் அன்பு கிடைக்கும்!
4. பெரிய மனுஷத்தனம்: குழந்தையின் திறமை, அறிவு ஆகியவற்றை, அது வாங்கும் மார்க்கை வைத்தே மதிப்பிடுகிறார்கள் வீடு மற்றும் பள்ளியில். அதாவது குழந்தையின் பெர்ஃபார்மென்ஸை வைத்தே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் நாம்தான் 'நம்பர் ஒன்’னாக இருக்க வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கும்போது, அதன் வயதுக்கும் இயல்புக்கும் மீறிய அறிவைத் தேடி அலைகின்றன. அதனால்தான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை மூன்றாம்  வகுப்புப் படிக்கும் குழந்தை போல் பெரிய மனுஷத்தனமாகப் பேசுகிறது. இந்த பெரிய மனுஷத்தனம் சில சமயங்களில் வன்முறையாக உருவெடுக்கிறது. 'எம்பொண்ணு பெரிய மனுஷி மாதிரி பேசுவா..!’ என்று பெருமைப்படும் பெற்றோர், ஒரு கணம் நிறுத்தி சிந்தியுங்கள்.
5. வடிகட்டப்படாத செய்திகள்: வரவேற்பறையில் டி.வி, படுக்கை அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போனில் செய்தி எனத் தகவல் தொடர்பு சாதனங்கள் நொடிக்கு நொடி பல்லாயிரம் செய்திகளை கொட்டிக் கொண்டே இருக்கின்றன. பெரியவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு சங்கிலியில், பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் விஷயங்களே அதிகம் கிடைக்கின்றன. ஒரு குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தகவல்கள் அனைத்தும் அந்தக் குழந்தையையும் சென்று சேர்கின்றன. சீரியலில் வரும் இரண்டாம் தாரம் பற்றிய கதை, ஒரு மூன்றாம் வகுப்புச் சிறுமிக்கு எதற்குத் தேவை என்பது பற்றி யோசிப்பதில்லை. அதனால் ஒரு குழந்தை தன் வயதுக்கும், மனதுக்கும் தேவைஇல்லாத விஷயங்களைக் கற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தையின் அன்பான, பண்பான இயல்புகள் நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்படுகின்றன. மீடியாக்களுக்கு தணிக்கை கொண்டு வருவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கும் என்று காத்திருக்காமல், முடிந்தவரை முடக்கிப் போடுங்கள் தொலைக்காட்சிகளை.
6. ஒப்பீடு: 'நீ மட்டும் இந்த வருஷம் ஒழுங்கா பரீட்சை எழுதி, ஃபர்ஸ்ட் குரூப் வாங்கலேனா... உன் லைஃபே அவ்வளவுதான்’ என்பது போன்ற உணர்வுப்பூர்வமான தாக்குதலை எதிர்கொள்ளாத குழந்தைகளே இன்று இல்லை. 'பக்கத்து வீட்டு சுரேஷ் மேத்ஸ்ல சென்டம் வாங்கியிருக்கான். நீ இன்னும் 80 மார்க்லயே நில்லு’, 'சுனிதா என்ன அழகா டான்ஸ் ஆடுறா... நீயும்தான் இருக்கியே’ என்பது போன்ற ஒப்பீட்டுத் தாக்குதலுக்கு ஆளாகாத குழந்தைகள் யார் இருக்கிறார்கள்? வீட்டுக்கு வீடு நடக்கும் இந்தத் தாக்குதல் மனதளவில் ஓர் குழந்தையை நிறையவே காயப்படுத்துகிறது. 'நாம் எதற்குமே லாயக்கு இல்லையோ’ என்ற தாழ்வு மனப்பான்மையையும், 'அவனால்தான இந்தத் திட்டு’ என்கிற பொறாமை மனப்பான்மையையும் வளர்க்கிறது. இது நாளடைவில் வன்முறைக்கு வழி செய்யும். ஒப்பீட்டுத் தாக்குதல் குழந்தைகளை எந்தளவுக்கு பாதை மாற்றுகிறது என்பதை உணருங்கள்.
7. மாறிவரும் கலாசாரம் - உணவு: தொழில்நுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கத்தாலும் பூமி பந்து சிறு உருண்டையாகிவிட்டது. நூடுல்ஸ், உலகக் குழந்தைகளின் உணவாகிவிட்டது. சர்வதேச பிராண்ட் நொறுக்குத் தீனிகள், ஹோட்டல்ஸ், கூல்டிரிங்ஸ் என உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் வந்துவிட்டது. நம் சீதோஷண நிலைக்குப் பொருத்தம் இல்லாத உணவு, அதிக கலோரி கொண்ட உணவு, அந்த அதிக கலோரியை வெளியேற்ற வழி இல்லாத வாழ்க்கை முறை என பல்வேறு காரணங்களால் சிறு குழந்தைக்கும் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, ரத்த அழுத்தம் என படுத்துகிறது. அதே நேரம், 'சத்துக் குறைபாடு தேச அவமானம்’ என பிரதமரே சொல்லும் நிலை. குழந்தைகளின் உணவையும் ஆரோக்கியத்தையும் பொருத்தத் தெரிந்தவர்களே... சிறந்த பெற்றோர்.
8. பாதுகாப்பு: சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தூரம், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் தனித்து இருக்கும் குழந்தைகள் என பல்வேறு காரணங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் தனித்து இருக்கும் குழந்தைகளிடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், சீண்டல்களும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. இதனை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறுப்பினர்களாக இருப்பதால், அது சரியா... தவறா என்ற குழப்ப மனநிலைமையில் இருப்பது குழந்தைகளின் பெரும் பெரும் சவலாக இருக்கிறது.
வளரும் சூழ்நிலையும், மீடியாவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்குப் பாலுறவு குறித்து பல தவறான புரிதல்களை கற்பித்து உள்ளன. இதனால், பள்ளிக் குழந்தைகளிடம் கூட கர்ப்பக்கலைப்பு நடந்துள்ளது என்கிற அதிர்ச்சிகரமன தகவல்கள் வெளியாகி உள்ளன. 'குட் டச்... பேட் டச்’ என ஐந்து வயதில் இருந்தே கற்றுக்கொடுங்கள் தற்காப்பு விஷயங்களை.
''ஒரு கலாசார - பொருளாதார - சமூக மாற்றத்தில் பாஸிட்டிவ் ஆன விஷயங்களும், நெகட்டிவான விஷயங்களும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த பாஸிட்டிவ் - நெகட்டிவ் விஷயங்களில் எது தேவை, தேவையில்லை என்பதில் முதலில் பெற்றோர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் மட்டுமே குழந்தைகள் குழந்தைகளாக வளர முடியும். அதற்கு, குழந்தைகளுடன் உரையாட வேண்டும்!'' என்கிறார் நடராசன் நெத்தியடியாக!
ஆம்... குழந்தைகளுடனான பெற்றோர்களின் குவாலிட்டி நேரங்களே இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை, வழிகாட்டலை அவர்களுக்கு வழங்கும்!

''உடையில் இல்லை குறை... மனதில் இருக்கிறது கறை!''



நாச்சியாள்
படங்கள்: கே.கார்த்திகேயன், வி.செந்தில்குமார்

ஆடை என்பது நாகரிகத்தின் வளர்ச்சி. ஒரு நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் முதல் குறியீடு... ஆடைதான்! ஆனால், 'அந்த ஆடையே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்துவதற்கு காரணம்' என்கிற கருத்து, படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லா தரப்பு மக்களிடமும் இருக்கிறது. அதன் உட்சபட்ச வெளிப்பாடாகத்தான், 'பெண்கள் உடம்பு தெரியற மாதிரி டிரெஸ்  பண்றதாலதான், அதிகமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்குது’ என்று அண்மையில் கருத்து தெரிவித்து இருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் சி.சி.பட்டீல் (சட்டசபையில் செல்போன் மூலமாக நிர்வாணப் படம் பார்த்து, பதவியை பறி கொடுத்தவர்).
''சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் புரையோடிப் போயிருக்கும் இந்த எண்ணத்துக்கும்... உண்மை நிலைக்கும்... தொடர்பு உண்டா?'' என சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிலரிடம் கேட்டோம்.
'இந்தியன் ஐ.ஏ.எஸ். அகாடமியின்’ நிறுவனர் சுஜாதா, ''இன்றைக்கு நாம் உடுத்துகிற ஆறு முழ சேலை... 16 கஜம், 8 கஜம் எனப் பல நிலைகளைத் தாண்டி வந்தது. 1940-களில் வந்த படங்களைப் பார்த்தால்... தமிழ்நாட்டுப் பெண்கள்கூட தலையில் முக்காடு போட்டு இருப்பார்கள். அதற்காக அன்று பெண்கள் மேல் வன்முறை நிகழவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ஆண்கள் தங்கள் அதிகார மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், தங்களின் தனி மனித ஒழுக்க மீறலை நியாயப்படுத்தவும் சொல்கிற சப்பைக் கட்டு இது'' என்று ஒளிந்திருக்கும் உண்மையை, ஆவேசத்துடன் சொன்னவர், தொடர்ந்தார்...
''ஓர் ஆண் குழந்தைக்கு, அவன் வளரும் குடும்பச் சூழலும், சுற்றுப்புறமும், கல்விச் சாலையும், மீடியாவும் ஒரு பெண்ணைப் பற்றி என்னவிதமான மதிப்பீடுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே, ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவனின் மதிப்பீடு அமையும். சேலை கட்டுகிற பெண் கவர்ச்சியாக இல்லை, பேன்ட் - ஷர்ட் போடுகிற பெண் கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது... பார்க்கிறவனின் மனநிலையைப் பொறுத்தது. ஒரு பெண்ணிடம் கவர்ச்சியை மட்டும் தேடும் ஆணுக்கு, அவள் முழுக்க முழுக்கப் போர்த்திக் கொண்டு இருந்தாலும் அது கவர்ச்சியாகத்தான் தெரியும். அந்த எண்ணம்தான் பாலியல் பலாத்காரத்துக்கும், வன்முறைக்கும் தூண்டுமே தவிர... ஒரு பெண் தன் உடல் தெரியும்படி உடுத்துவது பலாத்காரத்துக்குக் காரணமென்று சொல்வது அழுகிப்போன மனதின் வெளிப்பாடு'' என்று வார்த்தையில் வாள் வீசினார் சுஜாதா.
இதே கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தை தன்னுடைய குரலில் சொன்னார் எம்.சி.ஏ. மாணவர் ராஜா. ''ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மை. ஒரு பெண் உடுத்துகிற உடையை வைத்துதான் அவளின் குணத்தையே பெரும்பாலானவர்கள் முடிவு செய்கிறோம். உடலின் பெரும்பகுதி தெரியும்படி ஒரு பெண் வரும்போது, அவளைப் பார்த்தால் உள்ளுக்குள் எரிச்சல் கலந்த கோபம் வரும். ஆனால், 'அவள் இப்படி மோசமாக ஆடை உடுத்தி வருகிறாளே... அதற்காக அவளை பலாத்காரம் செய்தால் என்ன?’ என்கிற கேவலமான சிந்தனை வராது. காரணம், ஆண்களுக்குள்ளும் ஒழுக்கம், சுயகட்டுப்பாடு இருக்கிறது'' என்றார் உரத்த குரலில்.
''ஒரு பெண் தன் உடல் பாகங்கள் தெரியும்படி உடை உடுத்தி வரும்போது, ஒரு ஆண் கிளர்ச்சி அடைவான்'' என்கிறார் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.
''ஒரு பெண் கவர்ச்சியாக உடை உடுத்தி வரும்போது அதனைப் பார்க்கும் ஆணின் 'லிம்பிக் சிஸ்டம்’ அவனுடைய உணர்ச்சியைத் தூண்டும்; இது இயற்கையான விஷயம். ஆனால், அப்படி உண்டாகும் கிளர்ச்சியை அவன் சிறுமூளை, 'டேய்... ஏதும் ஏடாகூடமா யோசிக்காதே’ என்று கட்டுப்படுத்தும். மூளையின் கட்டுப்பாடும், தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கத்தில் சிறந்தவனும் உடனே அதைக் கட்டுப்படுத்துகிறான். அதற்கேற்றாற்போல் அதுவும் சில நொடிகளில் தோன்றி மறைந்து போகிற உணர்வுதான்'' என்று அழகாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தவர்,
''குடிபோதையில் இருக்கும் ஆணின் சிறுமூளை கட்டுப்பாட்டை இழந்து இருக்கும். அதேபோல பணத்தாலும், அதிகாரத்தாலும், சுயக்கட்டுப்பாட்டை இழந்தவர்கள்தான் பலாத்காரம் வரை செல்கிறார்கள் என்பதைத்தான் தினம் தினம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன'' என்று ஆண் உலகின் மனதை குறுக்கே வெட்டிக் காட்டினார் லட்சுமி.
இதே சாட்டையை தானும் விளாசினார் சமூக ஆர்வலர், பேராசிரியை சரஸ்வதி. ''இந்தக் கருத்து, முழுக்க முழுக்க ஆணாதிக்க வக்ர சிந்தனை. 56 வயதான பள்ளி ஆசிரியர், 6 வயது பெண் குழந்தையை பாலியல் வக்கிரத்துக்குள்ளாக்கி இருக்கிறார். அதற்குக் காரணம் அந்த குழந்தை உடுத்திய ஆடை என்று சொன்னால் அது எத்தனை அபத்தமானது? பெண்ணைப் போகப் பொருளாகவும், அடிமை களாகவும் சிந்திக்கிற ஆண், இப்படித்தான் தன்னை நியாயப்படுத்திக் கொள்வான். 'பெண் சமத்துவம் - ஆண் கண்ணியம்’ என்ற அறநெறியில், சமூக ஒழுக்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் சப்பைக்கட்டு. பெண் உடுத்துகிற உடையில் இல்லை குறை; அது ஆணின் மனதில் உள்ள குறை. அந்தக் குறையை சரி செய்யும் கல்வி... ஒரு ஆணுக்கு வீடு, கல்விக்கூடம் இரண்டிலும் சரிவர கிடைத்தால் பெண் எப்போதும் பாதுகாப்பாகவே இருப்பாள்; தலை நிமிர்ந்து நடப்பாள்'' என்றார் சரஸ்வதி முத்தாய்ப்பாக.
மனதுக்கும் ஆடை அணிவிப்போம்!

thanks to AVAL VIKATAN




வணக்கம் போராளிகளே !



நாச்சியாள்
வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் பெருமையும் ஆளுமையும் பதிவு செய்யப்படுவது இயல்பு. ஆனால், சில பெண்கள்... உலக வரலாறாகவும், உலகையே மாற்றிய வரலாறாகவும் வாழ்வதுதான் சுற்றும் பூமியின் வரம். ஆச்சர்யக்குறிகளாகவும், தீரமிக்க போராளிகளாகவும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில ஆளுமைகளின் போராட்டப் பக்கங்களில் சில படபடக்கின்றன இங்கே!
பிரச்னை அல்ல... தீர்வு நாங்கள்!
பெண்கள் மீது அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாடு. அங்கே முப்பது வயதைக் கடந்தவர், மூன்று குழந்தைகளின் தாயான டவாக்கல் கார்மன். கையில் அரசியல் அதிகாரம் எதுவுமில்லை, ஒரு சாதாரண பத்திரிகையாளர். ஆனால், அதன் மூலமே பெண் பத்திரிகையாளர்களை ஒன்று திரட்டி, இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
'முஸ்லிம் பெண், பர்தா அணியாமல் பொது இடத்தில் நடக்கலாமா?’ என்று மதப்பெரியவர்கள் கண்டித்தபோது... 'பர்தா அணிவது என்பது கலாசார ரீதியானது; இஸ்லாம் அதைக் எங்கும் கட்டாயப்படுத்தவில்லை’ என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.
'பெண்கள் நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டுள்ளோம்; நாம் யாருடைய ஒப்புதலுக்கும் அனுமதிக்கும் காத்திராமல், எழுந்து நின்று போராடுவதன் மூலம்தான் நம் பலத்தை நிரூபிக்க முடியும்’ என்று அறிவுப்பூர்வமாக பெண்களையும் நாட்டையும் சிந்திக்கத் தூண்டினார்.
இதற்காக... மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள், நாடு கடத்தல்கள் என்று தொடர் துன்பத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்தாலும்... போராடிக் கொண்டே இருக்கிறார் டவாக்கல் கார்மன்...  முன்னிலும் அதிகமான நெஞ்சுரத்துடன்!
 அகிம்சை ஆயுதம் மலர்த்திய மாற்றம்!
கணவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரை அரவணைத்து நோயிலிருந்து மீட்டு எடுக்க மனம்  போராடுகிறது. ஒரு கணம் யோசிக்கிறார் அவர்... 'இப்போது  நாட்டை விட்டு வெளியேறினால், நான் எப்போதும் என் நாட்டுக்குத் திரும்பி வராதபடி ராணுவ  ஆட்சியாளர்கள் செய்துவிட்டால்..? ’ என்று தீர்க்கமாக முடிவெடுத்து, கணவனின் மரணத்தின்போதும் வீட்டுச் சிறையிலேயே இருந்தார். பிள்ளைகளைப் பிரிந்து வாழும் துயரத்தையும் தாங்கினார். அவர்... மியான்மர் போராளி ஆங் சாங் சூகி!
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதால், 1988-ல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர், 1990-ல் பொதுத்தேர்தல் போட்டியிட்டு பெரும்பான்மையாக வெற்றிபெற்றார். ஆனாலும், ஆட்சி அமைக்கவிடாமல், மறுபடியும் வீட்டுச் சிறையில் தள்ளியது கொடுங்கோல் ராணுவம். உலக நாடுகளின் நெருக்கடி அதிகமாகவே, நவம்பர் 2010-ல் விடுதலையானார். நாட்டுக்காக வாழ்க்கை முழுக்க தியாகம் செய்த சூகிக்கு... 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப்பட்டிருக்கிறது. வரும் ஏப்ரலில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட தெம்போடு தயாராகி வருகிறார்.
ஃபேஸ்புக் மூலம் ஒரு புரட்சி!
'இளம் தலைமுறைக்குப் பொறுப்பே இல்லை; இன்டெர்நெட், ஃபேஸ்புக், செல்போன் என்று பொழுதைக் கழிப்பதில்தான் ஆர்வம் இவர்களுக்கு’ என்று முந்தைய தலைமுறையின் விமர்சனம், கோபம், அதிருப்தி அனைத்தையும் வாங்கி அடுக்கிக் கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. இவர்களுக்கு மத்தியில், 'ஃபேஸ்புக்கை புரட்சிக்கும் பயன்படுத்தலாம்' என்று திசைகாட்டி, எகிப்து நாட்டில் புரட்சியை வெடிக்க வைத்திருக்கிறார் அஸ்மா மஹ்ஃபூஸ்!
எகிப்தில் அதிபர் ஹூஸ்னி முபாரக் நடத்திவரும் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, தீ மூட்டிக்கொண்ட நான்கு இளைஞர்களின் மரண அவஸ்தையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை, தன்னுடைய இணையதள பிளாக் பகுதியில் வெளியிட்டார் அஸ்மா.
இந்த இளைஞர்களில் ஒருவர் இறந்துவிட, அதைக் கேலி செய்தவர்களின் குரல்தான் அஸ்மாவைத் தட்டி எழுப்பியது. 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்’ என்று ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்தவர், 'அரசியல் உரிமைகள் கிடைக்காவிட்டாலும், வாழும் தகுதியான மனித உரிமையாவது கிடைக்க வேண்டும்’ என்று கலகக் குரல் எழுப்பினார். எகிப்து முழுவதும் காட்டுத் தீயாகப் பரவி, கடந்த 2011 ஜனவரி 25-ம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடினர்; புரட்சி வெடித்தது. ஹுஸ்னி முபாரக் அதிகாரத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்!
 தனி மனுஷி அல்ல... தேசத்தின் போராளி!  
'வாழ்க்கை முடிந்து போனதும், கூடான என் உடலை தயவுசெய்து தூக்கிச் சென்று 'தந்தை கூப்ரூவின் மலை’ உச்சியில் வைத்துவிடுங்கள்; அது உலோகக் கருவாக மாறட்டும்; வரும் தலைமுறைக்கு அது உபயோகப்படட்டும்; இனிவரும் காலங்களில், நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்... உலகின் ஒவ்வொரு மூலைக்கும்’
- தன் மரணம்கூட, தான் நேசிக்கும் மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகப்படட்டும் என்று சிந்திக்கிற மன உரம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அது, ஐரோம் ஷர்மிளா சானுவுக்கு வாய்த்து இருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கிறது 'ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’. இதன்படி இந்திய ராணுவம் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம்; தாக்கலாம்; அடிக்கலாம்; தண்டனைக்கு உள்ளாக்கலாம். 11 வருடங்களுக்கு முன்பு மாலோம் என்கிற இடத்தில் பேருந்துக்காகக் காத்து நின்றவர்களைக் காரணமின்றிச் சுட்டது ராணுவம். 10 பேர் அப்போதே இறந்தார்கள். அடுத்த மூன்றாவது நாள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் ஷர்மிளா, 'சிறப்புச் சட்டத்தை திரும்ப பெறு' என்று குரல்கொடுத்தபடி!
'தற்கொலைக்கு முயல்கிறார்' என்று கைது செய்து, கட்டாயப்படுத்தி டியூப் வழியாக திரவ உணவை செலுத்தி வருகிறது அரசு. ஆனாலும், அயராமல் போராடி வருகிறார் 40 வயது ஷர்மிளா. தொடர்ந்து 11 ஆண்டுகளாக பட்டினியாகக் கிடப்பதால், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்து, எப்போது வேண்டுமானாலும் மரணம் நெருங்கலாம் என்கிற கொடுஞ்சூழல். என்றாலும் போராட்டத்தைத் தொடர்கிறார்... நீங்கள் அவரை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை!
இந்த நூற்றாண்டின் பெண் போராளிகளுக்கு வணக்கங்கள்!

0 கருத்துரைகள்:

Post a Comment