நாச்சியாள்
இந்தியாவின் ஆணிவேர், அதன் பாரம்பரியமும், கலாசாரமும்தான். குறிப்பாக, 'குடும்பம்' என்கிற அழகான, அர்த்தமான அதன் கட்டமைப்புதான் நம் கலாசாரத்தின் இயல்பை, அதன் மாண்பை அடுத்த தலைமுறைக்கு பொறுப்புடன் கடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் பெரு நகரங்களில் இப்போது வேகமாகப் பரவிவரும் 'லிவிங் டுகெதர்' என்ற, திருமணம் பந்தம் இல்லாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை, நம் கலாசாரத்துக்கு வைக்கிறது பெரிய கேள்விக்குறி!
மகப்பேறு சிறப்பு மருத்துவராக... மருத்துவ தளத்திலும், பி.ஜே.பி. கட்சியின் தமிழக பிரசார குழு தலைவராக... அரசியல் தளத்திலும் சுழன்று கொண்டிருக்கும் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதலில் பேசுகிறார்.
'' 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்கிறோம். அப்படி வாழ்வியலை கற்றுக்கொள்ளும் பள்ளியாகவும், கற்றுத்தரும் ஆசிரியராகவும் இருப்பது குடும்பம் என்னும் வலுவான அமைப்புதான். அந்த அமைப்பு, இருவர் ஒப்புக் கொண்டு, உறவுகளின் துணையோடு திருமணம் செய்து கொள்கிறபோதுதான் உருவாகும், அதுதான் தழைக்கும். ஆனால், 'எங்கள் இருவருக்கும் சில காரணங்களால் சேர்ந்து வாழும் கலாசாரம் பிடித்திருக்கிறது; அதனால் சேர்ந்து வாழ்கிறோம்' என்கிற வாழ்க்கை முறையில் என்ன நிம்மதி கிடைத்துவிடும்? 'என்றைக்காவது ஒருநாள் பிரிந்துவிடப் போகிறவர்கள்தானே நாம்..?' என்கிற உறவில் ஆழமான அன்பு, காதல் எப்படி வரும்? அங்கு பந்தம் என்கிற பாச இழைகளால் ஆன பிணைப்பு எப்படி வரும்?" என்று அழுத்தமான கேள்விகளை எழுப்பிய தமிழிசை,
சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் இது பிரச்னைதான். அதிலும் இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். காரணம், பிணைப்பும், நேர்மையும் இல்லாத உறவில் ஆண்கள் வரம்பின்றி எந்த எல்லைக் கும் போவார்கள். இதனால் ஆண், பெண் இருவருக்குமே மனதிருப்தி இருக்காது. விளைவு... எங்கும் நிம்மதியில்லாத நிலைதான்" என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு,
"நம் கலாசாரத்தின் பெருமையே மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, பாட்டி என்று உறவுகள் சூழ வாழ்வதுதான். ஆனால், இப்படி 'சேர்ந்து வாழும்' கலாசாரத்தில் அவள் அவனுக்கு மனைவியில்லை, அவன் அவளுக்கு கணவனில்லை என்ற நிலையில், மற்ற உறவுகள் எப்படி மலரும்?! எனவே, இளமைக்குத் தீனியாகவும், எந்தவிதத்திலும் நிச்சயமற்றதாகவும் இருக்கும் இந்த வாழ்க்கை தேவைதானா என்று கட்டாயம் யோசிக்க வேண்டும் இந்த தலைமுறை!'' என்று வேண்டுகோளை முன் வைத்தார்.
சமூக ஆர்வலராக இருக்கும் பேராசிரியர் அ.மார்க்ஸ், சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளில் தன் முனைப்போடு ஈடுபட்டு தீர்வு காண முனைபவர். அவர் இந்த வாழ்க்கை முறை பற்றி என்ன நினைக்கிறார்?
''இந்தியாவில் குடும்பம் என்கிற அமைப்பு இப்போது மிகவும் இறுக்கமானதாக இருக்கிறதே ஒழிய, இணக்கமானதாக இல்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். தினம்தினம் பதிவாகும் விவாகரத்து, குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை அதற்குச் சான்று. இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷமில்லாமல், சடங்குக்காக சேர்ந்து வாழும் திருமண வாழ்க்கைக்கு மாற்றாக, மாறிவரும் சமூகச்சூழலில் வயது வந்த ஆணும் பெண்ணும், 'நாம் சேர்ந்து வாழலாம்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாழ்வது சமூகக் குற்றம் கிடையாது.
அவர்களுக்குப் பிடிக்கும் வரை சேர்ந்து வாழ்கிறார்கள். ஓடுகிற வாழ்க்கையில் முரண் வருகிறபோது, 'ஏன் முரண்டு பிடித்து வாழ வேண்டும்...?' என்கிற கேள்வி வருகிறபோது, பிரிந்து போகிறார்கள். இது ஆரோக்கியமானதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்'' என்றார் எதார்த்தமாக!
சென்னை, உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்களில் ஒருவரான அஜிதா, பெண்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர்களில் ஒருவர்.
'லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை சட்டம் எப்படி பார்க்கிறது?' என்று கேட்டபோது, "இதற்கு சட்டரீதியில் எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால், இப்படி சேர்ந்து வாழும்போது, பெண்கள் பாதிக்கப்படும் சமயத்தில், அவர்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பு நிச்சயமாக உண்டு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் நியாயம் தேடலாம்.
மற்றபடி, ஒருவர் பிரிந்து செல்லும்பட்சத்தில் குழந்தையை முன்னிறுத்தி ஆண் மீது உரிமை கோர இயலுமா, குழந்தைக்கான சொத்துரிமை எப்படி போன்ற விஷயங்களுக்கெல்லாம் சட்டரீதியிலான தீர்வுகள் ஏதும் இதுவரை இல்லை. ஒருவேளை இந்த 'லிவிங் டுகெதர்' விஷயம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படும்போது... அதற்கான சட்டங்களும் வரலாம்" என்று சொன்னார்.
சேர்ந்து இருப்பதற்கும், சேர்ந்து வாழ்வதற்கும் அர்த்தங்கள் வேறு! காலம்தான் அதை புரிய வைக்க வேண்டும்!
"ஃபாரின்ல விட்டொழிக்கறத நாம தூக்கிப் பிடிக்கிறோம்"
பாரம்பரியமா நாம கடைபிடிக்கற 'இன்ஸ்டிடியூஷன் ஆஃப் மேரேஜ்' நமக்கு நல்லதில்லைனு எல்லாரும் முடிவுக்கு வர்றமாதிரியான சூழல்தான் இன்னிக்கு உருவாயிட்டிருக்கு. குடும்பம், குழந்தைங்கங்கிற இந்த அருமையான வாழ்க்கை முறை கொஞ்ச காலத்துல அழிஞ்சே போகலாம். ஆனா, அது இல்லாம போனா... ஃபேமிலிங்கிறது எப்படி உண்டாகும்? அதேசமயம், லிவிங் டுகெதர் கலாசாரம் பரவி, அதுக்குப் பிறகு, 50 வருஷம் ஓடினா... 'இன்ஸ்டிடியூஷன் ஆஃப் மேரேஜ்’தான் பெட்டர்னு திரும்பவும் அதுக்கே எல்லாரும் ஓடி வரவும் வாய்ப்பிருக்கு. ஆமாம்... பல சமயங்கள்ல ரொம்ப வீராவேசமா பேசிட்டு, அவசரத்துல எடுத்த முடிவெல்லாம் தவறா போகும்போது பழசே பெட்டர்னு தோணும் இல்லியா... அதுமாதிரிதான்.
குழந்தைகளுக்கு... உறவுகளோட உன்னதத்தை உணர வைக்கறதும்... பந்தங்களோட பாசப்பிணைப்பை புரிய வைக்கறதும் பெற்றோர்கள் கையிலதான் இருக்கு" என்றார் கவலையோடு.
0 கருத்துரைகள்:
Post a Comment