பெண்ணின் திருமணம்... பெற்றோருக்கு கடனா ?

on Thursday, August 18, 2011


நாச்சியாள்
'பெண் என்பவள் வீட்டுக்குப் பாரம்', 'பெண் குழந்தையா வேண்டவே வேண்டாம்' என்றெல்லாம் அரக்கத்தனமான நம்பிக்கைகள் சமூகத்தில் ஏற்கெனவே புரையோடிப் போய்க் கிடக்கின்றன. இத்தகைய சூழலில், உச்ச நீதிமன்ற பெண் நீதிபதியான கியான் சுதா மிஸ்ரா, சமீபத்தில் வெளியிட்டிருக்கும் தன்னுடைய சொத்துக் கணக்கு பற்றிய அறிக்கையில் 'கடன்’ என்ற அட்டவணைக்கு நேராக, 'என் இரு பெண்களின் திருமணம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இது, பலராலும் கவனிக்கப்பட்டு, தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கே பெண்களின் கல்யாணம் 'கடன்’ என்றால், மிடில் கிளாஸ் குடும்ப அம்மாக்களுக்கு..?! இதுபற்றி, தங்கள் பெண்களுக்கு 'நல்லபடியாக’ திருமணம் செய்து முடித்த, முடிக்கக் காத்திருக்கும் அம்மாக்கள் சிலர் இங்கே பேசு கிறார்கள்...
''எங்க பொண்ணுக்கு பொறுப்பான பெற்றோரா இருந்து, எங்க சக்திக்கு உட்பட்டு சீர், செனத்தி செஞ்சு கல்யாணம் முடிச்சோம்'' என்று பெருமிதத்துடன் சொல்லும் பிரபல 'சமையல் கலை நிபுணர்’ ரேவதி சண்முகம்,
'
'ஆனா, திருமணத்துக்கு நாள் குறிச்சதுக்கு அப்புறம் அரக்கப்பரக்க ஓடி பணம் புரட்டல. அவ வளர வளர... நகை, சீர், பணம்னு கொஞ்சம் கொஞ்சமா சேர்க்க ஆரம்பிச்சுட்டோம். கல்யாண வயசை எட்டினப்போ, 'இத்தனை லட்சம் செலவாகும்’னு பட்ஜெட் போட்டோம். அதைவிட ரெண்டு லட்சம் அதிகமாயிடுச்சு. அவஸ்தையோடதான் சமாளிச்சோம். குறிப்பா, கல்யாணத்துல சாப்பாடு நல்லா கிராண்டா இருக்கணும்னு நினைச்சு அதுக்காக நிறைய செலவு பண்ணினோம். மாப்பிள வீட்டுல எதுவும் டிமாண்ட் பண்ணல. இருந்தாலும் எங்க பொண்ணுக்கு நாங்க செய்ய வேண்டிய கடமையை செஞ்சோம்'' என்றவர்,   ''நம்ம சமூகத்த பொறுத்தவரைக்கும் பெண்ணோட கல்யாண செலவுங்கிறது இன்னமும் கவலை தர்ற விஷயம்தான்ங்கிறதை மறுக்கறதுக்கு இல்ல. அதையும் மீறி 'புண்ணியம் பண்ணுனவங்களுக்குத்தான் பொம்பளப் புள்ள பொறக்கும்’னு பெண் குழந்தைகள குடும்பத்துக்கான சந்தோஷமாத்தான் நம்புகிறது நம்ம கலாசாரம்!'' என்று சொன்னார்.
''ஒரு நீதிபதி, அதுவும் ஒரு பெண், தன் மகள்களோட கல்யாணத்தை கடன்னு சொல்லியிருக்கறது துரதிர்ஷ்டம். அது கடன் இல்ல... கடமை!'' என்று சூடான வார்த்தைகளுடன் ஆரம்பித்த கடலூர் ஜெகதீஸ்வரி,
''என் ரெண்டு பொண்ணுங்களும் இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருக்காங்க. படிப்பால வர்ற கௌரவமே அவங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கும்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.
வசதிக்கும் சக்திக்கும் மீறின ஆடம்பரத்தோட பெரிய கல்யாண மண்டபம், பல ஆயிரங்களுக்குப் பட்டுப் புடவை, டாம்பீகமான சீர் செனத்தினு பகட்டா கல்யாணம் செய்றது அதிகரிச்சுடுச்சு. அதனாலதான், ஆசையா பெத்த புள்ளைங்களே கடானா தெரியறாங்க'' என்று வேதனைப்பட்டவர்,
''பொண்ணுங்க கடன்னா, ஆம்பள பசங்க எல்லாம் சொத்தா? ஆண் பிள்ளையால வேதனையில அல்லாடுற அம்மா, அப்பாக்களும்... பொண்ணுங்களால நிம்மதியா தூங்குற அம்மா, அப்பாக்கள் கதையும் வீட்டுக்கு வீடு கொட்டிக் கிடக்கே!'' என்று பொங்கினார்.
பாண்டிச்சேரி யைச் சேர்ந்த ராமலட்சுமி, ''பொம்பள புள்ளைங்கள கடன்னு ஒரு நீதிபதி சொல்றது வேதனைதான். இன்னொரு பக்கம் பார்த்தா, அதுல உண்மையும் இருக்கத்தான் செய்யுது. ஒரு பொண்ண எவ்வளவு படிக்க வெச்சிருந்தாலும், அவங்க கை நிறைய சம்பாதிச்சாலும், பொண்ணுக்குக் கல்யாணம்னா பயமுறுத்துற முதல் விஷயம் வரதட்சணை. அந்த கொடுமையி னாலதானே 21-வது நூற்றாண்டிலயும் கேஸ் ஸ்டவ்வும், கெரசின் ஸ்டவ்வும் வெடிச்சுட்டு இருக்கு?'' என்று யதார்த்தத்தை எளிய வார்த்தைகளால் உடைத்தார்.
''நாட்டில் பெண்களுக்கு 'எதிரான’ கலாசாரம் எத்தனை ஆழமாக வேரோடி இருக்கிறது என்பதைத்தான் சொல்கிறது அந்த நீதிபதியின் வார்த்தைகள்...'' என்று ஆற்றாமையுடன் கூடிய கோப வார்த்தைகளில் ஆரம்பித்தார் 'சமூக ஆர்வலர்’ பேராசிரியை சரஸ்வதி.
''கல்வி, பொருளாதர வளர்ச்சியும்கூட 'பெண் என்றால் பாரம்’ என்று புண்ணாகிப் புரையோடிப் போயிருக்கும் சமூகத்தின் கருத்தை இம்மி அளவும் மாற்றவில்லை. காரணம், பெண்ணை இன்னும் கவர்ச்சிப் பொருளாக, பாலியல் கருவியாக, வரதட்சணை வரவாகப் பார்க்கும் மனநிலையை மறக்கடிக்காமல் செய்கிறான் ஊடக அரக்கன்!
அந்த நீதிபதி குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது... இரண்டு விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்கிறேன். அதாவது, பாலினப் பிரச்னைகள் (Gender Issues) குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தக்கூடிய கல்வி, ஆரம்பப் பள்ளியிலிருந்தே வைக்கப்பட வேண்டும்... பெண்கள் அமைப்புகள் இன்னும் ஆழமான, விரைவான களப்பணியை முடிக்கி விடவேண்டும்'' என்று தெளிவான பாதை காட்டினார் சரஸ்வதி.
மாதவம் செய்து மங்கையராய்ப் பிறந்தது, இந்த சாபங்களை மாற்றி எழுதிடத்தான்!

0 கருத்துரைகள்:

Post a Comment