கரஸ்பாண்டன்ஸ் M.B.A. வேலை'க்காகுமா.. ?

on Thursday, August 18, 2011
கரஸ்பாண்டன்ஸ் M.B.A. வேலை'க்காகுமா.. ?

நாச்சியாள்
பல துறைகளிலும் வேலை வாய்ப்பு, பை நிறைய சம்பளம், அடுத்தடுத்து பதவி உயர்வுகள் என ஏணியில் ஏறிக் கொண்டே இருக்கும் வாய்ப்பைத் தருவதால், எம்.பி.ஏ. (MBA - Master of Business Administration) படிப்புக்கு ஏக டிமாண்ட்! போட்டி பெருகிவிட்டதால் அந்தப் படிப்புக்காக தேசிய அளவில் பலவிதமான போட்டித் தேர்வுகளும் (CAT, JMET, XAT, SNAP) உருவாக்கப்பட்டுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள 'ஹார்வர்ட்’ பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட இந்த மூன்று எழுத்து மந்திர படிப்பு... இன்று இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ரெகுலராகவும், தொலைதூரக் கல்வியாகவும் வழங்கப்படுகிறது. தெருவுக்கு ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. 'ஆனால், இக்கல்வியை கற்ற அனைவருமே கை நிறைய சம்பாதிக்கிறார்களா?’
- இப்படி ஒரு கேள்வியைப் போட்டதும்...
''அது அவரவரின் திறமையைப் பொறுத்தது'' என்று ஆரம்பித்தார், மேனேஜ்மென்ட் படிப்புக்கு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 'மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்’ துறைத் தலைவர் எல்.சுகந்தி.
''ஆர்ட்ஸ், சயின்ஸ், இன்ஜினீயரிங், அக்ரி, ஃபார்மஸி என எந்தத் துறையில் யூ.ஜி. படிப்பைக் கற்று இருந்தாலும், அவர்கள் எம்.பி.ஏ. படிக்கலாம் என்பதால், ரெகுலர் கல்வி முறையில் இதற்கான என்ட்ரன்ஸ் எக்ஸாம் நடத்தப்பட்டாலும், இந்தப் படிப்புக்கு போட்டி அதிகமாக இருக்கிறது. அண்ணா யுனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் நூறு கல்லூரிகளிருந்து கிட்டத்தட்ட மூவாயிரம் மாணவர்கள் வரை ஆண்டுதோறும் வெளிவருகிறார்கள். அனைவருக்கும் ஒரே சிலபஸ்தான். 'புராஜெக்ட் வொர்க்’, 'செமினார்ஸ்’, 'கான்ஃபரன்ஸஸ்’ மூலம் ஒரு மாணவனின் 'மேனேஜ்மென்ட்’ திறமையை அதிகப்படுத்தும் வகையில் கல்வி முறை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவர் தான் கற்பதை, வேலை பார்க்கும் நிறுவனத்தில் செயல்படுத்தும் போதுதான், அவர் அக்கல்வியை எஃபெக்டிவாக கற்றுள்ளாரா என்பது தெரியும். அது, மாணவரின் தனிப்பட்ட அறிவு, திறமை, வேலை பார்க்கும் திறன், சமயோஜித புத்தி ஆகிய குணாதிசயங்களைச் சார்ந்த விஷயம்'' என்று அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் சொன்னார்.
தமிழகத்தில் சுமார் முப்பது கல்வி நிறுவனங்கள் தொலைதூரக் கல்விமுறையில் இப்படிப்பை வழங்குகின்றன. அதிகமான களப்பணியும், 'புராஜெக்ட் வொர்க்’கும் தேவைப்படும் இப்படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் கற்பவர்களுக்கு பயன் கிடைக்கிறதா? அவர்களுக்கு உயர் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறதா? என்ற கேள்விகளுக்கு...
''இல்லை'’ என்ற நேரடி பதிலில் அதிர்ச்சியூட்டிய பேராசிரியர் வீரவல்லி, தொடர்ந்தார்.
''இந்தியாவுக்குள் உலக நிறுவனங்கள் போட்டிப் போட்டு தொழில் தொடங்க ஆரம்பித்த பின்புதான் இப்படிப்புக்கு அதிக டிமாண்ட். இவர்களை அதிகமான அளவில் வேலைக்கு எடுத்து, கைநிறைய சம்பளம் தருவது அந்த நிறுவனங்கள்தான். தான் தேர்ந்தெடுக்கும் 'எம்.பி.ஏ. எம்ப்ளாயி’யிடம் அவர்கள் எதிர்பார்ப்பது அதீத திறமையையும், செயல்திறனையும். அதை போஸ்டல் கல்வி மூலம் கற்றுக் கொடுப்பது என்பது, தொலைத்தொடர்பு மூலம் நீச்சல் கற்றுக் கொடுப்பது போலத்தான்!
போஸ்டல் கல்வி மூலம் படிப்பவர்களால் அந்தப் பாடத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்; ஆனால், அந்த அறிவைத் திறமையாக மாற்றுவது கடினம். உதாரணமாக... 'எஃபெக்டிவ் பிளானிங்’ என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், பார்க்கும் வேலையில் அதனைச் செயல்படுத்தி, வெற்றி பெற முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. யுனிவர்ஸிட்டி அனுப்பும் புத்தகங்களை வெறுமனே படித்து, மனப்பாடம் செய்து, பரீட்சை எழுதி, பாஸ் செய்யும் கல்வியால் பயன் இல்லை. வெறும் சொல் திறனை, செயல் திறனாக்க முடியாது'' என்று திட்டவட்டமாகச் சொன்னார்.
''அப்படியானால் ஃபாரின் யுனிவர்சிட்டிகள் ஆன்லைன் மூலம் எம்.பி.ஏ. கற்றுக் கொடுக்கிறதே... அவர்களால் மட்டும் திறமையான எம்.பி.ஏ. மாணவர்களை உருவாக்க முடியுமா?'' என்றோம். ''அதில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. பெரும்பாலான ஆன்லைன் கல்வி நிறுவனங்கள், மாணவர்களை பெரிய நிறுவனங்களில் 'புராஜக்ட் வொர்க்ஸ்’ செய்ய வைத்து அதை மதிப்பிடுகிறார்கள். 'ஆடியோ-வீடியோ’ வடிவிலான கோர்ஸ் மெட்டீரியல்ஸ் தருகிறார்கள். அதில் சந்தேகம் இருந்தால் அந்தத் துறை நிபுணரிடம் ஆன்லைனில் பதில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் புத்தகத்தை அனுப்புவது, படிக்க வைப்பது, மாதம் ஒருமுறை, இருமுறை வகுப்பெடுப்பது என பழங்கால முறையைத் தானே இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்..!
ஐ.ஐ.எம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற ரெகுலர் கல்விமுறையில் இருப்பது போல் ஒருவருடைய அறிவைத் திறமையாக மாற்றி, அதை செயல் திறனாக்கும் வகையில் அதிக செமினார்ஸ், கான்ஃபரன்ஸஸ், புராஜெக்ட் வொர்க்ஸ், குரூப் டிஸ்கஷன் என தொலைதூரக் கல்வி முறையிலும் மாற்றம் கொண்டு வந்தால், அந்தத் தொலைதூரக் கல்வியும் பயனுடையதாக மாறும்'' என்று ஆலோசனை கூறிய வீரவல்லி,
''யு.ஜி. முடித்தபின், 'அடுத்து எம்.பி.ஏ. படிச்சாதான், வேலைக்கான வாய்ப்புகள் விரியும்... உறுதிப்படும்’ என்று நினைக்கும் மாணவர்களும், பணியில் இருந்துகொண்டே, 'நான் பார்க்கும் வேலைக்கு ஒரு சப்போர்ட்டாகவும், அடுத்த பதவி உயர்வுக்கு ஒரு காரணியாகவும் அந்தப் படிப்பு இருக்கும்’ என்று நினைப்பவர்களும் தரமான நிறுவனங்களில் சேர்ந்து எம்.பி.ஏ. படிக்கலாம். 'பாட்டனியில யூ.ஜி. முடிச்சிருக்கேன். அடுத்து என்ன படிக்கிறதுனு தெரியல. சரி, எம்.பி.ஏ. படிக்காலாம்னு படிக்கிறேன்’ என்று படிப்பவர்களுக்கு கல்யாணப் பத்திரிகையில் போடுவதற்கு மட்டும்தான் அது பயன்படும். எம்.பி.ஏ-வை மட்டுமல்ல... எந்தப் படிப்பையும் 'ஏன், எதற்கு, என்ன காரணத்துக்கு, எப்படி படிக்கப் போகிறோம்’ என்ற தெளிவுகளுக்குப் பின் படிப்பது மிக முக்கியம்!'' என்று அறிவுறுத்தினார்.
சென்னையில் இயங்கும் மேன்பவர் ஏஜென்ஸிகளைச் சேர்ந்தவர்கள், ''பல முன்னணி நிறுவனங்கள், 'இந்தக் கல்வி நிறுவனத்திலிருந்து வெளி வந்த எம்.பி.ஏ. மாணவர்கள்தான் வேண்டும்’ என்று குறிப்பிட்டுக் கேட்பார்கள். போஸ்டல் மூலம் எம்.பி.ஏ. படித்தவர்கள் என்றாலும், அவருடைய யூ.ஜி. டிகிரியில் நல்ல பர்சன்டேஜ் மார்க், சம்பந்தபட்ட வேலையில் குறிப்பிடத்தக்க அனுபவமும் இருந்தால் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், அனுபவம் இல்லாமல், 'போஸ்டல் எம்.பி.ஏ.’ என்றால்... நிராகரிப்பவர்கள்தான் அதிகம்!’ என்று, பேராசிரியர் வீரவல்லியின் பதிலையே உறுதிப்படுத்தினார்கள்.
மொத்தத்தில், கரஸ்ஸில் எம்.பி.ஏ. படிப்பவர்கள், அதன் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டியது முக்கியம்!

0 கருத்துரைகள்:

Post a Comment