புடவை என்ன நவீன அணுகுண்டா ?

on Thursday, August 18, 2011
புடவை என்ன நவீன அணுகுண்டா ?

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், அமெரிக்க ஏர் போர்ட் ஒன்றில் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். தான் ஒரு தூதர் என்பதற்கான ஆவணங்களை அவர் காட்டியபிறகும்கூட பாது காப்பு அதிகாரிகள் விடவில்லை. 'நீங்கள் புடவை கட்டியிருப்பதால், கண்டிப்பாக சோதனையிட்டே தீருவோம்' என்று சொல்லி, சோதனையிட்டுள்ளனர்.

- சமீபத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், புடவை கட்டும் பெண்கள் மத்தியிலும், அதனை நேசிக்கும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
''அமெரிக்கப் பெண்கள்கூட இந்தியா வந்தால், ஆசை ஆசையாக இந்திய கலாசார உடையான புடவையைக் கட்டும்போது, நம்முடன் நட்புக் கரம் நீட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இப்படி மோசமான செயலில் ஈடுபடலாமா?'' என்ற ஆதங்கத்தை கேள்வியாக்கி, புடவையை யும் அந்தக் கலாசாரத்தையும் சிநேகிக்கும் சிலரிடம் கேட்டோம்...
அருள்மொழி,வழக்கறிஞர்:
''சோதனைக்கு உட்படுத்துவதைத் தவறென்று சொல்வதற்கில்லை. ஆனால், 'நீ இந்தியாவின் உயர் அதிகாரியாக இருந்தாலும் பரவாயில்லை. புடவை கட்டியிருக்கிறாய். அதனால் ஸ்பெஷல் சோதனை’ என்று நடந்திருக்கும் அதிகாரிகளின் பிடிவாத செயல், 'நாம் அமெரிக்க அடிமைகள்தானோ..?’ என்ற சந்தேகத்தை உறுதி செய்வது போல இருக்கிறது. கோட் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக் கொண்டு நம் நாட்டில் தரையிறங்கும் அமெரிக்கர்களை, 'துப்பாக்கியை எடுத்து நீட்டத்தான் அப்படி வருகிறார்கள்’ என, சிறப்பு சோதனை செய்கிறோமா நாம்? இந்தச் சம்பவத்தை எதிர்த்து தன்னுடைய எதிர்ப்பை இந்தியா வலுவாக பதிவு செய்யா மல் இருப்பதுதான் மிகப் பெரிய அவமானம்!''
பேராசிரியை பர்வீன் சுல்தானா, பேச்சாளர்:
''இந்த 'சோதனை அவமானம்’ முதல் தடவை நடப்பதல்ல. ஏற்கெனவே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், டெண்டுல்கர், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் என நம் நாட்டின் வி.ஐ.பி-க்கள் அந்த துரதிர்ஷ்ட சூழ்நிலையை அமெரிக்காவில் சந்தித்திருக்கிறார்கள். அதிலும் இம்முறை, 'புடவை கட்டியிருந்ததால்...’ என்று அவர்கள் இட்டுக்கட்டும் காரணம், இன்னும் அபத்தம். அமெரிக்க பாதுகாப்பு சட்டத்தில் 'புடவை’ என்றால் நவீன அணுகுண்டுக்கு ஈடானதா? 'ஸ்கேனர் வேலை செய்யவில்லை. அதனால் கையால் தொட்டுத் தடவி பார்த்தோம்’ என்பது, எத்தனை அநாகரிகம்? புடவை நம் கலாசாரத்தின், பண்பாட்டின் பெருமைமிகு அடையாளம். ஒரு பெண்ணாக மீரா சங்கருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் சுயமரியாதையை கடுமையாக உரசிப் பார்த்த நிகழ்வு இது.
ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது, விமான நிலையத்தில் வெள்ளையர்கள் ஒரு வரிசையில் நின்றிருந்தனர். நான் அதில் நிற்க முனைந்தபோது, கறுப்பாக இருக்கிறேன் என்பதற்காகவே இன்னொரு வரிசையில் நிற்கச் செய்தனர். மிகவும் மனம் நொந்த சம்பவம் அது. நிறபேதம் அங்கு கொஞ்சமும் வற்றவில்லை என்பதுதான் உண்மை.
அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கு வந்தாலும், அவரின் பாதுகாப்புக்காக நம்மைத்தான் சோதனை செய்கிறார்கள். நாம் அவர்கள் நாட்டுக்குப் போனாலும் நம்மைத்தான் சோதனை செய்கிறார்கள். 'வல்லரசு, நல்லரசு’ போர்வையில் இருக்கும் அமெரிக்காவுக்கு, நம்முடைய எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தால்தான் இந்த அவமானங்கள் தொடராது!''
நித்யஸ்ரீ, கர்னாடக இசைப் பாடகி:
''இசைக் கச்சேரிகளுக்காக அமெரிக்கா சென்றபோது, ஒருமுறை ஃப்ளைட்டுக்கு நேரம் ஆகிவிட்டதால் பட்டுப்புடவையை மாற்றக்கூட நேரமில்லாமல் அப்படியே வந்தேன். செக்யூரிட்டி செக்கப்பின் போது 'பீப்’ சவுண்ட் வந்ததால், நான் போட்டிருந்த எல்லா நகைகளையும் கழற்றினேன். பிறகும் அதே ஒலி. தாலியைக் கழற்றச் சொன்னார்கள்! அதிர்ந்துபோன நான், அது ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு எத்தனை புனிதமானது, முக்கியமானது என்று எடுத்துச் சொன்னேன். அதைக் கையில் தாங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு, பட்டுப்புடையில் இருந்த தங்க சரிகைதான் 'பீப்’ ஒலிக்கு காரணமென்று கண்டறிந்தனர். பிறகு, சுடிதாருக்கு மாறிய பிறகே விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டேன்.
சாதாரண குடிமகளான எனக்கே இந்த சோதனைகள் தர்மசங்கடத்தைத் தந்தன. அப்படியிருக்க, தூதர் எனும் உயர் பதவியில் இருக்கும் மீரா சங்கருக்கு அதிகபட்ச அவமானத்தையே தந்திருக்கும். இதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.''
பத்மினி சித்தார்த்தன், இல்லத்தரசி, சென்னை:
''அமெரிக்காவுக்கு வருடா வருடம் சென்று வருவேன். ஒவ்வொரு முறையும் என் தங்கத் தாலி எழுப்பும் ஒலி, என்னை கொஞ்ச நேர குற்றவாளியாக்கிவிடும். கூடவே, நான் உடுத்தியிருக்கும் புடவையை ஏதோ பிரச்னைக்குரிய உடையென்பதுபோல அவர்கள் சந்தேகிக்கும்போது, 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ என்று வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை நினைத்து, நொந்து, சிரித்துக் கொள்வேன்.
தினம் தினம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அமெரிக்கா செல்கிறார்கள். அந்நாட்டின் மக்கள்தொகையில், குறிப்பிட்ட சதவிகிதம் இந்தியர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஏன் இந்தியர்களின் கலாசாரம், உடை பற்றிய ஒரு சரியான புரிதல் இன்னும் ஏற்படவில்லை? ஒருவேளை இந்தியா விடமிருந்து அப்படி ஒரு கோரிக்கையோ, கண்டனமோ கடுமையாக எழுந்தால் அது நடக்குமோ என்னவோ!''
நாச்சியாள்
படங்கள்: கே.ராஜசேகரன்,
து.மாரியப்பன்

0 கருத்துரைகள்:

Post a Comment