அய்யோ ஆஸ்பெஸ்டாஸ்...'

on Thursday, August 18, 2011

வீட்டுக் கூரையில் ஒரு எமன் !
'வீட்டுக்கு அதிக செலவில்லாமல் மேற்கூரை போடணும்...'
'கார் நிறுத்தும் இடத்துக்கு ஒரு கூரை வேணுமே..'
'மொட்டை மாடியில் சின்னதா ஒரு கூரை போட்டா, சாயங்காலத்துல உக்காந்து காத்தாட பேச வசதியா இருக்கும்.'
இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பலரும் சிபாரிசு செய்வது... ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எனப்படும் கல்நார் தகடுகளைத்தான். ஆனால், இந்த ஆஸ்பெஸ்டாஸை சர்வதேச அளவில் பல நாடுகளில் தடை செய்து விட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இருந்தும், இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகியுள்ளன இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள். அதுமட்டுமல்ல... வீடுகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், 'பிளாஸ்டிக், ஆஸ்பெஸ்டாஸை பெருமளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?' என்ற கேள்வியை சென்னை மாநகராட்சி, பொதுநல மருத்துவர் பஞ்சாட்சரம் செல்வராஜன் முன் வைத்தபோது வந்துவிழுந்த பதில்கள் எல்லாமே படு அதிர்ச்சி ரகம்தான்!
''ஆஸ்பெஸ்டாஸை 'எளிதில் தீ பிடிக்காது, நீண்ட காலத்துக்கு காற்று, வெயிலைத் தாங்கி நிற்கும்' போன்ற காரணத்தால்தான் பல நூறு வருடங்களாக உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், 70 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆஸ்பெஸ்டாஸ் பல நோய்களை உற்பத்தி செய்யும் காரணியாக இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்!
செல்வராஜன்
இயற்கையாகக் கிடைக்கும் 6 வகையான 'சிலிக்கேட்'டால் ஆனதுதான் இந்த ஆஸ்பெஸ்டாஸ். காற்று, வெயிலில் இவை ரியாக்ட் ஆகி கண்ணுக்குத் தெரியாத தூசியைப் பரப்பும். தொடர்ந்து அதைச் சுவாசிக்கும்போது சுவாசக் கோளாறு ஏற்படும். நாளடைவில் நுரையீரல் முடக்கப்பட்டு, பலவித நோய்கள் உண்டாகும்.
ஆபத்து அத்துடன் முடியவில்லை. மெஸதிலியோமா (Mesothelioma) என்ற கேன்சர் நோய், இந்த ஆஸ்பெஸ்டாஸ் காரணமாக ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கு 14 பேர் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டதால்தான் ஐரோப்பிய நாடுகளில் 2005ம் ஆண்டிலிருந்து ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்திக்கே தடைவிதித்து விட்டார்கள். இங்கே 'ஆஸ்பெஸ்டாஸில் இவ்வளவு தீமை இருக்கிறது' என்ற விழிப்பு உணர்வுகூட இல்லாமல், தங்குதடை இன்றி பயன்படுத்தி வருகிறோம்!" என்று வருத்தப்பட்ட டாக்டர், பிளாஸ்டிக் அரக்கன் பற்றியும் பேசினார்...
''சேர்கள், கதவுகள், ஜன்னல்கள், கப்போர்டுகள் என திரும்புகிற பக்கமெல்லாம் பிளாஸ்டிக்... பிளாஸ்டிக். இதெல்லாமே 'பாலிவினைல் குளோரைடு' எனும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தவை. இதை அதிகளவு பயன்படுத்தும்போது, வெயிலினால் உண்டாகும் வெப்பத்தோடு 'ரியாக்ட்'ஆகி சுவாசக் கோளாறு, இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு என பல பாதிப்புகளை உண்டாக்கும். கட்டுமானத்துறையில் இதை அதிகம் பயன்படுத்துவதற்கு காரணம்... விலை குறைவானது, நீண்ட காலம் உழைக்கும், அசெம்பிள் செய்வது ஈஸி என்ற காரணங்களால்தான். ஆனால், அது மனித நலத்துக்கு பாதிப்பை உண்டாக்குகிறது என்பதால், 'பிவிசி' பிளாஸ்டிக்குகளில் பல வகைகளின் பயன்பாட்டை ஐரோப்பிய நாடுகளில் தடை செய்துவிட்டார்கள்" என்ற டாக்டர்,
''பொதுவாக, இத்தனை 'மைக்ரான்' அடர்த்தியுள்ள பிளாஸ்டிக், இத்தனை சென்டிகிரேட் வெப்பத்தை தாங்கும் சக்தியுள்ளது என்கிற அடிப்படையில்தான் சமையலறை மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான பிளாஸ்டிக் சாமான்கள் தயாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக 3, 6, 7 என்ற மதிப்பீட்டு எண்ணுள்ள பிளாஸ்டிக்கை சமையல் அறையில் பயன்படுத்தக்கூடாது. ஆனால், இந்தக் குறியீட்டை எல்லாம் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடுகிறதா என்பதும் கேள்விக்குறியே.
இந்தப் பிளாஸ்டிக்குகளில் இருக்கும் 'பிஸ்பீனால் ஏ' (Bisphenol A)எனும் கெமிக்கலால் பல வகையான தீமைகள் உண்டாகின்றன. உடல் பருமன், உயிரணுக்கள் குறைவு, மார்பகப்புற்று, சீக்கிரமாக பருவமடைதல், அடிக்கடி கருச்சிதைவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, மனச்சிதைவு என்று பல பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, குழந்தைகளுக்கு இதனால் பல பாதிப்புகள் ஏற்படலாம்'' என்று எச்சரிக்கை கொடுத்தவர்,
''இன்றைக்கு இருக்கிற வெரைட்டியான நோய்களை 15, 20 வருடங்களுக்கு முன்பு கேட்டிருக்கிறோமா..? இல்லையே..! உணவிலிருந்து உடை வரை இயற்கை முறை வாழ்வைவிட்டு விலகி, செயற்கைக்குள் புதைந்துபோனதற்கான விலைதான் இந்த நோய்கள். நம் ஆரோக்கியம் நம் கையிலா, செயற்கைகளின் கையிலா என்பதை இப்போதுகூட தீர்மானிக்காவிட்டால், எப்போதுதான் தீர்மானிக்கப் போகிறோம்?!'' என்று நிதர்சன கேள்வியை எழுப்பினார்!
பதில் சொல்லுங்கள்..!
நாச்சியாள்
படங்கள்: ஆ.முத்துக்குமார்
-

0 கருத்துரைகள்:

Post a Comment