உறைந்து கிடக்கும் அன்பு

on Monday, January 23, 2012

பரணில் ஏறியவுடன்
கையில்பட்டது அப்பத்தாவின்
வெண்கலக் கும்பா
அதையொட்டி அழுக்கை
அப்பிக்கொண்டு கிடந்தது
தாத்தாவின் திருகுச்  சொம்பு

திருகுச் சொம்புடன்
திருகிக் கிடந்தது
அம்மாச்சி ஆசையாய்   கொடுத்த கெண்டி
தூக்க முடியாத கணத்தில்
முப்பாட்டியின் செம்பு அண்டா
பெரிய அத்தையின்
பெயர் பதித்த தவளைப் பானை
அம்மாவுக்குத் தாய்மாமன்
சீராய்க் கிடைத்த செப்புக் குடம்
நகர்த்தவே முடியாத
இட்லி சட்டி

ஒன்றின் மேல் ஒன்றாய்க் கிடந்த
அந்தப் பாத்திரங்களுக்குள்
தூசியும் அழுக்கும் அடைந்து கிடப்பதாய்
சொன்னது அக்கா
எங்கள் மீதான
மூதாதையர்களின் அன்பு
அதற்குள் ஆண்டாண்டுகளாய்
உறைந்துகிடப்பதாய் சொன்னேன்

ஆமாம் என்றது
 என்னுடன் சேர்ந்து
பள்ளியும் கரப்பானும்

1 கருத்துரைகள்:

Jadayu said...

மூதாதையர்களின் சுத்தமான அன்புக்கு நிகரே இல்லை. மிக அற்புதமான கவிதை!

Post a Comment