உயிரையும் பறிக்கும் சங்கிலி கொள்ளையர்கள்...

on Tuesday, January 24, 2012

நாச்சியாள், ஆர்,ஷஃபி முன்னா
படங்கள்: தி.விஜய், பா.சிவராமகிருஷ்ணன்
''அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும்... செயின் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்'' என்று சொன்னார், சில மாதங்களுக்கு முன் முதல்வர் பதவியில் அமர்ந்த, பெண் இனத்தின் பிரதிநிதியான ஜெயலலிதா.
அவர் இப்படிச் சொன்னதற்குக் காரணம்... கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் தாறுமாறாக நடைபெற்ற சங்கிலி அறுப்புக் கொள்ளைகளும், அதனால் பெண்கள் அடைந்த எல்லையற்ற துன்பங்களும்தான்.
ஜெயலலிதா சொன்ன மாதிரி, அவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடியது உண்மையாக இருக்கலாம். ஆனால், அங்கிருந்து   மட்டுமில்லாமல், அதற்கு அண்டை மாநிலங்களில் இருந்தும்கூட மேலும் பலரை அழைத்துக் கொண்டு வந்து, மீண் டும் தமிழகத்தில் அவர்கள் முகாமிட்டு விட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது... கடந்த ஆட்சிக்காலத்தைவிட இன்னும் அதிகரித்துக் கிடக்கும் சங்கிலி அறுப்புச் சம்பவங்களைப் பற்றி கேள்விப்படும்போது!
''காலையில ஏழரை மணிக்கு சாமிக்காக காம்பவுண்ட் சுவர்கிட்ட நின்னு செடியில பூ பறிச்சுட்டு இருந்தேன். பைக்குல சின்ன வயசுப் பசங்க ரெண்டு பேரு 'சர் சர்’னு வந்தாங்க. பின்னாடி உட்கார்ந்திருந்தவன் என் கழுத்துல இருந்த தங்க செயினை 'அழகி’ சீரியல்ல வர்ற மாதிரி சட்டுனு அத்துட்டான். கண் மூடி கண் திறக்குற துக்குள்ள பைக்ல பறந்துட்டானுங்க. போலீஸ்ல கம்ப்ளெ யின்ட் கொடுத்திருக்கோம். கிடைக்குமானு தெரியல!''
- முதுமைக்கு உண்டான குரல் நடுக்கத்துடனும், ஐந்து பவுன் செயினைப் பறிகொடுத்த தவிப்புடனும் பேசுகிறார் சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த மஹாலட்சுமி பாட்டி.
''என் நகை பறிபோன அன்னிக்கு மட்டும் நங்கநல்லூர்ல நாலு பேர்கிட்ட இதேமாதிரி செயினைப் பறிச்சுட்டுப் போயிருக்காங்க. உச்சகட்டக் கொடுமையா... ஒரு மூதாட்டிகிட்டயிருந்து செயினை அறுக்கும்போது அவங்க கழுத்துல பெரிய காயமாகி, ஆஸ்பத்திரியில அட்மிட் பன்ணின மூணாவது நாள் பரிதாபமா செத்துப் போயிட்டாங்க'' என்றபோது அவர் முகத்தில் மீளாத அதிர்ச்சியும் பயமும்.
இந்த மாதிரியான தங்க சங்கிலிப் பறிப்புகள் தமிழகம் முழுவதும் சர்வசாதாரணமான நிகழ்வாகிவிட்டன. சென்னையில் மட்டும், 2011 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து டிசம்பர் 20-ம் தேதி வரை 835 சங்கிலிப் பறிப்பு கேஸ்கள் பதிவாகியுள்ளன என்கிறது தமிழகக் காவல்துறை ரிப்போர்ட். கோவையில் நான்கு மாதங்களில் மட்டுமே 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. தென் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இம்மாதிரி யான குற்றங்களும் கொள்ளைச் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றன என்கிறது, நேஷனல் க்ரைம் ரெக்கார்ட் பீரோவின் அறிக்கை. 'அதிலும் 50 சதவிகிதத்துக்கும் குறைவான சம்பவங்களே புகார்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மற்றவை எங்கள் கவனத்துக்கு வருவதே இல்லை’ என்கிறது காவல்துறை.
சென்னை, வில்லிவாக்கத்தில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை சமீபத்தில் தனிப்படை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து வில்லிவாக்கம் சப் இன்ஸ்பெக்டர் காசிராஜன் பேசும்போது... ''வடமாநிலத்தில் இருந்து இதற்காகவே ஒரு டீமா... பசங்க கிளம்பி வர்றாங்க. இங்க ஏதாவது லாட்ஜ்ல தங்கியிருந்து கொள்ளையடிச்சுட்டு திரும்ப ஊருக்குப் போயிடுறாங்க. 21-25 வயசுக்குள்ள இருக்குற பசங்கதான் அதிகமா ஈடுபடுறாங்க. இப்ப பிடிபட்டிருக்கறவங்க சென்னையில கிட்டத்தட்ட 60-70 இடங்கள்ல சங்கிலிப் பறிப்புல ஈடுபட்டவங்க. இவங்க தமிழகத்துக்கு வர்றதுக்குக் காரணம், இங்கதான் பெண்கள் கழுத்துல அதிக பவுன் நகைகளைப் போட்டுட்டு இருக்காங்க. வடமாநிலத்துல இப்படி தங்க நகையை எப்பவும் போட்டுட்டுஇருக்கறது குறைவு'' என்று சொன்னார்.
இதைப் பற்றி பேசும் தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி.பி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ''சங்கிலிப் பறிப்பு அதிகமாக நடப்பதற்குக் காரணம், தங்கத்தின் அசாதாரணமான விலைதான். ஒரு சவரன் நகையை விற்றால் குறைந்த பட்சம் 15,000  கிடைக்கும். அதில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்பது முக்கிய காரணம். இதில் தொழில் திருடர்களைவிட மது, போதைப் பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களே அதிகம் ஈடுபடுகின்றனர்''  என்றொரு காரணத்தை முன் வைக்கிறார்.
''இதில் அதிகம் பாதிக்கப்படுவது முதியவர்கள்தானா..?'' என்ற கேள்வியை மறுத்த சைலேந்திரபாபு, ''வயதானவர்கள் மட்டுமில்லை... மதியம், மாலை வேலைகளில் ஸ்கூலுக்குக் குழந்தைகளைக் கூட்டிச் சென்று வரும் இளம் அம்மாக்கள், தனியாக வாக்கிங் போகும் நடுத்தர வயதுடையவர்கள் என இவர்கள் அனைவரும் 'எளிதில் அணுகக்கூடியவர்கள்’. நகரத்தின் மையப்பகுதியைவிட புறநகரில்தான் இந்த மாதிரியானக் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. குறுகலான வீதிகள், ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகள், கணவர், குழந்தைகள் ஆபீஸ் மற்றும் பள்ளிக்குச் சென்றதும் தனியாக இருக்கும் இல்லத்தரசிகள், முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருப்பது, எளிதில் தப்பிக்க வசதியாக இருப்பது என... புறநகரில் சங்கிலிப் பறிப்பு அதிகம் நடைபெறுவதற்கு இவையெல்லாம் காரணங்கள்'' என்றவர், சங்கிலிப் பறிப்பு நடைபெறுவதைத் தடுக்கவும், பாதுகாப்பாக இருப்பதற்குமான வழிகளைப் பகிர்ந்தார்.
''குற்றங்களைத் தடுப்பதற்காகவே ஸ்பெஷல் ஸ்குவாட்ஸ் சைக்கிள்களில் எப்போதும் ரோந்து வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் அதையும் மீறித்தான் இந்தக் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. பாதுகாப்பாக இருக்க பல உபாயங்கள் உள்ளன (பார்க்க   பெட்டிச் செய்தி). அதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடி யுங்கள்.
எளிய வழியாக, கையில் பெப்பர் ஸ்பிரே வைத்திருந்தால் இந்த மாதிரியான திருட்டுச் சம்பவங்களில் இருந்தும், பலாத்காரங்களில் இருந்தும் பாதுகாக்க உதவும்.
பெர்ஃபியூம் ஸ்பிரே போன்ற 'டின்’ பாட்டிலில் 'பெப்பர் ஸ்பிரே’ கிடைக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழகக் காவல்துறை, பெண்களின் பாதுகாப்புக்காகவே இதனை அறிமுகப்படுத்தியது. 3 அடி தூரத்தில் இருந்தே இதனை அடித்து எதிரியைத் தாக்க முடியும். இந்த ஸ்பிரே கண்ணில் பட்ட பிறகு எதிராளிக்கு மூன்று மணி நேரம் கண் தெரியாது என்பதால், அதிக பாதுகாப்பை அளிக்கும் விலை குறைந்த ஆயுதம் இது. இதன் விலை 300-500 வரை. இது பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கிறது'' என்று வழிகாட்டினார் சைலேந்திரபாபு!

சங்கியைப் பாதுகாக்க சைலேந்திரபாபு தரும் டிப்ஸ்!
அதிகாலையில் கோலம் போடும் பெண் கள், தனியாக இல்லாமல் அருகில் துணைக்கு ஒருவரை வைத்துக் கொள்வது, குற்றம் செய்ய வருபவர்களை யோசிக்க வைக்கும்.
வாக்கிங், வேலை என்று போகும் பெண்கள், குறுகலான சந்துகளில் நடக்காமல்... முடிந்தவரை பிரதான சாலைகளில் நடந்து செல்வது திருட்டு நிகழ்வதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
வாக்கிங் செல்லும் பெண்கள், தனியாகச் செல்லாமல் இரண்டு மூன்று பேர் சேர்ந்து செல்வது அனைத்து விதங்களிலும் பாதுகாப்பானதாக இருக்கும்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் சாலையில் 'முகவரி கேட்கிறேன்’ என்று அருகில் வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரண்டு, மூன்று முறை ஒரே பைக் உங்களைக் கடந்து சென்றால் அருகில் இருப்பவர்களிடம் விஷயத்தைச் சொல் 'அலர்ட்’ செய்யலாம்.
அதிக அளவில் நகைகளை அணிந்துகொண்டு வெளியில் செல்வது திருடர்களுக்குத் தூண்டுதலாக அமையும் என்பதால் அளவாக அணிந்துகொள்வது ஆபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
செயின் அணிகிற பலரும், உடைகளுக்கு மேற்புறமாக எல்லோருக்கும் தெரிகிறமாதிரி அணிந்துகொண்டு போவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தவிர்த்து உள்புறமாக அணிந்துகொள்வது நல்லது.
உறவினர்கள் வீட்டு விஷேசத்துக்காக பேங்க் லாக்கரில் இருந்து எடுக்கும் நகைகளை அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிரமம் பார்க்காமல், மீண்டும் பேங்க் லாக்கரில் சேர்த்துவிடலாம். 'அடுத்த மாதம் கோயில் திருவிழா இருக்கு. அதுவரைக்கும் போட்டுக்கலாம்’ என்று அத்தனை நகைகளையும் போய் வரும் இடங்களுக்கு எல்லாம் அள்ளிப்போட்டுச் செல்வது வேண்டாம்.
வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தின் தொலைபேசி எண்ணைத் தெரிந்து வைத்திருப்பது ஆபத்துச் சமயங்களில் கைகொடுக்கும்.


'எதிர்த்தால்தான் அடங்குவார்கள்!'
வழிப்பறித் திருடர்களைத் துரத்திச் சென்று தங்கள் உடைமைகளை மீட்ட டெல்யைச் சேர்ந்த இரு பெண்களுக்கு, சமீபத்தில் பாராட்டுச் சான்றிதழும் ரொக்கப் பரிசும் கொடுத்து கௌரவித்துள்ளார்  டெல் மேற்குப் பகுதியின் கூடுதல் போலீஸ் கமிஷனர் வி.ரங்கநாதன்!
''அன்று ஷாப்பிங் முடித்து, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவன் என் கைப்பையைத் பறித்துக்கொண்டு ஓடி, தயாராக இருந்த நண்பனின் பைக்கில் ஏறித் தப்பினான். ஒரு ஆட்டோவில் அவர்களைத் துரத்தினேன். ஒரு சிக்னல் அவர்கள் சிக்க, ஓடிச் சென்று அவன் சட்டையைப் பிடித்தபடி டிராஃபிக் கான்ஸ்டபிள்களை உதவிக்கு அழைத்து இருவரையும் மடக்கிவிட்டேன்.
பிடிபட்டவர்களில் ஒருவன் 10-ம் வகுப்பும், மற்றொருவன் பி.ஏ-வும் படிக்கும் மாணவர்கள். சினிமா, மால் என ஜாயாக பொழுதைக் கழிக்க திருடியுள்ளனர். இப்படியானவர்களிடம் நம் பெண்கள் ஒவ்வொரு முறையும் உடைமைகளை பறிகொடுத்துவிட்டு நிற்பதால்தான், அனுபவம் இல்லாதவர்களுக்கும் திருட தைரியம் வந்து விடுகிறது. நாம் சுதாரித்தால், அவர்கள் வாலை சுருட்டிக்கொள்வார்கள்!'' என்றார் ப்ரீத்தி.
இன்னொருவர், சீமா பரத்வாஜ். ''மார்க்கெட்டில் இருந்து என் அம்மாவுடன் வந்துகொண்டிருந்தேன். ஒருவன் என் செயினை சட்டெனப் பறித்து, அவன் சகாவின் பைக்கில் ஏறப்பார்த்தான். நான் அவன் பெல்ட்டின் பின்பகுதியை விடாமல் பிடித்துக்கொள்ள, அவர்களோ பைக்கில் என்னைக் கிட்டத்தட்ட 200 அடி தொலைவு இழுத்துச் சென்றனர். கால் முட்டி சிராய்த்து, பெருவிரல் நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டியபோதும் பிடியை விடவில்லை. ஒரு தம் கட்டி அந்தத் திருடனைக் கீழே இழுத்து விட்டேன். விழுந்தவன் எழுந்து கைகளில் பிளேடுகளுடன் என்னை ஓடிவிடும்படி மிரட்டினான். அப்போதும் அஞ்சாமல் அவனுடன் நான் போராடத் தயாராக, பொதுமக்கள் ஓடிவந்து அவனை மடக்கினர்.
சிக்கிய திருடன், தனியார் வங்கியில் பணிபுரிபவன்! தான் வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையை ஜாயாக செலவு செய்துவிட்டு, அதை ஈடுகட்டுவதற்காக திருடியுள்ளான். இம்மாதிரியான வழிப்பறிகளில் மாட்டும்போது பப்ளிக்கை எதிர்பார்க்காமல் திருடனை எட்டிப் பிடிப்பது, கல்லை விட்டு எறிவது என முதல் ஸ்டெப்பை நாம்தான் தைரியமாக எடுக்க வேண்டும்'' என்றார் இந்த அனுபவசா.
அரசாங்கத்தையும் போலீஸையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல்... நாமும் களத்தில் இறங்கினால்தான்... நம்மையும், நகையையும் பத்திரமாக பாதுகாக்க முடியும் போல!
 thanks to aval vikatan 31/jan/2012

0 கருத்துரைகள்:

Post a Comment