இனி ஊருக்கு போக என்ன இருக்கு?

on Friday, June 22, 2012
என்னடி மருமகளே
என்று வாஞ்சையுடன்
அழைக்கும் அத்தைகள் இல்லை

ஏய் குந்தாணி
என்று வம்பிழுக்கும்
மாமன்கள் இல்லை

பள்ளிகூடமா போற
பாத்து போம்மா என்கிற
அக்கறை தாத்தாக்கள் இல்லை

இன்னும் பத்து நாள்ல சமைஞ்ச்சிடுவா போல இருக்கு
என்று ஆருடம் சொல்லும்
பாட்டிகள் இல்லை

எங்க வீட்டு மாடு கன்னு போட்டிருக்கு
என்று கண் விரிய சொல்லும்
பாவாடை சட்டைகள் இல்லை

அத்தைகள் எல்லாம்
நோக்கியா கம்பெனிக்கு போயிட்டாங்க
மாமாக்கள் எல்லாம் பட்டணத்து
ஓட்டல்களுக்குப் போயிட்டாங்க
தாத்தா, பாட்டி போயே போயிட்டாங்க

தெருவெல்லாம் வெறிச்சோடி கிடக்கு
வீடெல்லாம் பூட்டியே கிடக்கு
இனி ஊருக்கு போக என்ன இருக்கு?

1 கருத்துரைகள்:

Jadayu said...

உண்மைதான்! பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்போது, உறவுகள் விட்டுப்போகின்றன. புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. பணமே குறி என்ற எண்ணம் தீவிரமாக ஆட்கொள்ளும்போது , இந்த மாதிரி காலியான கிராமங்கள் தமிழகமெங்கும் உள்ளன என்பது நிதர்சனம்.

Post a Comment