2011 முதல் 2020 வரை... வாழ்க்கைக்கு உதவப்போகும் வகையான படிப்புகள்!

on Thursday, August 18, 2011
2011 முதல் 2020 வரை...

வாழ்க்கைக்கு உதவப்போகும் வகையான படிப்புகள்!
தென்றல்
 எவ்வளவு வேணும்னாலும் பணத்தை செலவழிக்க நான் ரெடி!’' என்றபடிதான் மகளையோ... மகனையோ படிக்க வைக்கிறார்கள் பெற்றோர். ஆனால், படித்து முடித்ததும் எல்லோருக்குமே உருப்படியான வேலை கிடைத்துவிடுவது இல்லை. அந்தச் சமயத்தில்தான், ''நான் அப்பவே சொன்னேன்... அந்த கோர்ஸ் வேண்டாம்னு!'' என்று திசைக்கு ஒன்றாக விமர்சனம் எழும்.
ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு, எந்த கோர்ஸுக்கு என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு களம் இறங்கினால்... வெற்றிதானே?!
2011 முதல் 2020-ம் ஆண்டு வரை வேலை வாய்ப்புப் பிரகாசமாக உள்ள 'வெளிச்சப் படிப்புகள்’ பற்றி, வேலைவாய்ப்புக்கென்றே இயங்கிவரும் இணையதளத்தின்  (naukri.com)எக்ஸிகியூட்டிவ் வைஸ்பிரசிடன்ட் சுரேஷ் இங்கே பகிர்கிறார்...
''அனைத்துத் துறை பட்டதாரிகளுக்குமே, அடுத்து வருகிற 10 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு, வழி முழுக்க தங்கச் சுரங்கமாகக் கொட்டிக் கிடக்கிறது'' என்று அசத்தும் நம்பிக்கையுடன் ஆரம்பித்த சுரேஷ் (இதுதானே வேணும் நமக்கு!),
''சர்வதேச மற்றும் இந்திய அளவில் இருக்கிற பொருளாதார, தொழில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் அடிப்படையில் பல துறைகளில் அதிக அளவு 'திறமையான மனித வளம்’ தேவைப்படுகிறது. அந்த வரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது உள்கட்டுமானத் துறை. இதில்... ரயில்வே, எரிபொருள் துறையான ஆயில் மற்றும் கேஸ், ஏர்போர்ட், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் தேவை அதிகம் இருக்கும். சிவில், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற இன்ஜினீயரிங் படிப்புகளையும் மற்றும் ஆர்க்கிடெக்சர் படிப்பையும் முடிப்பவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும்'' என்றவர், தொடர்ந்தார்...
''இரண்டாவது இடத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை! இத்துறையுடன் தொடர்புடைய கே.பீ.ஓ, பி.பீ.ஓ, ஐ.டி.ஈ.எஸ் ஆகியவற்றில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கும், ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் குரூப்பில் பி.எஸ்சி, எம்.எஸ்சி கம்ப்யூட்டர் படிக்கும் மாணவர்களில், ஆங்கிலம் பேசும் திறமை கொண்டவர்களுக்கும் வேலை நிச்சயம். இதுவரை ஆங்கிலம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும், கல்லூரி முதல் வருடத்தில்இருந்தே ஆங்கிலத்தின் அடிப்படையான இலக்கணத்தைக் கற்றுக் கொண்டாலே ஆங்கிலம் நாவுக்குள் அடங்கி விடும். காரணம், தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகில் 7.5 பில்லியன் பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது (அம்ம்ம்ம்மாடியோவ்!) என 'ஸ்பிரிங் போர்டு ரிசர்ச்’ என்ற அமைப்பின் சர்வே சொல்கிறது!'' என்று வழிகாட்டினார்.
தொடர்ந்தவர், ''மூன்றாவது இடத்தில் ஆதிக்கத்தை நிலை நாட்டியிருப்பது, பயோ டெக்னாலஜி. முன்னணி நிறுவனங்கள் இந்தத் துறையில் பணத்தை முதலீடு செய்து கொண்டிருப்பது வளர்ச்சிக்கான ஆதாரம். பி.எஸ்சி, எம்.எஸ்சி. கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, அக்ரி பயோடெக், ஃபார்மா-பயோ டெக் படிப்பவர்கள், இதில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறவர்கள் எல்லோரும் பயமில்லாமல் நிமிர்ந்த நன்னடை போடலாம்'' என்று சிரித்தவர், ''அடுத்து எந்தத் துறைக்கு இடம்?'' என்று நம்மிடமே கேட்க... ''ஆட்டோமொபைல்..?'' என்றோம்.
''அதற்கு முன்பாக நிற்கிறது ஃபேஷன் டிசைனிங்! கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் எல்லா வயதினருக்கும் ஆடைகள் மீதான ரசனை அதீதமாக வளர்ந்திருக்கிறது. ஃபேஷன் சம்பந்தப்பட்ட அனைத்துப் படிப்புகளும்... சோறு மட்டும் போடாது; பலமான விருந்தே வைக்கும்'' என்று ரசனையாகப் பேசிய சுரேஷ்,
''வாகனங்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால்... ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மட்டும் இல்லாது, அதில் டிப்ளமா, ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும் வாய்ப்பு மழை பொழிந்து கொண்டே இருக்கப்போகிறது!'' என்று அடுத்தடுத்து நம்பிக்கை தீபம் ஏற்றியவர், நிறைவாக சொன்னது -
''வங்கி, இன்ஷூரன்ஸ், டெலிகாம் ஆகிய துறைகள் அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன. காமர்ஸ், அக்கவுன்டன்ஸி மற்றும் எம்.பி.ஏ படித்தவர்கள் இந்தத் துறைகளில் தடம் பதிப்பார்கள்!''

0 கருத்துரைகள்:

Post a Comment