அட...50 % ..!

on Wednesday, August 31, 2011

மக்கள்தொகையில் சரிபாதி இருக்கும் பெண்களுக்கு மக்கள் மன்றங்களிலும் சரிபாதி பங்கை ஏன் கொடுக்கக்கூடாது?' என்று அவ்வப்போது ஆவேசமாகப் பெண்ணுரிமைவாதிகள் முழங்குவதை நாம் கேட்டிருப்போம். அவர்களுடைய கோரிக்கை இன்று குறிப்பிடத்தக்க அளவில் நிறைவேறப் போகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஐம்பது சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. ஏற்கெனவே முப்பத்து மூன்று சதவிகித இடங்களை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் பெற்று வந்தார்கள். அது இப்போது ஐம்பது சதவிகிதமாக உயரப்போகிறது.
மத்திய அரசு, ஐம்பது சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு முன்பே பல மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப் பட்டுவிட்டது. பீகார், உத்தரகண்ட், இமாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இது நடைமுறையிலிருக்க... கேரளாவும் ராஜஸ்தானும் அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன.
'மகளிருக்கு இந்த அளவு இடஒதுக்கீடு வழங்குவதால் என்ன மாற்றம் வந்துவிடும்?. குழப்பம்தான் ஏற்படும்' என்று சிலர் குறை சொல்வதையும் நாம் கேட்கிறோம்.
'ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டினால் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளுக்கு வந்துள்ள பெண்கள் என்ன சாதித்துவிட்டார்கள்?' என்றும் அவர்கள் கேள்வி எழுப்புவதைப் பார்க்கிறோம்.
நீண்டகாலமாக அதிகாரத்தின் வாசனையே தெரியாமல் புறக்கணிக்கப்பட்டிருந்த பெண்கள், இப்போதுதான் அதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அதற்குள் அதைப்பற்றி குறைகூறுவது எந்தவிதத்திலும் நியாயமல்ல. இப்படி குறை சொல்பவர்கள், பெண்களுடைய முன்னேற்றத்துக்கு எப்போதுமே தடை கற்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது.
தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுகிற பெண்கள் பல்வேறு விதமான இடையூறுகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு பெண், உள்ளாட்சி அமைப்பு ஒன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட அவர் பொது நிகழ்ச்சிகளில் அந்த அதிகாரத்தோடு மேடையில் வந்து அமர்வதற்குக்கூட வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. நானே இதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக ஆன புதிதில் எனது தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சிகளுக்கு போனபோது இத்தகைய சம்பவங்களைப் பார்த்து அதிர்ந்து போனேன். அழைப்பிதழில் உள்ளாட்சி பிரதிநிதி என்ற விதத்தில் அந்தப் பெண்ணின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், மேடையிலோ அவருக்குப் பதிலாக கணவர்தான் அமர்ந்திருப்பார். கொடுமை என்னவென்றால் அவரே மேடையில் பேசவும் செய்வார்.
இப்படியரு சம்பவம் நடந்தபோது நான் வெளிப்படையாகவே அதை விமர்சித்து மேடையில் பேசினேன். மாவட்ட ஆட்சித் தலைவர் இப்படியான தவறுகள் நிகழ்வதை அனுமதிக்கக் கூடாது. பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உயரிய நோக்கத்தை சீர்குலைப்பதற்கு அதிகாரிகளே உடந்தையாக இருக்கக்கூடாது என்று நான் பேசினேன்.
எனக்குப் பிறகு பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த மேடையிலேயே அறிவிப்பு ஒன்றை செய்தார். இனிமேல் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி எதிலும் இப்படி நடக்காது என்று உறுதியும் அளித்தார்.
மகளிர் உள்ளாட்சி பிரதிநிதிகள், தமது உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக அதிகாரிகளை அணுகி முறையிடும்போது அவர்கள் இன்னமும்கூட அலட்சியமாகவே நடத்தப்படுகிறார்கள் என்பது வேதனையான உண்மையாகும். பெண்களின் உரிமை குறித்த விழிப்பு உணர்வு அதிகாரவர்க்கத்திடம் இல்லாததன் விளைவுதான் இது.
பெண்கள் ஒப்பீட்டளவில் பொறுப்புணர்வும், நேர்மையும் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. இன்று உள்ளாட்சி அமைப்புகள் என்பவை கிராம அளவில் பொதுவளங்களை பாதுகாக்க வேண்டிய கடமை கொண்டவையாக இருக்கின்றன. நிலத்தடி நீர் குறைவது, சுற்றுச்சூழல் நாசமாவது போன்றவற்றைத் தடுப்பதற்கு நாம் உடனடி கவனம் செலுத்தாவிட்டால்... இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கடுமையான உணவுப் பஞ்சத்தை சந்திக்க நேரிடும். இதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கே முக்கியமானது. உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருக்கும் பெண்களை இந்த விஷயத்தில் பயிற்றுவித்தோமேயானால் அவர்கள் நிச்சயம் நம்முடைய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.
பெண்கள் அதிக அளவில் இப்படி அதிகாரத்துக்கு வருவதில் இன்னொரு அனுகூலமும் இருக்கிறது. இன்றைய அரசியல் என்பது மிகவும் வன்முறை நிரம்பியதாக மாறியிருக்கிறது. பெண்கள் அரசியலுக்கு வருவதால்... அது பெருமளவில் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஊழலைக் கட்டுபடுத்துவதற்கும்கூட உதவும். எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் ஐம்பது சதவிகிதம் கொடுத்தால் மட்டும் போதாது. அனைத்து விதமான பிரதிநிதித்துவ அமைப்புகளிலும் பெண்களுக்கு இதே அளவு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நிர்வாகத்துறையிலும் அதைவிட முக்கியமாக நீதித்துறையிலும் சமவாய்ப்பைப் பெறவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியது பெண்களின் கடமை மட்டுமல்ல... இந்த நாட்டில் சமத்துவத்தை விரும்புகிற அனைவரது கடமையும்கூட.

Thanks:Aval vikatan

0 கருத்துரைகள்:

Post a Comment