பிஞ்சு மனசெல்லாம் நஞ்சு...!

on Wednesday, August 31, 2011
பிஞ்சு மனசெல்லாம் நஞ்சு...!
மீடியாக்களின் 'எல்லை தாண்டிய' பயங்கரவாதம் !
வாரக்கடைசி... விடுமுறை நாள் என்பதால் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர் சில சிறுவர்கள். அனில் கும்ப்ளேவாகத் தன்னை நினைத்துக் கொண்டுஇருந்தவன் பவுலிங் செய்ய, சச்சினாக முயற்சித்துக் கொண்டிருக்கும் பேட்ஸ்மன் ஓங்கி அடித்தபோது, பறந்து 'கேட்ச்' பிடித்துவிட்ட 'டோனி', பேட்ஸ்மேன் அவுட் ஆகிவிட்டதாகக் கூச்சலிட்டான். ஆனால், 'பந்து தரையில் பட்டுவிட்டது... அதனால், அவுட் இல்லை' என்று 'சச்சின்' கூற... கிரிக்கெட் விளையாட்டு, பாக்ஸிங் ஆக மாறிப்போனது.
நான் 'ரெட் ரேஞ்சர்டா' என ஒருவன் குத்த, பதிலுக்குக் குத்தியவன் 'டேய்... நான் ஸ்பைடர்மேன்டா...' என்று ஆக்ரோஷத்துடன் கையை விசுக் விசுக்கென்று காற்றில் ஆட்டினான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவுக்கு, 'என்னென்னமோ பேர் சொல்றானுங்களே...' என்று ஒன்றுமே புரியவில்லை.
ஓங்கிக் குத்தியவன் 'எப்பூடீ...' என்று சொல்ல... அடி வாங்கியவன் 'போடாங்... ' என்று 'வைகைப் புயல்' வடிவேலுவை இமிடேட் செய்தான். தாத்தா வுக்கு மயக்கமே வருவது போல் இருந்தது.
"அடச்சே! இந்த சினிமா, டி.வி... இதெல்லாம் குழந்தைகளை எப்படியெல்லாம் கெடுத்துருச்சு... பேசுற பேச்சுலஇருந்து, சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் டி.வி. சொல்றதைத்தான் கேக்குறானுங்க' என்று புலம்பிக்கொண்டே நகர்ந் தார் தாத்தா.
எல்லாத் தெருக்களிலும், வீடுகளிலும் தினம் தினம் நடக்கும் காட்சிகளில் ஒரு பதிவுதான் இது.
'தொலைக்காட்சி, சினிமா, இன்டர்நெட் ஆகிய ஊடகங்களின் மூலம் எதிர்மறையான பாதிப்புகளே அதிகமாக இருக்கின்றன' என்று கதறுகின்றன ஆய்வு முடிவுகள். "டி.வி. பார்த்துதான் உன் மார்க் குறைஞ்சு போச்சு" என்று தன் பிள்ளைகளைத் திட்டாத பெற்றோர்கள் குறைவு.
'பொழுதுபோக்காக இருந்த மீடியா, இன்று பிள்ளைகளின் வாழ்க்கையை பிரச்னைக்குரியதாக்கும் அளவுக்கு தாக்கம் பாய்ச்சிக் கிடக்கிறதே...?' என கவலைக்குரிய அந்த விஷயம் பற்றி குழந்தைகளுக்காகவே இயங்கிவரும் நாடகக் கலைஞர், வேலு சரவணனிடம் கேட்டோம்.
"குழந்தைங்களுக்கு அவங்க கண் முன் கிடைக்கிற ஒவ்வொரு விஷயமும் புதுசானது... ஆச்சர்யமானது. அப்படி புதுசா கிடைக்கற விஷயங்களைக் கத்துக்கணும்ங்கற வேட்கையோட இருக்கறவங்களுக்கு என்ன விஷயம் கிடைக்குதோ, அந்த விஷயத்தோட தாக்கம் இருக்கத்தான் செய்யும். அந்த விஷயம் நல்லதா, அல்லதாங்கறதுதான் முக்கியம்.
ஒரு வீட்டுல அப்பா, காமெடி டி.வி. பார்த்துட்டு இருக்கார். இப்ப வர்ற பெரும்பாலான காமெடியில 'காம'நெடிதான் அதிகம். அப்போ, ஆட்டோமேட்டிக்கா அப்பாகூட சேர்ந்து அதை பார்த்துட்டு இருக்கற குழந்தைக்கும் அதோட பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அம்மா, சீரியல் பார்க்கறாங்க. கூட உக்கார்ந்து பார்க்கற குழந்தைக்கு, அந்த நிழல் பிம்பங்கள்தான் வாழ்க்கையின் நிஜ பிம்பங்கள்ங்கற எண்ணம் வரும். இப்ப வர்ற சீரியல்கள்ல... வில்லி வேலை பார்க்கற பாட்டி, முறையற்ற உறவோட திரியும் அத்தை, அம்மாவை ஏமாத்தற அப்பா... இப்படிப்பட்ட சித்திரிப்புகள்தானே அதிகமா இருக்கு? எந்த வகையான மனிதர்களைக் குழந்தைகளுக்கு பெற்றோர் அறிமுகப்படுத்திட்டிருக்காங்க பாருங்க!
சரி, 'குழந்தைகளுக்கான சேனல் இருக்கே?!'னு அதை ஒரு நல்ல மாற்றா யோசிக்கவும் முடியாத அளவுக்கு, அதுலயும் எப்பவும் சண்டை போடுகிற ரேஞ்சர்கள், வீர சாகஸம் செய்கிற கேரக்டர்கள், காதல் பண்ற கார்ட்டூன் கேரக்டர்கள்னுதான் நிறைஞ்சு கிடக்கு. நல்ல நிகழ்ச்சிகளோட சதவிகிதம் மிக மிகக் குறைவு. இந்த மாதிரியான நிகழ்ச்சிகளைத் தயாரிக்கறவங்க, குழந்தைகளோட மனவியல் பற்றி தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்..." என்று அறிவுறுத்தியவர், மீடியாவில் குழந்தைகளுக்கான சரியான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னார்.
"இப்ப வர்ற கலை வடிவங்கள் குழந்தைகளைப் பற்றியதாத்தான் இருக்கே ஒழிய, குழந்தைகளுக்கானதா இல்லை (About the Children;not for the children). இந்தியாவுல குழந்தைகளுக்கான சினிமாக்கள், டி.வி. நாடகங்கள், பாடல்கள் குறைவு. பெரியவங்க எதைப் பாக்குறாங்களோ அதைத்தான் குழந்தைகளும் பார்க்க வேண்டிய சூழ்நிலை. அவங்க வயசுக்குத் தேவைப்படாத விஷயங்களை காண்பிக்கறதை விட்டுட்டு, குழந்தைகளோட உடல் ஆரோக்கியம், படிப்பு, ஒழுக்கம்னு எல்லாத்தையும் மனசுல வச்சுதான் எல்லா கலை வடிவங்களும் உருவாக்கப்படணும். அப்போ இந்த அறிவியல் ஊடகங்கள் ஆரோக்கியமான ஊடகங்களா உருவாகும். அதன்மூலம் கண்டிப்பா ஆரோக்கியமான குழந்தை சமூகம் உருவாகும்!" என்று நம்பிக்கையோடு சொன்னார் வேலு சரவணன்.
குழந்தைகளிடம் ஊடகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து, 'க்ரை' குழந்தைகள் அமைப்பின் சென்னை பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. அமைப்பின் குழந்தை உரிமை செயல்பாட்டாளரும், துணைப் பொதுமேலாளருமான கிருஷ்ணமூர்த்தி அதைப் பற்றிக் கூறுகையில், "மற்ற மீடியாக்களை எல்லாம்விட, டி.வி. மீடியத்தோட பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமா சமூகச் சிதைவை உருவாக்கி வருதுங்கறது உண்மை. 40% நுகர் வோர், தங்களோட வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குறதை குழந்தைங்கதான் தீர்மானிக்கறாங்க. 'ஜங்க் புட்'ங்கிற நொறுக்குத் தீனியை குழந்தைகள் அதிகம் சாப்பிட்டு 'ஒபிசிட்டி'ங்கற உடல் பருமன் கோளாறுக்கு ஆளாகறதுல விளம்பரங்களோட பங்கு அதிகம். இது மீடியாவால வர்ற உடல்நல பாதிப்பு.
தொலைக்காட்சியால ஏற்படற மனநல பாதிப்பு, அநேகம். வன்முறைதான் எல்லா பிரச்னைக்கும் தீர்வுங்கற மாதிரியான போதனைகளை இவை உண்டு பண்றதால, குழந்தையோட மனசுல வயலன்ஸ் விதைக்கப்படுது. இன்னொரு பக்கம், எமோஷனலான காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்க்கறதால உணர்ச்சிவசப்பட்டவர்களாக மாறி, சின்ன விஷயங்களுக்குக்கூட சுருங்கிப் போயிடறாங்க.
அம்மானா வீட்டு வேலை செய்யணும், துணி துவைக்கணும்... அப்பானா வேலைக்குப் போகணும், கிரிக்கெட் விளையாடணும்கற மாதிரியான விஷயங்களை விளம்பரங்களும் சீரியல்களும் திரும்பத் திரும்பக் குழந்தைக்கு சொல்லித் தர்றதால, அடுத்த ஜெனரேஷனுக்கும் இந்த பாலினப் பாகுபாடு மங்காம கடத்தப்படுது" என்று சொன்னவர், அடுத்து தொட்டுக் காட்டிய ஒரு விஷயம் ரொம்பவே சிந்திக்க வைப்பதாக இருந்தது.
"இப்போல்லாம் தொலைக்காட்சிகள்ல வர்ற ஆட்டம், பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் குழந்தைகளோட உலகத்துல ரொம்பவே மோசமான சலனத்தை உண்டு பண்ணிக்கிட்டிருக்கு. ஓடி விளையாடற வயசுல 'இந்தப் போட்டியில் நீ ஜெயிச்சே ஆகணும்'ங்கற மன அழுத்தத்தை, அதுல கலந்துக்கற குழந்தைகள் மேல புகுத்தறாங்க. அதைப் பார்க்கற குழந்தைகளுக்கு, 'தோத்துப் போயிட்டா அழணும்'ங்கற 'உன்னத' பாடத்தை சொல்லத்தான் போட்டியில தோக்கற அந்தக் குழந்தைகள் அழற காட்சிகளை அவ்ளோ சிரத்தை எடுத்து சேனல்கள் ஒளிபரப்பறாங்களோனு தோணுது!" என்று சொன்ன கிருஷ்ணமூர்த்தி,
"மொத்தத்துல, தொலைக்காட்சிங்கறது குழந்தை குழந்தையாக வளர்வதைத் தடுக்குது. ஒரு சின்ன பெட்டிதான்... ஆனால் பாதிப்புகள்? இதுக்கு சென்ஸார் வேண்டாமா..?!" என்று பல வருடங்களாக சுழன்று கொண்டிருக்கும் அந்தக் கேள்வியோடு முடித்தார்.
அரசாங்க சென்ஸார் வரும்போது வரட்டும். பெற்றோரைவிட சக்தியான சென்ஸார் வேறு ஏதும் இருக்கிறதா என்ன?!
டி.வி. பார்ப்பதைக் கட்டுப்படுத்த...
எந்தெந்த டி.வி-க்களில் என்னென்ன நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த நிகழ்ச்சிகள் குழந்தைக்கும் பிடித்திருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 1 முதல் 2 மணி நேரத்துக்கு மேல் டி.வி. பார்க்க அனுமதிக்காதீர்கள்.
வீடியோ கேம்ஸ் வாங்கித் தருவதற்கு முன்பு அதில் என்ன உள்ளது என்பதை நீங்கள் பாருங்கள்.
குழந்தையுடன் நீங்களும் அமர்ந்து டி.வி. பாருங்கள். அப்போது அந்த நிகழ்ச்சியின் சாதக பாதகங்களை குழந்தைக்குப் புரியும் விதத்தில் எடுத்துக் கூறுங்கள்.
டி.வி-க்கு பதில், ‘ராகுலோடு சேர்ந்து விளையாடு’ என்று குழந்தையின் கவனத்தை திசை திருப்புங்கள்.
நல்ல புத்தகங்களை வாசிக்க வையுங்கள். நாளடைவில் புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கம் ஏற்படும். கைகளுக்கு வேலை தரும் விஷயங்களையும் செய்யச் சொல்லுங்கள்.
‘டி.வி-யில் சாகசங்களை செய்பவர்களுக்கு அடி, காயம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள். அதையே நீ செய்தால் காயம் ஏற்படும்’ என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
வன்முறைக் காட்சிகள் வரும்போது யோசிக்காமல் டி.வி-யை அணைத்துவிடுங்கள். அதேசமயம், எதற்காக அணைத்தீர்கள் என்பதை குழந்தைக்குச் சொல்ல மறக்காதீர்கள்.
குழந்தைகளைப் பாதிக்கிற மாதிரியான நிகழ்ச்சிகளைக் கண்டித்து அதன் தயாரிப்பாளருக்குக் கடிதம் எழுதுங்கள்.


Thanks:Aval vikatan
 

0 கருத்துரைகள்:

Post a Comment