கர்ப்பிணியின் கேன்சர்... குழந்தையையும் தாக்கும் !

on Wednesday, August 31, 2011

கர்ப்பமடைந்த பெண்ணுக்கு இருந்த ரத்தப் புற்றுநோய், கருவிலிருந்த குழந்தைக்கும் பரவியுள்ளது. இதேபோல மார்பகப் புற்று நோயும் பரவும் ஆபத்தும் இருக்கிறது...'
- இந்தச் செய்தியை சமீபத்தில் செய்தித்தாளில் பார்த்ததும் 'கருவில் இருக்கும்போதே சிசுவுக்கு கோரமான புற்றுநோயா?' என்று அலறியது மனம். உடனடியாக புற்றுநோய் சிறப்பு மருத்துவர் விஜயராகவனிடம் இதுகுறித்த விளக்கங்களைத் தர வேண்டினோம்.
''புற்றுநோய் விஷயத்தில் இதுபோன்ற அதிர்ச்சியான, நம்ப முடியாத சம்பவங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. அதற்குக் காரணம், அந்நோய் கிருமியின் அசுரத்தனமான பரவும் இயல்பு. உதாரணமாக, மேல் உதட்டில் ஒருவருக்கு கேன்சர் இருந்தால், கீழுதட்டில் ஏதாவது புண் இருக்கும்பட்சத்தில், அங்கேயும் பரவ வாய்ப்புள்ளது. அதேபோல், கர்ப்பவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் உறவு கொள்ள நேரும் கணவருக்கும், ஆணுறுப்பில் புற்றுநோய் வரும்.
பொதுவாக, கருவிலிருக்கும் குழந்தை பதினாறு வாரங்களுக்குப் பின், நஞ்சுக்கொடி மூலம் தாயிடமிருந்து உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் 'லிம்போசைட்ஸ்' எனப்படும் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் கருவுக்கு இடம்பெயரும்போது, அம்மாவுக்கு ரத்தப்புற்று நோய் இருந்தால், அது குழந்தையையும் தாக்கும். செய்திகளில் அடிபடும் ஜப்பானிய கர்ப்பிணிக்கு நடந்துள்ளதும் இதுதான்.
'தாய்க்கு நோயிருந்தாலும் பரவாயில்லை... குழந்தை வேண்டும்' என்ற வெளிநாட்டுக்காரர்களின் முட்டாள்தனமான மனோபாவத்தால்தான் இப்படியான சிக்கல்கள் எழுகின்றன'' என்று வருந்தியவர்,
''ஆனால், இந்தியாவில் கருவிலிருக்கும் குழந்தைக்கு தாயின் புற்றுநோய் பரவுவதற்கு வாய்ப்புகள் குறைவு. காரணம், கருவுற்ற தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டால், கருவை உடனே அழித்து விடுவார்கள். அதேசமயம், நம் கையையும் மீறி லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இத்தகைய ஆபத்து நேரவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அலட்சியமாகவும் இருந்துவிடக் கூடாது. அதனால்தான், கருவுற்ற 11 வாரங்களுக்குள் முதல் ஸ்கேன் எடுக்கச்சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்" என்று நம்பிக்கை ஊட்டினார்.
''கருவிலிருக்கும் குழந்தைக்கு கேன்சர் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய அடையாறு, கேன்சர் ஆஸ்பத்திரியில் ஏதேனும் சிறப்பு கவனிப்பு இருக்கிறதா?'' என அதன் இயக்குநர் டாக்டர் சாகரிடம் கேட்டோம்.
''கண்டிப்பாக! இந்த மாதிரியான கேன்சரைக் கண்டறிவதற்காகவே சிறப்பு பரிசோதனை எங்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு புதன்கிழமையும் நடக்கிறது. இதற்கென்றே 'ஹெரிடிட்டி கிளினிக்' என்று ஒரு பரிசோதனை கூடத்தை அமைத்தும் செயல்படுத்தி வருகிறோம்'' என்று சொன்னார்.
 
Thanks:Aval vikatan

0 கருத்துரைகள்:

Post a Comment