போராளி பாப்பா !

on Thursday, August 18, 2011
போராளி பாப்பா !

நாச்சியாள்
தனி ஒரு ஆளாக நின்று, ரயில்வேயில் மெஸ் நடத்தி கஷ்டப்பட்டு, தன்னை வளர்த்த அம்மாவின் மரணம்... அந்த மகளுக்கு எத்தனை பெரும்துயரம்! அதுவும், தொழிலாளர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் தாயும், மகளும் பங்கேற்று, கைதாகி சிறையில் இருக்கும்போது என்றால்... எத்தனை கொடுமை! இந்த நேரத்தில்... ''நீ இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளியில் செல்ல வேண்டுமானால், 'கம்யூனிஸ்ட் கட்சியில்இருந்து விலகுகிறேன்’ என்று கடிதம் எழுதிக் கொடு'' என்று அன்றைய ஆட்சியாளர்கள் ஆர்ப்பரித்தது கொடுமையிலும் கொடுமை! அப்போதும்கூட, ''கட்சியும் நான் கொண்ட கொள்கையும்தான் என் தாய்'' என்று உறுதியாக நின்று, பாச அம்மாவின் மரணத்தையும் மனவலிமையுடன் எதிர்கொண்ட போராளி... 'தோழர்' பாப்பா உமாநாத்!

கம்பீரமான தோற்றமும், ஆளுமையும், அன்பும் கலந்த இந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவரின் பெருமுயற்சியில் உருவானதுதான் 'அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்’. அதன் மூலம் பல ஆயிரம் வழக்குகளில் அயராது போராடி, அபலைப் பெண்களுக்கு நியாயம் வாங்கித் தந்த எளிய பெண்மணியான பாப்பா உமாநாத்... சமீபத்தில், தன்னுடைய 80-வது வயதில் இறந்து போனார்.
தற்போது ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலாளராக இருக்கும் உ.வாசுகி, இவருடைய மகள்தான். ''தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்வியல் உதாரணம் அவர். எப்போதும் ஏதாவது ஒரு போராட்டத்துக்காக பயணம் செய்து கொண்டே இருப்பார். 12 வயது சிறுமியாக திருச்சி, பொன்மலை ரயில்வே ஊழியர்களுக்காக ஆரம்பித்த அவரது போராட்டம்... மரண நிமிஷம் வரை ஓயவே இல்லை. உடல்நலம் இல்லாமல் இருக்கும்போது பார்க்கச் சென்றாலும், 'கட்சியில் எந்த வேலையை இடையில் நிறுத்திவிட்டு இங்கு வந்தாய் வாசுகி?’ என்று கண்டிப்புடன் கேட்பார். வாழ்நாளின் பெரும்பகுதியை ஜெயிலிலேயே கழித்தவர். என் அக்கா கண்ணம்மா இறந்தபோதுகூட ஜெயிலில் இருந்து பரோலில் வந்துதான் பார்த்தார். எளிய மக்களுக்காகவே இறுதி வரை இயங்கிய அவரைப் போல ஒரு தலைவரும், அம்மாவும் கிடைப்பது மிக அரிது!'' என்றபோது, உள்ள உறுதியையும் மீறி உடைகிறது வாசுகியின் குரல்.
சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி... ''தோழரைப் பற்றி, 'லட்சிய நதியாய்...’ என்றொரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் எழுதினேன். விமர்சனங்களோடு எழுதப்பட்ட புத்தகம். என்றாலும், ஒரு தாய் அன்போடு என் எழுத்துக்களை மதித்தார். எப்போதும் கடிதம் எழுதியே கட்சியினரிடையேயான உறவை உயிரோட்டமாக வைத்திருப்பவர், இப்போது நிரந்தரமாக உறங்கச் சென்றுவிட்டார்!'' என்று முடித்தபோது, பகலிலும் வானம் இருண்டு இருந்தது!

0 கருத்துரைகள்:

Post a Comment