வேண்டாமே 'ப்ளூபிரின்ட்' மோகம்!

on Tuesday, January 24, 2012


நாச்சியாள்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
 
எல்லா விஷயங்களிலும் ஷார்ட் கட் தேடுவது, மனித இயல்பாக மாறிப்போயுள்ளது. அதே மனநிலை மாணவ சமுதாயத்திடமும் புழங்குவது, வருத்தத்துக்குரியது. அது, அவர்களின் கேள்வி அறிவையே மழுங்கடித்துவிடும் என்பது கவலைக்குரியது!
ஆம்... பரீட்சைக்குப் பாடங்களை முழுமையாக, சிறப்பாகப் படிக்க வேண்டும் என்கிற அடிப்படை மறந்து, 'போன வருஷ கொஸ்டீன் பேப்பரை மட்டும் படிச்சுட்டா போதும்’, 'இந்தப் பாடத்துல முக்கியமான ரெண்டு பெரிய கேள்வியை மட்டும் படிச்சுக்கிட்டா சாய்ஸ்ல தப்பிச்சுடலாம்...’ என்றெல்லாம் அவர்களே அபத்த கணக்குகளை வகுத்துக்கொள்வது இங்கே கண்கூடு.
இதைவிடக் கொடுமையாக... பள்ளிக் கல்வித்துறையிலிருந்து மாணவர்களின் அறிவை சோதிக்கும் விதமாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 'ப்ளூபிரின்ட்’ எனப்படும் கையேட்டை, சில ஆசிரியர்கள், மாணவர்களுக்குக் கொடுத்து 'இதைப் படிங்க...’ என்று வலியுறுத்திச் சொல்வதும், 'இதை மட்டும் படிச்சா போதும்’ என்று மாணவர்கள் கொள்கை முடிவு எடுப்பதும், தவறான வழக்கமாகிக் கொண்டுள் ளது.
இந்த ஆபத்தான போக்கிலிருந்து மாணவர்களை விடுவிப்பது என்பது, பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் முன் இப்போது மிகப்பெரிய சவாலாகவே எழுந்திருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் இந்த 'ப்ளூபிரின்ட்’ மேனியாவைக் களைந்து, உண்மையைப் புரிய வைக்கும் அக்கறையுடன் பேசுகிறார் ஆசிரியையும், பட்டிமன்றப் பேச்சாளருமான இந்திரா....
''ப்ளூபிரின்ட் என்பது, டீச்சர்ஸுக்கான கைடன்ஸ். ஒரு பாடத்தில், 'சிலபஸ்’தான் முக்கியம். உதாரணமாக, பயாலஜியில் 'செல்’ என்பதுதான் பாடம் என்றால், 'செல்’லைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள என்னென்ன பகுதிகள் இருக்க வேண்டும் என்பதை 'சிலபஸ்’ஸில் குறிப்பிடுவார்கள். அந்த 'செல்’ பாடத்தை மாணவன் சரியாகப் புரிந்து இருக்கிறானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவனின் புரிதல் திறன், புரிந்து கொண்டதைப் பயன்படுத்தும் திறன், அறிவுத் திறன்... இவற்றையெல்லாம் சரியாக வெளிக்கொண்டு வரும் கேள்வித்தாளின் 'சயின்டிஃபிக் ஃபிரேம்’தான் ப்ளூபிரின்ட்!
ஒரு பாடத்திலிருந்து மாணவனின் மேற்சொன்ன மூன்று வகையான திறன்களையும் அறிந்து கொள்ளும் வகையில் அந்தந்த பாடத்திலிருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு 'ப்ளூபிரின்ட்'டில் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக, 'செல்’ பாடத்தை மாணவன் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறானா என்பதற்கு ஒரு மார்க் கேள்வியில், 'செல்லின் வெளிச்சவ்வின் பெயர் என்ன?' என்பது போன்ற கேள்விகளும், 'செல்லின் நியூக்ளியஸை விளக்கி எழுது' என்பது போன்ற கேள்விகள் இரண்டு மார்க் கேள்வியிலும், 'செல்லின் வரைபடத்தை வரைந்து பாகம் குறி', 'மைட்டோகாண்ட்ரியா பற்றி விவரி' என்பது போன்ற கேள்விகள் ஐந்து மார்க் கேள்வியிலும் இடம்பெறும்.
இதேபோல் ஒவ்வொரு பாடத்துக்கும் கேள்வி கள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதை மாணவர்களிடம் பகிரும்போது, 'ப்ளூ பிரின்ட்' என்பதுதான், வரவிருக்கும் தேர்வுக்காக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளின் நகல் என்பதுபோல பாவித்துக்கொண்டு ஆசிரியர்கள் பேசுவதும், அதற்கு மட்டுமே மாணவர்கள் முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பதும், அதை ஆசிரியர்கள் அனுமதிப்பதும் பயனளிக்காது'' என்றார் இந்திரா.
''ஏன் பயனளிக்காது..?'' என்ற கேள்விக்கு, அழுத்தமாகப் பதில் சொல்கிறார்கள் நேற்று பள்ளி மாணவர்களாகவும், இன்று அண்ணா யுனிவர்சிட்டியில் டாப் ஸ்கோரர்களாகவும் இருக்கும் இரண்டு மாணவர்கள்.
முதலில் புவனேஷ், ''ப்ளூபிரின்ட் என்பதை நம்புற ஒரு மாணவன், தன்னோட திறமை மேல நம்பிக்கை இழக்கிறான்ங்கறதுதான் உண்மை. ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ப்ளூ பிரின்ட்டை, சில ஆசிரியர்களே ஸ்டூடன்ட்ஸ்கிட்ட கொடுத்து, 'இதைப் படி, பாஸ் ஆயிடலாம்’னு சொல்றாங்க. இந்த குறுக்கு வழிகாட்டல்ல படிச்சு வந்த மாணவர்கள் பலர், பின்னால கல்லூரியில ரொம்பவே சிரமப்படு றாங்க. உதாரணமா, ப்ளூபிரின்ட்ல இருந்ததுனு நியூட்டனோட மூன்று விதிகள் கேள்வியை மட்டுமே படிச்சு மார்க் வாங்கி வந்த மாணவர்களுக்கு, 'டைனமிக்ஸ்’ பாடத்தோட அடிப்படை கள் புரியறதே இல்லை. அதனால, காலேஜ்ல சரிவர படிக்க முடியாம, அரியர்ஸ் வைக் கிறாங்க.
எப்பவுமே ஒரு பாடத்தை முழுமையா படிக்கறதுதான் கல்லூரி, மேற்படிப்பு, வேலைனு வழி நெடுக கை கொடுக்கும். பாஸ் பண்றதுக்கே கஷ்டப்படும் சாரசரிக்கும் குறைவான ஸ்டூடன்ட்ஸ் வேணும்னா, ப்ளூபிரின்டை நாடலாம். நல்ல மார்க், நல்ல மேற்படிப்பு, நல்ல வேலைங்கிற கனவில் இருக்கறவங்க, நேர்மையா, முழுமையா படிக்கணும்!'' என்றார் நெத்தியடியாக.
அடுத்து பேசிய நவீன், ''மெக்கானிகல் இன்ஜினீயரிங்ல பல சப்ஜெக்ட்ஸ்ல நான் நூத்துக்கு நூறு மார்க்ஸ் வாங்கி டாப் ஸ்கோரரா இருக்கறதுக்கு, என்னோட பள்ளி அஸ்திவாரம்தான் காரணம். எல்லாப் பாடங்களையும் ஒரு வரிவிடாம முழுமையா படிச்சேன். முக்கியமா, எல்லாத்தையும் புரிஞ்சு படிச்சேன். அதனாலதான் ஃப்ரெண்ட்ஸ் சொல்றேன்... 'இந்தப் பாடத்துல இதை மட்டும் படிச்சா போதும்’, 'சில வருஷ கொஸ்டீன் பேப்பர் கலெக்ஷனை மட்டும் படிச்சா போதும்’னு மார்க்கை மட்டும் 'எய்ம்’ செய்து படிக்காதீங்க. எல்லாப் பாடங்களையும் முழுமையா படிச்சா, எப்பவும் நாமதான் வின்னர்ஸ்.
மதிப்புக்குரிய அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... மாணவர்களோட திறனுக்கு ஏற்பதான் கல்வித்துறை பாடங்களை வடிவமைச்சுருக்காங்க. அதனால அவங்களால படிக்க முடியும்னு நீங்க முதல்ல நம்பிக்கை வெச்சுக் சொல்லிக் கொடுங்க... தயவு செய்து ப்ளூப்ரின்ட் கொடுக்கவே கொடுக்காதீங்க!'' என்று பொறுப்புடன் முடித்தார் ஒரு சீனியராக!
முழுமையாகப் படிப்போம்... எளிமையாக ஜெயிப்போம்!

0 கருத்துரைகள்:

Post a Comment