மஞ்சளா புத்துக்கிடக்கும்
சூரியகாந்தி புவ
கிளி வந்து கொத்திடக்கூடாதுன்னு
மொட்ட வெயிலுல
வரப்ப சுத்தி டெப சுத்தினதுக்குப்
பரிசா கைநிறைய கண்ணாடி வளையல்
வாங்கிக் கொடுத்த அப்பா
சித்திர மாசம்
கோடை மழை பெஞ்சவுடன
பரீட்ச லீவுல வயலுக்கு
புழுதி ஊட்டினவனுக்கு
கூடவேயிருந்து மண்வெட்டி
புடிச்சதுக்கு
புரியவே புரியாத அல்ஜீப்ராவ
அரமணியில புரியவச்ச அண்ணன்
சிறுகமணி வயக்காட்டுல
சின்னாத்தா எல்லாரும் குடியிருந்து
களையெடுக்க
வேப்பமரத் தொட்டிலுல தூங்கின
ஆறு குட்டிப் பாப்பாக்களுக்கு
வேல முடியும் வர
அம்மாவயிருந்து தாலாட்டின அக்கா
தைமாசம் காலத்து மேட்டுல
புள்ளையார்கேணி வயலு
நெல்ழட்டிக்கும்போது
லாந்தர் விளக்கோட ஒட்டிநின்னு
வெளையாட்டுக் காட்டும்போது
பாவாட பத்திஎரிஞ்சு
காலு வெந்துபோக
பயந்துபோயி ஆயுசுவேண்டி
குலசாமிக்குப் போங்க வச்சு
மொட்டயடிச்சுகிட்ட அம்மா
குடநின்னு அழுத செகப்பி நாயி
காலு புண்ணப்பாத்து
புண்ணாக்கு சாப்பிடாம
சொணங்கிப் போன முத்துமாடு
சின்னசின்ன சந்தோசம்
எல்லாத்தையும் காவுவாங்கி நிக்குது
சிறப்புப் பொருளாதார மண்டலமாகிப்போன
புள்ளையர்கேணி வயலு
இனி என்ன இருக்கு ஊருக்குப் போக?

0 கருத்துரைகள்:
Post a Comment