பலாத்காரம் மட்டுமே பாலியல் அத்துமீறல்?

on Thursday, August 18, 2011
'வீட்டு அம்மா', 'டாக்டர் அம்மா’, 'டீச்சர் அம்மா’, 'மேனேஜர் மேடம்’ என எல்லா வேலைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஆனால், உலகம் முழுக்க உள்ள பெண்களுக்கு சொந்தமாக இருக்கும் சொத்துக்களின் மதிப்பு... வெறும் 1 சதவிகிதம் மட்டுமே என்பது, அதிர்ச்சியூட்டும் முரண்.
பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் இருக்கும் பெண்கள், இந்த நிலையை மாற்றுவதற்காக வேலைக்குச் செல்கிறார்கள்... சுயமரியாதையும், தன்னம்பிக்கையும், பொருளா தாரமும் உயரும் என நம்பி. ஆனால், அங்கேயும் பல்வேறு பிரச்னைகள். உச்சகட்டமாக பாலியல் தொந்தரவுகளையும் சந்திக்கிறார்கள் என்பது எத்தனை கொடுமை!
'' 'பாலியல் அத்துமீறல் என்றால் பலாத்காரப்படுத்துவது மட்டும் அல்ல... இரட்டை அர்த்த வசனங்கள், தவறான புகைப்படங்களைக் காண்பித்தல், சமிக்ஞைகள் காட்டுவது என அனைத்தும்
அடங்கியதுதான்' என்று ராஜஸ்தானைச் சேர்ந்த விசாகா என்ற பெண்மணி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றமே தெளிவுபடுத்தியிருக்கிறது. பெண்கள் பணிபுரியும் அலுவலக நோட்டீஸ் போர்டில் இதுபோன்ற வழிகாட்டும் நெறிமுறைகளை ஒட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், நீதித்துறை அலுவலகங்களில்கூட ஒட்டி வைக்கப்படவில்லை'' என்று சாடும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் உ.வாசுகி,
''உயரதிகாரிகளோ, உடன் பணிபுரியும் ஆண்களோ பாலியல் ரீதியாக துன்புறுத்தினால்... அதை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொள்
கிறார்களே தவிர, பெரும்பாலான பெண்கள் புகார் செய்வது இல்லை. இன்னும் டார்ச்சர் அதிகமாகிவிடும் என்கிற உளவியல் பயமும், இதனால் மானம், மரியாதை எல்லாம் போய்விடுமே என்கிற சமூக பயமும்தான் அதற்குக் காரணம். அதனால்தான், 'ஒவ்வொரு அலுவலகத்திலும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிக்க, விசாரணை கமிட்டியை உருவாக்க வேண்டும்’ என்று அதே விசாகாவின் தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனாலும், பெரும்பான்மையான அலுவலகங்களில் அது பின்பற்றப்படுவது இல்லை'' என்று நடைமுறையை விளாசினார்.
''மத்திய அரசின் பொதுத்துறை அலுவலகம் ஒன்றில், அதிகாரியின் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கொடுக்க, அப்பெண்ணுக்கு ஆதரவாக மாதர் சங்கம் போராடியது. இதையடுத்து, வஞ்சம் தீர்க்கும் வகையில் விடுப்பு மற்றும் சட்டரீதியிலான சலுகைகள் எதையும் கொடுக்காமல் அப்பெண்ணை துன்புறுத்திய அந்த அதிகாரி, பொய்க் குற்றச்சாட்டு அடிப்படையில் வேலையிலிருந்தே 'டிஸ்மிஸ்’ செய்தார். வழக்குத் தொடுத்து விடாப்பிடியாக நின்று அப்பெண் போராட, மீண்டும் வேலையில் சேர்க்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், இடைப்பட்ட காலத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளத்தையும் கொடுக்கச் சொன்னது. குற்றம் செய்தவரை சிறையில் தள்ளியது''  என வரலாறு சொன்ன வாசுகி,
''அலுவலகத்தில் மரியாதையாக நடத்தப்பட்டால்தான் பெண்ணால் திறமையாகவும் அதிகமாகவும் உழைக்க முடியும் என்பதை நிர்வாகங்கள் இப்போது புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளன. அதனால்தான் கார்ப்பரேட் கம்பெனிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இரவு பணி பார்க்கும் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணமும் புரிதலும் எல்லா நிறுவனங்களுக்கும் பரவ வேண்டும். அதற்கு பாலியல் கொடுமைகளைத் தடுக்கும் சட்ட மசோதா, விரைவில் சட்டமாக்கப்பட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!'' என்ற கோரிக்கையோடு முடித்தார்.
இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி அடுத்த இதழில்..!

0 கருத்துரைகள்:

Post a Comment