இப்படித்தான்.... இருக்கணுமா பொம்பள ? !

on Thursday, August 18, 2011
''ஏண்டி இப்படி ஆம்பள மாதிரி நிமிர்ந்து 'டக் டக்’னு நடக்குறே?’'
''ஏன் கொஞ்சம்கூட அடக்கமே இல்லாம இப்படி சிரிக்கிறே?’'
''பொண்ணா லட்சணமா, அடக்க ஒடுக்கமா இரு. அப்பத்தான் கல்யாணமாகிப் போற வீட்டுல நல்லபடியா வாழ முடியும்...'’
- இப்படியான வார்த்தைகளை எதிர்கொள்ளாமல் ஒரு பெண், இங்கு தன் வாழ்க்கை சக்கரத்தைச் சுழற்ற முடியாது.
இந்திய, தமிழ் இலக்கியங்களில்இருந்து, 'சினிமாஸ்கோப்’ வெள்ளித் திரை, சின்னத்திரை வரை பெண் என்றால் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற குணங்களுடன்தான் இருக்க வேண்டும் என்றே வரையறுத் துக் காட்டப்படுகிறது.
'ஹைடெக்’ யுகமாகப் பார்க்கப்படும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் 'பெண் என்றால் இப்படித்தான்’ என்பதில் அதிக மாற்றமில்லை. அண்மையில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான 'சோ’ ராமசாமிகூட ஒரு நிகழ்ச்சியில், 'கருணாநிதி பெண் போல புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா ஆண் போல் நிமிர்ந்து நிற்கிறார்' என்று ஆண்-பெண் தன்மை பற்றி காலகாலமாக தொடரும் கருத்துக்கு வலு சேர்ப்பது போலவே பேசியிருக்கிறார்!
'பூமிப் பந்தில் ஆண்-பெண் படைக்கப்பட்ட நொடியிலிருந்து பெண்ணுக்கான குணம், பண்பு இதுதான் என்ற வரையறை தொடங்கிவிட்டதா? எப்போது இந்த கட்டுப்பாடும் இறுக்கமும் பெண் இனத்தின் மீது சுமத்தப்பட்டது?’ என்பது போன்ற பல கேள்விகளை 'எம்.ஐ.டி.எஸ்' (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்) நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியை முனைவர் ஆனந்தி முன் வைத்தோம்.
''பெண்ணுக்கான வரையறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் மீதான கலந்துரையாடலும் சிந்தனையும் அவசியமானது. பெண்ணைப் பற்றி சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பல தவறான கருத்தாக்கங்களிலிருந்து வெளிவர பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இது தேவையாகிறது'' என்று இதன் அவசியத்தை வலியுறுத்திய ஆனந்தி,
'''பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்பது இயற்கையாக வந்தது இல்லை. கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக, மத ரீதியாக 'கட்டமைக்கப்பட்ட’ விஷயம்.
சங்ககாலத்தில் ஆணும் பெண்ணும் சமமான வேலைகளைத்தான் செய்துகொண்டு இருந்தார்கள். ஒரு ஆண் வேட்டையாடும்போது பெண்ணும் வேட்டையாடியிருக்கிறாள். அந்த சமயத்தில், 'நீ பொம்பள. நிமிர்ந்து நின்னு வேட்டையாடதே...’ என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்திருந்தால், அந்த வேட்டுவச்சி சாத்தியமாகியிருக்க மாட்டாள்.
20, 25 ஆண்டுகளுக்கு முன்பு 'பெண் என்றால் படிதாண்டி  எங்கும் போகக் கூடாது’ என்கிற விதிமுறை இறுக்கமாக இருந்தது. ஆனால், அந்தக் கட்டுப்பாடு, பக்கத்துக் கிராமத்துக்குச் சுள்ளி பொறுக்கவும் களையெடுக்கவும் போகும் பெண்களுக்கு இருந்தது இல்லை.
இந்திய பெண்ணுக்கும், இயற்கையோடு இணைந்து வாழ்கிற ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் இடையே இருக்கிற 'பெண் வரையறை’ ஒரே மாதிரி இல்லை. ஆனால், உலகம் முழுக்க பெண் என்றால் ஒரே மாதிரியான படைப்புதானே?'' என்றவர்,
''19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சமூக சீர்த்திருத்தம், 'பெண் படிக்கலாம்; வேலைக்குப் போகலாம்; ஆனாலும் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்’ என்கிற நியதியை உருவாக்கியது. அதை சிரத்தையுடன் கடைப்பிடிப்பதற்கு ஏற்றவாறு பெண்ணின் சிந்தனையையும் செயலையும் இந்தச் சமூகம்தான் விரும்பியபடி வளர்த்தெடுத்தது. பெண்ணை இப்படியரு சங்கிலியில் பிணைத்து வைக்கவே சமூகம் விரும்புகிறது. எனவே, இந்த 'ஸோ கால்டு’ பெண்ணுக்குரிய குணங்கள் எல்லாம் இயற்கையானது அல்ல... செயற்கையாக உருவாக்கப்பட்ட விஷயமே!'' என ஆணித்தரமாக முடித்தார்.
'பெண்ணுக்கு இப்படியான குணங்கள்தான் இருக்க வேண்டும்’ என்பதில் உடல் அறிவியலின் காரணிகள் ஏதேனும் இருக்கிறதா?’ என மகப்பேறு மருத்துவரும் பா.ஜ.க.-வின் மாநில துணைத்
தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்டோம்.
''ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் தீர்மானிக்கின்றன. ஆனால், பெண் தன்மையையும் ஆண் தன்மையையும் ஹார்மோன்கள்தான் நிச்சயிக்கின்றன. பெண்ணுடலில் இருக்கும் 'ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன் பெண் தன்மையை வடிமைக்கிறது. கவனிக்க... பெண் தன்மை என்பது அச்சம், மடம், அடக்கம், ஒடுக்கம் என்பது இல்லை. அது, அந்தப் பெண்ணின் தோல் பளபளப்பு, கூந்தல் வளர்ச்சி, தசை வளர்ச்சி, பருவமடைதல், கர்ப்பமாதல், குழந்தை பிறப்பு போன்ற 'உடலுக்கு உள்ளே’ நடக்கும் விஷயங்களின் காரணகர்த்தா மட்டுமே! 'பெண் என்றால் குனிந்த தலை நிமிராமல் இருக்க வேண்டும், மென்மையாக இருக்க வேண்டும், மெதுவாக சிரிக்க வேண்டும்’ போன்ற 'பெண் குணங்கள்’ எல்லாம் பெண் உடலுக்கு வெளியே சூழலாலும் கலாசாரத்தாலும் கற்றுக் கொடுக்கப்பட்ட விஷயங்களே!'' என்று அந்த ஆதி அந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் அறிவியலால் அழுத்தமாக வெட்டினார் டாக்டர்!
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதியை, பெண்ணுக்கான போலி வரையறைகளை அறிந்த, அறுத்த அகத் தெளிவுடன் கொண்டாடுவோம்!

மாடல்: சரண்யா, படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்  , லோகேஷ்

0 கருத்துரைகள்:

Post a Comment