வரதட்சணையை ஒழிக்குமா மரண தண்டனை?

on Thursday, August 18, 2011
ரதட்சணைக்காக பெண்ணைக் கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ மற்றும் கியான் சுதா மிஸ்ரா இருவரும் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் கருத்து... பல ஆண்டு காலமாக இந்தக் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருவோரிடம் சின்னதாக ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை பாய்ச்சியிருக்கிறது!
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கீதா, 2000-ம் ஆண்டில் வரதட்சணைக்காக கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கு அது. பல கட்டங்கள் தாண்டி, கீதாவின் கணவருக்கும் மாமியாருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் முறையிட்டபோது, ஆயுள் தண்டனையை உறுதிசெய்த நீதிபதிகள், 'மரண தண்டனை' என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளனர். இப்படி...
'இந்த வழக்கு 304 பி (வரதட்சணை சாவு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் இது, இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 302-ன் (கொலை) கீழ் பதிவு செய்யப்பட வேண்டிய வழக்கு. இதுபோன்ற குற்றத்துக்கு மரண தண்டனை விதிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 302-வது பிரிவின் கீழ் இது பதிவு செய்யப்படாததால், எங்களால் அப்படி தண்டனை தரமுடியவில்லை'.
தீர்ப்பு பற்றி ஆதங்கத்தோடு பேசும் ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழகப் பொதுச்செயலாளர் உ.வாசுகி, ''வரதட்சணை வழக்குகளில் பெரும்பாலும் தாமதிக்கப்பட்ட நீதியே வழங்கப்படுகிறது. கீதா விஷயத்திலும் அதுவே நடந்துள்ளது. இந்த பத்து ஆண்டுகளாக கீதாவின் பெற்றோர், நீதிமன்ற வாசலில் துயரங்கள் சுமந்து தவம் கிடக்க வேண்டியிருந்ததே... அதற்கு என்ன பரிகாரம்? இந்த வழக்குதான் என்றில்லை... 2008-ல் 8,172 வரதட்சணை சாவு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் வெறும் 33.4 சதவிகித வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு கிடைத்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில், பொருளாதாரத்தில், கலாசாரத்தில், நாகரிகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கும் நம் நாட்டில்தான், கடந்த பத்து வருடங்களில் வரதட்சணை சாவுகள் 14.4 சதவிகிதம் அதிகரித்துள்ளன என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
வெறும் பணத்துக்காக எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தும், விஷம் கொடுத்தும், அடித்துத் துன்புறுத்தியும் ஒரு பெண்ணைக் கொலை செய்யும் சமூகம் நாகரிகமானதா?
வரதட்சணை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியும் அதே நிலைதான் நீடிக்கிறது. எனவே, ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக்குவதில் தவறில்லை!'' என்று தன்னுடைய கோபத்தைப் பதிவு செய்தார் வாசுகி.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அஜிதா, இந்தத் தீர்ப்பு பற்றி பேசும்போது, ''அந்த இரு நீதிபதிகளும், மக்கள் மனதில் ஓர் அச்சத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையில்தான் இப்படி தீர்ப்பு எழுதியுள்ளனர். ஆனால், நீதிமன்ற நடைமுறைகளை மாற்றி, வழக்குகளை சீக்கிரம் முடிப்பதற்கு வழி செய்தால், அதுவே மாற்றத்துக்கான வழியாக இருக்கும். பெண்ணை சாகடித்துவிட்டு, 'வரதட்சணை கேஸ்தானே... எப்படியும் பத்து பதினஞ்சு வருஷம் இழுக்கும்... பார்த்துக்கலாம்...' என்ற குற்றவாளிகளின் மனநிலைதான் இதுமாதிரியான குற்றங்கள் பெருகக் காரணம். அம்மாதிரியானவர்களுக்கு கடும்தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும்.
அதேசமயம்... தண்டனையை விட, அந்தக் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, மக்களின் மனதில் மாற்றம் உண்டாக வேண்டும். அதற்கு, வரதட்சணையால் ஒரு பெண்ணுக்கும், குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஏற்படும் தீமைகளையும், அதை தடுப்பதற்கான விழிப்பு உணர்வையும் பள்ளிப் பாடத்திலேயே இளம் தலைமுறைக்காவது கற்றுத்தர வேண்டும்'' என்று ஒரு வழியையும் சொன்னார்.

0 கருத்துரைகள்:

Post a Comment