"உண்மை சுடத்தானே செய்யும்!"

on Thursday, August 18, 2011
சாடும் சல்மா
விஞர் சல்மா... அரசியல், எழுத்து என்று இரு பெரும் தளங்களில் இயங்கும் கவனத்துக்குரிய பெண்!
திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இந்த ராஜாத்தி பேகம் என்ற ரொக்கையா, இன்று 'தமிழ்நாடு சமூக நல வாரிய'த்தின் தலைவி.
கல்யாண பந்தத்தில் இணைந்து, பாதியிலேயே வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கும் பரிதாபப் பெண்களின் வாழ்வை 'சல்மா' என்ற பெயரில் பதிந்து, நாம் அதிரும் வண்ணம் பார்வைக்கு வைக்கும் இவரின் எழுத்துக்கள், இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
'இதனைப் பெண் எழுதக் கூடாது' என்று எழுப்பப்பட்ட வேலிகளையெல்லாம் ஆவேசத்தோடு பிரித்தெறிந்துவிட்டு நடைபோடுபவர் சல்மா. பரவலாகப் பேசப்பட்ட, பாராட்டப்பட்ட இவருடைய நாவலின் தலைப்பு... கொஞ்சம் பயமுறுத்தக்கூடியதுதான். அது, 'இரண்டாம் ஜாமங்களின் கதை'!
''ராத்திரி என்பதை முதல் ஜாமம், இரண்டாம் ஜாமம் என்று பிரித்துச் சொல்வார்கள். இரண்டாம் ஜாமத்தில்தான் கனவுகள் அதிகமாக வரும். அப்படியான கனவுகள் விபரீதமானவை. அதேநேரத்தில் ஜாமம் என்ற சொல்லுக்குப் பச்சை நிறம், பஞ்சம் என்று வேறு அர்த்தங்களும் உள்ளன. சாந்தமும் - வன்மமும்; உறக்கமும் - விழிப்பும் என இந்த நாவலிலும் நேரெதிர் தன்மைகள் இருக்கின்றன என்பதைச் சொல்வதற்காக, தானாக வந்து விழுந்த வார்த்தைகள்தான் இரண்டாம் ஜாமம்.
என் சமூகப் பெண்களில் குறிப்பிட்ட அளவிலானவர்கள் படும் வலிகள், எதிர்நோக்கும் பிரச்னைகள், அவர்களின் சிறு உலகைச் சுற்றி இருக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள், அவர்களின் உடல் அரசியலாக்கப்படும் விதம், அவர்கள் எதிர்கொள்ளும் ஆண்களின் அசல் முகம், ஒரு பெண் விரும்பும் உண்மையான விடுதலை, கணவர்கள் வெளிநாடு செல்ல, இங்கு தனித்திருக்கும் மனைவிகளின் ஆசைகள், ஏக்கங்கள் என பல விஷயங்கள் வலிந்து சொல்லப்படாமல், அதன் போக்கில் சொல்லப்பட்டிருக்கும் நாவல் அது.
2004-ம் ஆண்டு வெளிவந்து, மலையாளம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்போது... ஹிந்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு வேலைகள் நடக்கின்றன. இதை என் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாக எடுக்கவில்லை. அதில் ஊறிக்கிடக்கும் உண்மைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். என் சமூகம்தான் என்றில்லை... உலக முழுவதும், எல்லா மதங்களிலும், இனங்களிலும் பெண்களின் பிரச்னை ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது இது. 2006-ல் ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் நடைபெற்ற மிகப்பெரிய புத்தக விழாவில் நான் சந்தித்த பல பெண் எழுத்தாளர்களும் இதையேதான் சொன்னார்கள். உலகம் முழுக்க பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகம்தானே?!'' என்று கவலையோடு சொன்ன சல்மா, சமீபகாலமாக பெண் எழுத்தாளர்கள் மிக மோசமாக விமர்ச்சிக்கப்படும் விஷயத்துக்கு வந்தார்.
''இதுவரை ஒரு ஆணின் பார்வையில் தான் பெண்களின் பிரச்னைகள், ஆசைகள், காதல், வலி, துயரம் என அனைத்து உணர்வுகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'என் வலி இதுதான், என் துன்பம் இதுதான்' என்று ஒரு பெண், தான் அனுபவித்ததை, எதிர்கொண்டதை எழுதும்போது அந்த மொழி... உண்மையால் நிரம்புகிறது. உண்மை சுடத்தானே செய்யும்?! அப்படி சூடுபட்டவர்கள், 'பெண் எழுத்தாளர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள்' என்கிறார்கள்!
எந்த படைப்புக்கும் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவைதான். ஆனால், சிலர் எழுத்தை மட்டும் விமர்சிக்காமல், சம்பந்தப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்து விமர்சிக்கும்போது, அந்தப் பெண்களில் சிலர் நத்தை போல் ஒடுங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதனால்தான் அதிகமாக பெண்கள் எழுத வருவதில்லை. நானும், எழுதியவற்றில் பலவற்றை சில சமயங்களில் கிழித்து விடுகிறேன்.
'கால் சென்டர்களில் பெண் இரவு நேர வேலைக்கும் போகலாம்' என்கிற மனமாற்றத்தையும், சுடிதார் பொது ஆடையாகிப் போன கலாசார மாற்றத்தையும் இந்த சமூகத்தை இப்போது ஏற்றுக்கொள்ள வைத்திருக்கும் நம்மால், இன்னும் முழுமையான மாற்றம் கொண்டு வர முடியும்... விடுதலையை விரும்பும் எல்லாப் பெண்களும் தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால்!'' என்று சொன்ன சல்மாவின் வார்த்தைகளில் ஆதங்கம் தங்கியிருந்தது!
-படங்கள்: வி.செந்தில்குமார்

0 கருத்துரைகள்:

Post a Comment