சூடு பறக்கும் 'சமச்சீர்' சர்ச்சை... |
இந்தக் கல்வி ஆண்டில் இனிதே நிறைவேறியிருக்கிறது 'சமச்சீர் கல்வி' கனவு! தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, மாநிலக் கல்வி, மெட்ரிக்குலேஷன், ஓரியன்டல், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என வெவ்வேறான பாடமுறைகளில் நடத்தப்படும் பள்ளிகளில்... ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுவான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
'அடுத்தடுத்த ஆண்டுகளில் எல்லா வகுப்புகளுக்கும் அமல்படுத்தபட உள்ளது சமச்சீர் கல்வி முறை. மெட்ரிக் என்ன, ஸ்டேட் போர்ட் என்ன..? பணக்காரர்களின் பிள்ளைகளுக்கும், பாமரர்களின் பிள்ளைகளுக்கும் இனி கல்வியில் இல்லை ஏற்றத்தாழ்வு...' என்று நம் நம்பிக்கை துளிர்க்கும் தருணம் இது.
ஆனால், இப்போது பெரும்பான்மையான மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், "இந்தப் பாடத்திட்டம் எங்கள் குழந்தைகளின் அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லை" என ஆரம்பத்திலேயே அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
என்னதான் நிலவரம்? பல தரப்பிலும் கருத்துக்களை சேகரித்தோம்.
பாடத்திட்ட தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவருமான கிறிஸ்துதாஸ், "சமச்சீர் கல்வி... அது படிக்கும் அத்தனை மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தமான விஷயம். ஆனால், அந்தப் பாடங்களை மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூன்று மாதங்களில் படித்து முடித்து விடுவார்கள். அத்தனை எளிமையானதாக இருக்கிறது. கல்வியின் தரத்தைக் குறைத்து, எப்படி சமச்சீரான கல்வியைக் கொடுக்க முடியும்..? இதைப் பற்றி ஆராய்ந்து, அரசுக்கு தெரிவிப்போம்" என்றார் கோப வார்த்தைகளில்.
புதிய பாடத்திட்டத்தை உருவாக்கிய குழுவின் உறுப்பினரான கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன், கிறிஸ்துதாஸின் கேள்விக்கு விரிவாகவே பதில் தந்தார்.
"பொதுவாக, ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும் முன், அதை படிக்கப் போகும் மாணவனின் வயது, திறன், ஆர்வம்... இந்த மூன்று விஷயங்களையும் மனதில் வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் என்ன நடக்கிறது..? 6 வயது குழந்தைகளுக்கு நடத்த வேண்டிய பாடத்தை, 3 வயது குழந்தையின் மூளையில் திணித்து விடுகிறார்கள். 6-ம் வகுப்பில் புரிந்து படிக்க வேண்டிய விஷயங்களை, 4-ம் வகுப்பில் மனப்பாடம் செய்ய வைத்து விடுகிறார்கள். இதனால்தான், சமச்சீர் கல்வி என்ற முறையில் இப்போது கொடுக்கப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு பாடங்கள், அத்தகைய குழந்தைகளுக்கு எளிமையாக உள்ளன. ஆனால், எதுவுமே படிப்படியாகத்தான் புரிய வைக்கப்பட வேண்டுமே தவிர, பிஞ்சிலேயே பழுத்தது என்பது போல, நம் குழந்தைகளை 'வெதும்பல்'கள் ஆக்கிவிடக்கூடாது'' என்று புரிய வைத்தவர்,
"காமராஜரால் 1964-ல் கொண்டுவரப்பட்ட முழுமையான இலவசக் கல்வியில், பொதுப் பள்ளிகளில் தமிழ்மொழியில் படித்தவர்கள்தான் இன்று அரசு அதிகாரிகளாக, தொழில் அதிபர்களாக, வங்கி அதிகாரிகளாக, விஞ்ஞானிகளாக உள்ளார்கள். காரணம், அந்தக் கல்வி முறை மனப்பாடம் செய்யும் கல்வி முறை அல்ல... ஒருவனை சிந்திக்க வைக்கும் கல்வி முறை. 1978-ல் கட்டணக் கல்வி முறை அனுமதிக்கப்பட்ட பிறகுதான், கல்வியை வைத்து சமூகத்தில் முன்னிலும் அதிகமான ஏற்றதாழ்வுகள் வரத் தொடங்கியுள்ளன. அதை சமன்படுத்த சமச்சீர் கல்விதான் ஒரே தீர்வு. இதனை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஷயத்தைப் எப்படி புரிந்து கொள்ளும் என்பதை உணர்ந்து, அதன் வயதுக்கேற்ப தயாரிக்கப்பட்டதுதான் சமச்சீர் கல்விப் பாடங்கள்" என்றார் அக்கறையுடன்.
'எல்லாக் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புகளையும் வசதிகளையும் கொடுத்தால், அனைவருமே திறமையானவர்களாகத்தான் வளருவார்கள். அதை அரசு கட்டாயம் செய்ய வேண்டும்' என குரல் கொடுத்துவரும் 'பொதுப் பள்ளிக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "செயல்வழி கற்றல் மூலம் கற்றுக்கொடுத்தால், இந்த சமச்சீர் பாடத்தை மாணவர்களுக்கு புகட்ட 155 நாட்கள் தேவைப்படும். ஆனால், பெரும்பான்மையான மெட்ரிக் பள்ளிகளில் விளையாட்டுக் கல்வி கிடையாது. லைப்ரரி கிடையாது. மாரல் வகுப்புகள் கிடையாது. கைவேலை பயிற்சி வகுப்புகள் கிடையாது. எப்போ தும் 'படி, மனப்பாடம் செய், டெஸ்ட் எழுது' என்று மாணவனை 'ரோபோ' போல செயல்பட வைக்கும் ஆசிரியர்கள், 3 மாதங்களில் பாடங்களை நடத்தி, மாணவர்களை படித்து முடிக்க வைப்பதில் ஆச்சரியம்இல்லைதான்.
ஆனால், 'பதினேழு வருஷமா இங்கிலீஷ் படிக் கிற... இன்டர்வியூல நாலு வார்த்தை இங்கிலீஷ்ல பேச முடியல..' என ஒரு விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இங்கிலீஷ் மீடியத்தில் கற்று வரும் பெரும்பாலான மாணவர்களை, அந்தப் பள்ளிகள் எந்த அளவுக்கு 'திறமை'யானவர்களாக வளர்த்து அனுப்புகின்றன என்பதற்கு இந்த விளம்பரம்தான் சான்று என்பதை மறந்துவிடக் கூடாது" என்று நிதர்சனம் சொன்னவர்,
"இந்த வருடம் வந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வுகளில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பொதுப்பள்ளிகளில் படித்து வந்தவர்கள்தான் என்பதை, 'இந்த பள்ளிதான் உசத்தியான பள்ளி' என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மீது ஆர்வம் காட்டும் பெற்றோர்களும், 'நாங்கதான் நல்ல கல்வி சரக்கை விற்கிறோம்' என்று கல்வியை வியாபாரமாக்குபவர்களும் சிந்திக்க வேண்டும்" என்றவர்,
"அரசு, இந்த சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு முன், அந்த ஆசிரியர்களுக்கு இதுகுறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு ஆசிரியர், தான் செய்கிற விஷயம் சரியானது என்பதை நம்பினால்தான், அவரால் முழுமையாக அந்தத் திட்டத்தில் ஈடுபட முடியும். அப்போதுதான் அதன் பலன் முழுமையாக மாணவர்களைச் சென்றுஅடையும்" என்று அழுத்தம் கொடுத்தார் பிரின்ஸ்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது குறித்து கேட்டபோது... "சமச்சீர் பாடத் திட்டங்களை தயாரித்த குழுவில் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்களும் இருந்தார்கள். பலரின் ஆலோசனையின் பேரில் பல படிநிலைகளில் தயாரிக்கப்பட்டதுதான் இந்தத் திட்டம். இதில் குறைகள் இருப்பின், அது ஆலோசனைகளாக சொல்லப்பட்டால், அது குறித்து சம்பந்தபட்ட குழுவுக்கு பரிந்துரை செய்வோம். நியாயமான ஆலோசனையாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கும் சமச்சீர் கல்வி குறித்து முறையான பயிற்சி அளிக்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட மாட்டோம்" என்று உறுதியாக சொன்னார் அமைச்சர்.
அரசாங்கம் சொல்லும், 'செயல்வழிக் கற்றல் முறை' என்பது உண்மையிலேயே குழந்தைகளை தற்சார்பு உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் என்றால், அதை இரும்புக் கரம் கொண்டாவது அனைத்துப் பள்ளிகளி லும் முழுமையாக அமல்படுத்துவதுதான் சரியாக இருக்கும். ஆனால், கல்விக் கட்டண விஷயத் தைப் போலவே இதிலும் 'வழ வழா... கொழ கொழா' என்று அரசு முடிவெடுத்தால்... அது பெற்றோர்களை மேலும் மேலும் குழப்பத்திலேயே ஆழ்த்தும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
|
|
|  |
0 கருத்துரைகள்:
Post a Comment