காசை கரைக்கும் கம்ப்யூட்டர் பில் குளறுபடிகள்... எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாளிதான்!

on Thursday, August 18, 2011
காசை கரைக்கும் கம்ப்யூட்டர் பில் குளறுபடிகள்...
எச்சரிக்கையாக இல்லாவிட்டால் ஏமாளிதான்!
'வசதிகள், வெரைட்டியான பொருட்கள் நிறைந்த டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் 'கம்ப்யூட்டர் பில்லிங்'கில் ஏகப்பட்ட குளறுபடிகள்...'
- ஏமாற்றப்பட்ட 'அவள்' வாசகிகள் பலர் தங்கள் ஆதங்கத்தை கடிதங்கள் மூலம் கொட்டியிருந்தார்கள்.
'கம்ப்யூட்டர் தவறு செய்யுமா..?' என்று நாம் குழம்பியபோது, கையில் பில்லோடு வந்தார் சென்னையைச் சேர்ந்த அகிலா.
"நான் ரெகுலரா 'அந்த' டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல தான் மளிகை சாமான் வாங்கிட்டு இருக்கேன். ஒருமுறை, கம்ப்யூட்டர் பில்லுல 16 பொருள்னு எழுதியிருந்துச்சு. ஆனா, நான் வாங்கினது 14 பொருட்கள்தான். கடைக்காரங்களே 2 'ஸ்க்ரப்பர்' எக்ஸ்ட்ரா போட்டுட்டு, அதுக்கும் சேர்த்து பில் போட்டிருக்காங்க. கேட்டா, 'பை மிஸ்டேக்' இது நடந்திருச்சுன்னு சொன்னாங்க.
அடுத்தத் தடவை, 2 அரை கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கியிருந்தேன். பில்லுல குவான்டிட்டியில '2'-க்குப் பதிலா, '4'-னு போட்டு, நாலு ஹார்லிக்ஸ் பாட்டில் போட்டு விட்டிருந்தாங்க. வீட்டுல வந்து பார்த்த நான், திருப்பிக் கொண்டு போய் கொடுத்தா, 'ரிட்டர்ன் எடுத்துக்க மாட்டோம்'னாங்க... ஏதோ நான் தப்பு பண்ணின மாதிரி" என்றார் எரிச்சலுடன்.
இதெல்லாம் சாம்பிள்தான்... எடையில் தில்லுமுல்லு, பழைய பொருட்களைக் கொடுத்து ஏமாற்றுவது, காலாவதியான பொருட்களைத் தலையில் கட்டிவிடுவது என்று தினம் தினம் வெவ்வேறு வகையிலான ஏமாற்றங்களைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் பலரும். ஆனால், 'கம்ப்யூட்டர் தப்பு பண்ணாது' என்ற நம்பிக்கையிலேயே, பில்லை வாங்காமலே வருபவர்கள்... அந்தக் கடை வாசலிலேயே பில்லை சுருட்டி வீசிவிட்டு வருபவர்கள்... பொருட்களில் இருக்கும் தயாரிப்பு தேதி மீது அக்கறை காட்டாதவர்கள் என்று நம்மில் பல ரும் அலட்சியமாக இருக்கும்போது, ஏமாற்றுக்காரர்களுக்கு கொண்டாட்டம்தானே?
''இனியாவது இதுபோன்ற விஷயங்களில் அக்கறைக் காட்டுங்கள்'' என்று சொல்லும், சென்னை, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் வி.நன்மாறன், ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சில வழிமுறைகளைச் சொன்னார்.
"சிம்பிளான வழிமுறை, கடைக்குப் போகும் முன்பே என்னென்ன பொருட்களை வாங்கறோம், அதுக்கு என்ன விலை இருக்கும்ங்கறதை தோராயமா ஒரு கணக்குப் போட்டுட்டு, பிறகு கடைக்குப் போறதுதான் நல்லது. இந்த மாதிரி பிரச்னைகள் வந்தா, உடனடியா சரி பார்க்கறதுக்கும் அதுதான் வசதியா இருக்கும். அதைவிட்டு, அங்க போன பிறகு, பார்த்தையெல்லாம் அள்ளிப்போடற ஆளா இருந்தா... நிச்சயமா, உங்க தலையில மொளகா அரைக்க வாய்ப்பிருக்கு. அதேபோல, பொருட்கள வாங்கினதும், கையில பில்லை வச்சுக்கிட்டு கடையிலயே சரி பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அல்லது கவுன்டர்ல கடை ஊழியர்கள் சரி பார்க்கும்போது, நீங்களும்கூட நின்னு சரியா இருக்குதானு செக் பண்றது, பிராக்டிக்கலா சரியான அணுகுமுறை" என்றவர், சில எச்சரிக்கை டிப்ஸ்களையும் தந்தார்.
"பில்லுல பொருட்களோட எண்ணிக்கையை அதிகமா போட்டு ஏமாத்தறது ஒரு வகைனா, பேக்கிங்ல பொருட்களோட எடையை குறைவா போடறது ஒரு வகை. ஒரு கிலோ பேக்கிங்ல 100-150 கிராம் குறைச்சு போட்டு ஏமாத்தறது... இப்போ பரலாயிட்டு வருது. நாமளும் பேக்கிங் அழகா இருந்தா, எடையும் சரியா இருக்கும்னு நெனச்சுட்டு வந்துடறோம். உதாரணமா, பாக்கெட்டை பிரிச்சதுக்கு அப்புறம் ஒரு கிலோ சர்க்கரையில 150 கிராம் எடை குறைஞ்சிருந்ததுனு கம்ப்ளெயின்ட் செஞ்சா, ஒப்புக்க மாட்டாங்க. அதை நிரூபிக்கறதும் கஷ்டம். அதனால, எந்தக் கடையில பொருள் வாங்கினாலும் அதுக்கான பில்லை பத்திரப்படுத்தி வைக்கறது நல்லது. அதோட, வீட்டுல சின்னதா எடை பார்க்கற தராசை வாங்கி வெச்சுக்கிட்டு, பாக்கெட்டைப் பிரிக்காம எடை போட்டுப் பார்க்கலாம். எடை குறைவா இருந்தா கடையில திரும்ப கொண்டு போய் கொடுத்து, சரியான எடை போட்டு பொருளை வாங்கிட்டு வரலாம்"என்று அறிவுறுத்தியவர்,
"தவறு நடந்திருக்கறது தெரிஞ்சா, கொஞ்சம்கூட தயக்கம் காட்டாம சம்பந்தபட்ட கடையில போய் நின்னா... நிச்சயமா உங்களுக்கான தீர்வு கிடைக்கும். அப்படி இல்லனா, உரிய ஆதாரங்களோட நுகர்வோர் அமைப்புகள அணுகினா, அவங்க உதவி செய்வாங்க. பொருட்களோட எடை விவகாரத்துல நீங்க தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருந்தா, 'எடை அளவு கட்டுப்பாட்டு அதிகாரி, 6-வது மாடி, தொழிலாளர் ஆணையர் அலுவலகம், டி.எம்.எஸ் வளாகம், சென்னை-6' என்ற முகவரிக்கு உங்க புகாரை அனுப்பலாம்" என்று நம்பிக்கை கொடுத்தார்!
-

0 கருத்துரைகள்:

Post a Comment