'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு'

on Thursday, August 18, 2011
நாச்சியாள், க.அமிர்தகணேசன்
'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்ற பழமொழியை தலைகீழாக மாற்றிருக்கிறார் கும்பகோணம் தாரசுரத்தை சேர்ந்த துர்கா என்ற தாய். ஒரே பிரசவத்தில் அழகான மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தவர், அக்குழந்தைகளை அநாதரவாகப் போட்டுவிட்டு ஓட, அவரைத் தேடிப்பிடித்து மீண்டும் அந்த அழகுக் குழந்தைகளின் தாயாக ஒப்படைத்திருக்கிறது காவல்துறை.
"ஏற்கெனவே நான் சத்தான சாப்பாடு இல்லாம, எலும்பும் தோலுமா இருக்கேன். இதுல மூணு குழந்தைகளுக்கு எப்படி பால் பத்தும்? நானும் எங்க வீட்டுக்காரரும் கூலி வேல பார்த்துதான் ஜீவனம் நடத்துறோம். இதுல மூணு பொம்பளப் புள்ளைகள வளர்த்துட முடியுமானு பயமாயிடுச்சு. இதெல்லாம்தான் என் மனச கல்லாக்கிருச்சு..." என்கிறார் துர்கா அழுகையுடன்.
துர்காவைப்போல 'குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமா..?' என்ற கேள்வியுடன் மருகும் பல இரட்டை, மூன்று குழந்தைகளை ஈன்ற 'அம்மா'க்களின் சார்பாக மகப்பேறு மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேட்டபோது, "ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளோ அதற்கு மேலோ பிறந்தால், அந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்குமளவுக்கு அம்மாவிடம் பால் சுரக்காது என்பது தவறான எண்ணம். இயற்கை, எத்தனை குழந்தை என்றாலும் பாரபட்சம் இல்லாமல் சத்துநிறைந்த பாலைக் கொடுக்கக்கூடிய சக்தியுடன்தான், தாய்க்குள் சரியான தகவமைப்பை உருவாக்கியிருக்கும். இதைத் தாய்மார்களும், அந்தத் தாயைச் சுற்றியுள்ள உறவுகளும் புரிந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் அளவுக்கு சத்தான உணவை எடுத்துக் கொண்டாலே பால் சுரப்பு நடக்கும்" என்று வாஞ்சையுடன் அறிவுறுத்தினார் டாக்டர்.
சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் இது தொடர்பாக கவலையோடு பேசியபோது, "கர்ப்பமானதிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து ஆலோசனை பெற்று வரும் கர்ப்பிணிகளுக்கு, பேறுகால உதவித் தொகையாக 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 'சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்'தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 15,200 ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது. டெபாசிட் செய்து, ஐந்து வருடத்துக்குப் பிறகு, அப்பெண்னின் கல்விச் செலவுக்காக வருடம் 1,500 ரூபாய் அந்தத் தொகையின் வட்டியாகக் கிடைக்கும். 20 வருடம் கழித்து, இந்த டெபாசிட்டின் மெச்சூரிட்டித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்'' என்று நம்பிக்கையூட்டிய அமைச்சர்,
"துர்காவைப் போல் ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள், மாவட்ட சமூக நல அதிகாரியிடம் ஸ்பெஷல் விதிவிலக்குப் பெற்று, மூன்று குழந்தைகளுக்கும் அரசின் டெபாசிட்டை பெற்றுக் கொள்ளலாம்!" என டானிக் வார்த்தைகளுடன் அனுப்பி வைத்தார்!
-படங்கள்: கே.குணசீலன்

0 கருத்துரைகள்:

Post a Comment