உங்க வீட்டுல 'வெயில்' அடிக்கணுமா....'காதல்' ஓடணுமா ?

on Wednesday, August 31, 2011
உங்க வீட்டுல 'வெயில்' அடிக்கணுமா....'காதல்' ஓடணுமா ?
அள்ளி அணைக்காவிட்டாலும் ....அடித்துத் துரத்தாதீர்கள் !
அம்மாவின் கசங்கிய முந்தியையும், அப்பாவின் கதகத உள்ளங்கையையும் பற்றி, சுற்றிச் சுற்றி வந்த வாண்டுகள்... ஒரு கட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் பிடியை விடுவித்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். கார்ட்டூன், ஸ்நாக்ஸ், பாட்டி, பெயின்ட்டிங் என்றிருந்த அவர்களின் ஆர்வம், அவர்களின் உடை, அவர்களின் அலங்காரம், நண்பர்கள் என்று வேறு ரூட்டில் மாற ஆரம்பிக்கும்! 'எல்லாம் எனக்குத் தெரியும்', 'என்னை ஏன் இப்படி எல்லாத்துக்கும் கம்பெல் பண்றீங்க..?', 'என் இஷ்டத்துக்கு விடுங்களேன்..' என்றெல்லாம் கொஞ்சம் கோபம், கொஞ்சம் அலுப்பு, கொஞ்சம் எரிச்சல் என வித்தியாசமான குரலில் பேசப் பழகுவார்கள்.
'என்னாச்சு உனக்கு... என்னையே எதிர்த்து பேசற..?' என்று அதிர்ச்சியடைய வேண்டாம் பெற்றோர்களே. உங்கள் வாண்டு, குழந்தை பருவத்திலிருந்து மெள்ள மெள்ள அழகான பதின் பருவத்துக்கு மன மற்றும் உடல் ரீதியாக மாறிக்கொண்டிருக்கிறான்/ள்!
இந்த ஆரம்ப வளர்ச்சி ஆரோக்கியமானதாக அமைந்தால்தான், குழந்தைகளின் முழு வாழ்க்கையும் ரம்மியமாக இருக்கும். இங்கு கொஞ்சம் பிசகினால்... பாதிப்படைவது குழந்தை மட்டுமில்லை, பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும்தான்! எனவே, இப்பருவத்தை இருதரப்பும் பதற்றமில்லாமல் கடப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த கன்சல்டிங் கிளினிகல் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் கீதாஞ்சலி சர்மா.
"இந்த வயதுதான் மண்பொம்மைகள் தயாரிப்புக்கான மண் போன்ற வயது. குழைவாக இருக்கும்போதே உருவாக்கும் பொம்மைகள்தான் பின்னாளில் அழகான பொம்மையாகக் காட்சியளிக்கும்.
இந்த வயதில் பள்ளிக் கல்வியால் ஏற்படும் மன அழுத்தம்தான் அவர்களுக்கு அதிகம். ஏனென்றால், இப்பருவத்தில் அவர்களுக்கு இரண்டு வகையான மனப்பான்மை இருக்கும். 'எதிலும் தான் மட்டுமே முதலாவதாக இருக்க வேண்டும்; காஸ்ட்லியான டிரெஸ், நகை, கம்ப்யூட்டர், செல்போன்தான் வேண்டும்' என்கிற 'ஹை ஆஸ்பிரேஷன்' ஒன்று.
இன்னொன்று, அதற்கு எதிரான 'என்னை விட்டா போதும்' என்கிற 'லோ ஆஸ்பிரேஷன்'. இதில் லோ ஆஸ்பிரேஷன் உள்ள குழந்தையை 'இதைப் படி... மியூஸிக் கிளாஸ் போ... ஆல் இண்டியா மெடிக்கல் என்ட்ரன்ஸ் எழுது...' என்று கட்டாயப்படுத்தினால், அவர்களுக்கு அதிக மனஅழுத்தம் ஏற்பட்டு, யாரோடும் ஒட்டாமல் தனிமையில் இருக்கவே விரும்புவார்கள். இத்தகைய நெகட்டிவ் மன ஓட்டத்தில் இருந்து மீட்பதுடன், அவர்களின் கெப்பாஸிட்டியை அறிந்து, அதற்கேற்ப கல்விச் சுமையை பேலன்ஸ் செய்யுங்கள்'' என்ற டாக்டர்,
"அதீத பிடிவாதம், சகிப்புத்தன்மை இல்லாதது, எல்லா விஷயங்களையுமே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற 'க்யூரியாசிட்டி'... இவையெல்லாம் இப்பருவத்தின் ஸ்பெஷல் குணங்கள். இவர்களிடம் நெகட்டிவ்வாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும், 'நீ உருப்படவே மாட்ட... பக்கத்து வீட்டு அஞ்சலிய பாரு, அஞ்சு மணிக்கே எழுந்து படிக்கிறா... நீயுந்தான் இருக்கியே...' போன்ற ஒப்பீடுகள், சின்னப் பொய்களுக்கும் கடும் தண்டனைகள் போன்றவை அவர்களை மனதளவில் பாதித்து, 'வெயில்' சினிமாவில் அப்பாவின் கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டே ஓடிப்போய் சீரழியும் மகன் கதையை உருவாக்கும்... ஜாக்கிரதை'' என்று எச்சரித்தவர், தொடர்ந்தார்.
"இவர்களின் அடுத்த பிரச்னை, அதீத துறுதுறுப்பு (ஹைபர் ஆக்டிவ்). ஓரிடத்தில் சில நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இவர்களின் இந்த துறுதுறுப்புக்கும் அறிவுக்கும் மைண்ட் கேம்ஸ், பெயின்ட்டிங் கிளாஸ் என தீனி போட்டு சமாளிக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு!
இதற்கு அப்படியே நேரெதிரானவர்கள், எதிலும் ஒட்டாமல், யாரோடும் பேசாமல், ஏகாந்த தனிமையை விரும்பும் டீன்கள். குறிப்பாக இவர்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள். இதற்கு காரணம்... ஒன்று, 'பகல் கனவு' காண்பது. மற்றொன்று, அவர்களின் மனது ஏதாவது ஒரு விஷயத்தினால் மிக மோசமாக பாதிப்படைந்திருக்கும். அம்மா அப்பாவின் சண்டை, அப்பாவின் குடி என இப்பட்டியல் நீளும். எனவே, அவர்களின் தனிமையைக் கண்டிப்பாக துடைக்குமளவுக்கு வீட்டின் சூழல், வீட்டு மனிதர்களின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்'' என்று வலியுறுத்திய டாக்டர், டீன்களின் முக்கிய பிரச்னையான எதிர் பாலின ஈர்ப்பு பற்றிய விஷயத்துக்குள் புகுந்தார்.
"காதல், எதிர்பாலின ஈர்ப்பு, பாலியல் நாட்டம் ... இவையெல்லாம் இவர்கள் மனதை ஆட்டிப்படைக்கும் விஷயம். இந்த வயதில் இது போன்ற இயல்பான அவர்களின் உணர்வுத் தேவைகள் (எமோஷனல் நீட்ஸ்), தண்டனைக்குரிய குற்றமல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 'அந்த பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியா..? அடப்பாவி... இந்த வயசுல என்ன நெனப்பு உனக்கு...' என்றெல்லாம் மிரட்டாமல், அவர்களின் உணர்வுகளை மலினப்படுத்தாமல், கொச்சைப்படுத்தாமல் இதமாக அணுக வேண்டும். அதேசமயம், அவர்களின் நடவடிக்கைகளில் கவனம் பதிக்கவும் தவறக்கூடாது. இல்லையென்றால்... 'காதல்' சினிமாக்காட்சிகள் நம் வீட்டிலும் 'ஓட' ஆரம்பித்துவிடும்! எனவே, இந்த விஷயத்தில் பெற்றோர் பிள்ளை என்ற எல்லையை எரித்து, இறங்கி வந்து அவர்களிடம் நிதானமாகப் பேசுங்கள். புரிந்துகொள்வார்கள்...'' என்ற டாக்டர் கீதாஞ்சலி சர்மா,
" 'வயசுப் புள்ளைய வச்சிருக்கது வயித்துல நெருப்பைக் கட்டிட்டிருக்க மாதிரி' போன்ற பதற்றத்துக்கெல்லாம் துளியும் அவசியமில்லை. இந்தப் பதின் பருவம்... நீங்கள் கடந்து வந்த அதே பதின் பருவம்தான்! எனவே, உங்களின் அந்தப் பருவ மாற்றங்களை அசை போட்டு, அப்போது உங்கள் பெற்றோர், உங்களைப் புரிந்துகொண்டதைப் போல உங்கள் பிள்ளைகளை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அப்போது உங்கள் பெற்றோர் உங்களை புரிந்து கொள்ளாமல் போன வருத்தம் உங்களுக்கு இருந்தால், அந்த வருத்தம் உங்கள் பிள்ளைகளுக்கும் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! அழகாக வளர்வார்கள் அந்த இளம் மனிதர்கள்!'' என்றார்!
வளர்ப்போம்!

0 கருத்துரைகள்:

Post a Comment