இந்திய பெண்களுக்கு இல்லை, பாதுகாப்பு !

on Thursday, August 18, 2011
அபாய மணி அடிக்கும் ஒரு சர்வே

நாச்சியாள்

'வயசு வந்த பொண்ணு இவ்வளவு நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்றியே, எவ்வளவு நேரம் வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்கறது..?’
'என்னங்க... இன்னும் மஞ்சு வீட்டுக்கு வரல, என்னமோ பயமா இருக்கு. காலேஜ் வரைக்கும் போய் பார்த்துட்டு வாங்க...’
'லீலா... ஆபீஸுக்கு பத்திரமா போய் சேர்ந்துட்டியா, அப்பாடா இப்பத்தான் நிம்மதியா இருக்கு!’
- பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை, நெஞ்சம் சுடும் பயத்தை சுமந்து கொண்டேதான் அலைகிறது நம் சமூகம்.
'பெண் பிள்ளைகளை பொத்தி வளர்க்கக் கூடாது...’ எனும் இருபத்தியோராம் நூற்றாண்டுக் குரல்களுக்கு இடையே, 'இல்லை... பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த இந்த பயங்களும் கவலைகளும் தேவையானவைதான், நியாயமானவைதான்’ என்கிற நிதர்சனத்தை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது... அண்மையில் லண்டனைச் சேர்ந்த 'தாம்ஸன் ரீயூட்டர்ஸ் பவுண்டேஷன்' தந்திருக்கும் அறிக்கை. 'பெண்கள் வாழ்வதற்கு அபாயகரமாக இருக்கும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், காங்கோ, பாகிஸ்தான் ஆகியவற்றை தொடர்ந்து நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது!’ என்கிற அவமானகரமான... அச்சமூட்டும் செய்திதான் அது!
''ஏன் பெண்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த நாடாகிப் போனது இந்தியா?'' என்ற கேள்வியை சமூக ஆர்வலர், பேராசிரியை சரஸ்வதியிடம் வைத்தோம்.
''பெண் என்றால் தகுதி குறைவானவள், பலமற்றவள், திறமையற்றவள் என்கிற சமூகத்தின் 'பொதுப்புத்தி’தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் எல்லாக் கொடுமைகளுக்கும் ஆணிவேர்'' என்று ஆரம்பித்தவர்,
''நம்முடைய கலாசாரம் ரொம்ப முரண்பாடானது. கும்பிடுகிற சாமிகளுக்கெல்லாம் துர்க்கை, பார்வதி, அம்மன் என்று பெயர் வைத்து பெண்ணை ஆகப் பெரிய சக்திகளாக உருவாக்குகிறவர்கள், 'வீட்டில் இருக்கும் மனைவியை, சகோதரியை அடித்துத் துன்புறுத்துவது தவறில்லை, அதுதான் ஆண்மையின் அழகு’ என்கிற கண்ணோட்டத்துடன் இருக்கிறார்கள். இதற்கு இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் வாழும் ஆண்களில் பலரும்கூட விதிவிலக்கல்ல. காரணம், காலம் காலமாக நம் வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் கல்விக்கூடங்களிலும் இந்தக் கருத்தைதான் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். இந்தச் சிந்தனை ஒவ்வொரு ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் ஆழமாக பதிய வைக்கப்பட்டிருப்பதால் பெண்ணை மிகத் தாழ்வாகவும் இழிவாகவும் கருதுகிற கலாசாரம் நம்மிடம் இயல்பான விஷயமாக இருக்கிறது'' என்று சாடியவர், தொடர்ந்தார்...
''ஆண்பிள்ளை, குடும்ப வரவைக் கூட்டக்கூடியவன். குடும்பத்தின் அனைத்து சொத்துக்கும் வாரிசு; பெண் பிள்ளை, சேர்த்து வைக்கிற சொத்துக்களுக்கு வரதட்சணை என்ற பெயரில் செலவு வைக்கும் செலவீனம் எனப் பார்க்கும் பெற்றோர்கள்தானே நம்மில் அதிகம்'' என்றவர், அடுத்த காரணத்துக்கு வந்தார்.
''ஒரு பெண்ணை, பிள்ளை பெற்றுத் தரும் இயந்திரமாகவும், பாலியல் இச்சையைப் பூர்த்தி செய்யும் மெஷினாகவும் பார்க்கும் மனோபாவமும்தான் பெண்ணுக்கு எதிராக நடக்கும் அனைத்து அநீதிக்கும் காரணம். நம் கல்வி முறையில், வாழ்க்கை முறையில் பெண்ணை மூன்றாம் தரமாகப் பார்க்கும் மனோபாவத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறோம்... அதனால்தான் பெண்ணை, பெண் குழந்தைகளை பாலியல் இச்சைக்காகக் கடத்துவதும், அதற்காக கொலை செய்வதுமான சம்பவங்கள் செய்தித்தாள்களின் எல்லாப் பக்கங்களிலும் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனையும் வெறும் செய்தியாகப் பார்த்துவிட்டு... அடுத்த வேலையை கவனிக்கப் போகும் ஆத்மாக்களாக ஆட்சியாளர்களும், சமூகத்தை வடிவமைப்பவர்களும் இருப்பதால்... பெண்ணுக்கு பாதுகாப்பான சூழ்நிலை நம் நாட்டில் எங்கும் இல்லை. அதனால்தான் 6 வயது குழந்தை தொடங்கி அறுபது வயதைக் கடந்த பெண் வரையிலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுகிறார்கள்!'' என்றார் வேதனையோடு.
''பெண்ணுக்கு அவள் உலகமென நம்பும் வீட்டிலாவது பாதுகாப்பு இருக்கிறதா? பாலியல் கொடுமைகளும், வரதட்சணை ஸ்டவ் வெடிப்புகளும், காதல் சம்பந்தமான கௌரவக் கொலைகளும் ஒரு பெண்ணுக்கு அவள் வீட்டில்தானே நடக்கிறது?'' என்று வேதனை நிறைந்த கேள்வியை எழுப்புகிறார் முனைவர் ரெஜினா பாப்பா. 'விமன் ஸ்டடீஸ்’ என்கிற பெண்ணியம் குறித்த கல்வியை தமிழ்நாட்டில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கொண்டு வந்த முன்னோடி இவர்.
''வீட்டுக்குள்ளும் பாதுகாப்பு இல்லை, படிக்கப் போகும் கல்விக்கூடங்களிலும் பாதுகாப்பு இல்லை, பாதுகாப்புத் தேடிப் போகும் காவல் நிலையங்களிலும் பாதுகாப்பு இல்லை, மத நிறுவனங்களிலும் பாதுகாப்பு இல்லை... என எங்கும் பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலைக்கு யார் காரணம்? நம் சமூக அமைப்புதான். உலக அளவில் இந்தியா வலுவான பொருளாதார சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறது; ஐ.டி. துறையில் பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. ஆனால், பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காத நாடு என்கிற நிலையில் பஞ்சம் நிறைந்த சோமாலியாவைவிட, தரம் தாழ்ந்து இருப்பது வெட்கக்கேடான விஷயம் என்பதை இளம் தலைமுறை யினராவது உணருவது அவசியம்!'' என்றார்.
அபாயகரமான... அவமானகரமான இந்த நிலையை மாற்றுவதற்காக பேராசிரியர் சரஸ்வதியும், முனைவர் ரெஜினா பாப்பாவும் ஒரே குரலாக பட்டியலிடும் சாத்தியமான வழிமுறைகள் இவைதான்-
''பல நூற்றாண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும், 'பெண் என்றால் இழிவானவள்’ என்கிற மனநிலையை மாற்றுவதற்கான கல்வியை, குழந்தையிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கிரிமினல் குற்றமாகக் கருதி, அதற்குக் கடுமையான தண்டனைகளைத் தரக் கூடிய சட்டங்கள் எந்த பாரபட்சமும் இல்லாமல் இயற்றப்பட வேண்டும்.
'பெண்ணை சக மனுஷியாக மதி’ என்கிற பிரசாரம் எல்லா இடங்களிலும் தீவிரமாக செய்யப்பட வேண்டும். அதேபோல் 'பெண் எதிர்ப்பு’ மனோபாவத்தை மாற்றக் கூடிய வாழ்க்கைக் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். பெண்ணுக்கும் சொத்து உண்டு என்பது இந்தியா முழுக்க சட்டமாக்கப்பட வேண்டும். இதையெல்லாம்விட மிக முக்கியம், ஒரு பெண், தன்னைத் தானே மதிக்கவும் உயர்வாகக் கருதவும் கற்க வேண்டும்!''

0 கருத்துரைகள்:

Post a Comment