நாச்சியாள்,
க.நாகப்பன்
க.நாகப்பன்
புத்தகங்களே...
புத்தகங்களே!
தயவுசெய்து
குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள்
புத்தகங்களே!
தயவுசெய்து
குழந்தைகளை
கிழித்து விடாதீர்கள்
- அப்துல் ரகுமான்
'பாடத்திட்டம் தரமானதாக இல்லாத காரணத்தால், சமச்சீர் கல்வி இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது' என்றொரு அறிவிப்பு... அதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக ஒரு வழக்கு... அங்கிருந்து அரசின் முடிவுக்கு எதிராக ஒரு தீர்ப்பு... உடனே உச்ச நீதிமன்றம் நோக்கி தமிழக அரசின் சார்பில் ஒரு ஓட்டம்... 'நிபுணர் குழு அமைத்து பாடத் திட்டத்தின் தரத்தை ஆராய்ந்து மூன்று வாரங்களில் பதில் தரவேண்டும்' என்று அங்கிருந்து ஒரு உத்தரவு...
ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், மூன்றாவது வாரத்தில்தான் திறக்கப்பட்டிருக்கின்றன. பாடம் என்று எதுவுமே நடத்தப்படாத பள்ளிக்கு... கையை வீசிக் கொண்டு பரிதாபமாகச் சென்று வருகின்றன குழந்தைகள்!
ஆசிரியர்களுக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்’ எனப்படும் பயிற்சி, ஒரே நாளில் (?) கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கற்றுக்கொண்டுவிட்ட (?) ஆசிரியர்கள், செயல்முறை கற்றல் கல்வி மூலம் பாடல்கள், நீதிக் கதைகள், மனக் கணக்குகள் என்று மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். 'வீட்டில் இருந்து தொல்லை கொடுக்காமல், அங்கே போய் உட்கார்ந்து வந்தால்கூட போதும்' என்று பெற்றோரும் தினமும் அனுப்பி வைத்துக் கொண்டுள்ளனர்.
''சரி, உண்மையிலேயே சமச்சீர் கல்விக் கான பாடங்களின் தரம் குறைவானதாகத்தான் இருக்கின்றனவா?'' என்றபடி, அந்த பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள் சிலரைச் சந்தித்தோம். இந்த இக்கட்டான சூழலில் தங்களின் பெயர்கள் வெளிவருவதை விரும்பதாவர்களாகப் பேசிய அவர்களின் குரலில், ஏகத்துக்கும் வேதனை யின் வலி.

''இத்தனைக்கும் வெறும் ஆசிரியர் குழு மட்டுமே ஓர் அறையில் அமர்ந்து கொண்டு இவற்றையெல்லாம் தயாரிக்கவில்லை. எழுத் தாளர்கள், குழந்தை மனநல மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேசிய அளவில் புகழ் பெற்ற நிபுணர்கள் என்று பலரையும் வைத்துத்தான் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
மெட்ரிக் பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் பாடத் திட்டத்தைத்தான் பெற்றோர் விரும்புகின்றனர் என்பதும் ஏமாற்றுவேலை. தங்களின் பணத்தேவைக்காக பெற்றோர்களையெல்லாம் அதற்கு பழக்கி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று தங்கள் கடின உழைப்பும் முயற்சிகளும் வீணாகிக் கொண்டிருக்கும் கோபத்தில் பேசினார்கள்.
சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இருந்த மெட்ரிக் பள்ளி நிர்வாகியும், கல்வியாளருமான 'ஆயிஷா’ நடராசன் கூறுகையில், ''மெட்ரிக் பள்ளிக் கல்வி என்பது பெற்றோர்களின் டாக்டர், இன்ஜினீயர் ஆசையை நிறைவேற்றும் வகையிலான மனப்பாடம் செய்யும் கல்வியை அடிப்படையாகக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை'' என்று சொன்னவர்,
''கல்வியே தனியார்மயமாகிவிட்ட சூழலில், 'இதுதான் பொதுவான 'சிலபஸ், இதைப் பின்பற்றுங்கள்' என்று சொல்வதோடு அரசு நிறுத்திக் கொள்வது நல்லது. அதைவிடுத்து, இந்த புத்தகங்களைத்தான் வாங்க வேண்டும் என்று எதற்காகக் கட்டாயப்படுத்த வேண்டும்? 'நேஷனல் கரிகுலம் ஃபிரேம் ஒர்க்’ என்கிற தேசிய கமிட்டி, சமச்சீர் கல்வியை நாடு முழுவதும் பரிந்துரைத்த போது கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில அளவில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றக்கூடிய பொதுவான சிலபஸை உருவாக்கின. அதன்படி தயாராகும் புத்தகங்களை, அரசிடமிருந்தோ.... தனியார் புத்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளன. அதே நடைமுறையை இங்கேயும் பின்பற்றினால் பிரச்னை தீர்ந்துவிடும்'' என்றார் யதார்த்தமாக!

இது எல்லாமே திட்டமிட்டபடி நடந்து முடிந்து, 'ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டிருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களே போதும்' என்று முடிவெடுத்தாலே... கிட்டத்தட்ட ஒரு மாதத் துக்கும் மேலான பள்ளி நாட்கள் ஏற்கெனவே வீணாகியிருக்கும். அதேசமயம்... 'அந்தப் பாட புத்தகங்கள் தரமற்றவை' என்று முடிவெடுத்து விட்டால், புதிய புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று, நான்கு மாதங்களாவது தேவைப்படும். அத்தனை பள்ளி நாட்களும் வீண் என்பது ஒருபுறமிருக்க... அதுவரை என்ன செய்வார்கள் மாணவர்களும் ஆசிரியர்களும்? கால் பரீட்சை, அரையாண்டு பரீட்சை என்னாகும்? பொதுத் தேர்வு எழுதும் 7 லட்சம் மாணவர்களின் நிலை என்னாகும்? என்றெல்லாம் பற்பல கேள்விகளுடன் அல்லாடிக் கொண்டு இருக்கிறார்கள் மாணவர்கள்.
சமூகத்தை தெளிவுபடுத்தத்தான் கல்வி. அந்தக் கல்வியே குழப்பத்தில் இருந்தால்?
படம்: ஆ.வின்சென்ட் பால்
0 கருத்துரைகள்:
Post a Comment