சீருக்குள்ளே சேதியிருக்கு !

on Wednesday, January 4, 2012
சீருக்குள்ளே சேதியிருக்கு !

- ஓர் ஆத்மார்த்த அலசல்
நாச்சியாள், படங்கள் : எம்.உசேன்
'கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொடுத்தால் சகோதரன்
உயிர் காப்பான் தோழன்’

- இது நம் தமிழர்களின் வாழ்வியலையும் உறவுகளின் மகிமையையும் பளிச்சென பிரதிபலிக்கும் பழமொழி!
இந்த நான்கு உறவுகளில்... குறிப்பாக, 'சீர் கொடுத்தால் சகோதரன்’ என்பதை உணர்த்த, ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டில் பிறந்த பெண்ணுக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நேரம் இது.
குளிர் மாலை நேரமொன்றில், சீர் கொடுக்கும்... வாங்கிக் கொள்ளும் பெண்களின் அந்த செய்முறையின் சந்தோஷத்தை, உறவின் இறுக்கத்தை இனிக்கப் பேசி கலந்துரையாடி மகிழ்ந்தார்கள் சென்னை, நங்கநல்லூர் 'தோழீஸ் கிளப்’பைச் சேர்ந்த சுபா ரவிசங்கர், ஹேமமாலினி கணேஷ், விஜயலட்சுமி சந்திரசேகர், லதா பாஸ்கர், நாகலட்சுமி சுப்ரமணியன் மற்றும் பத்மா சுப்ரமணியம்.
நாகலட்சுமி: எனக்கு கல்யாணமாகி ஆறு வருஷம் ஆகுது. வருஷம் தவறாம பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுக்குறான் என் தம்பி. பொங்கல் அப்போ தம்பி வீட்டுக்கு வர்றது அவ்ளோ சந்தோஷம்னா, அவன் சீர் எடுத்து வர்றது அதைவிடப் பெருமை எனக்கு. ஏன்னா, 'எனக்கு என்னன்னாலும் உடனே ஓடி வர்றதுக் கும், என் கஷ்டத்துல கண்ணீரைத் துடைக்கறதுக் கும் தம்பி இருக்கறான்’ங்கிறதை என் புகுந்த வீட்டுக்கு குறிப்பால உணர்த்துற விஷயமா அது எனக்குத் தோணும். சீருங்கிறது செலவும், பொருளும் மட்டுமில்ல... நம்ம பொண்ணுங்களுக்கு எல்லாம் பிறந்த வீடு தர்ற பெரிய மாரல் சப்போர்ட்.
ஹேமமாலினி: பாட்டி காலத்துலயெல்லாம், 'நீ பிறந்த வீட்டுல விளைஞ்ச முதல் விளைச்சல் உனக்குத்தான் ராசாத்தி’னு சொல்லி அப்பாவோ, சகோதரனோ அவங்க வீட்டுல இருந்து வண்டி கட்டிக்கிட்டு கட்டுக்கட்டா கரும்பு, மூட்டை அரிசி, காய்கறி, பொங்கல் பானைனு நிறைவா சீர் கொண்டு போய் கொடுப்பாங்களாம்.
லதா: ஆமாம்... எங்க பாட்டியும் சொல்லி நான் கேட்டிருக்கேன். அதுக்குக் காரணமே... பிறந்த வீட்டுப் பொண்ணு எந்த மன வருத்தமும் இல்லாம சந்தோஷமா இருந்தாதான், தன் வீட்டுல நிம்மதி தங்கும்; செல்வம் கிடைக்கும்; ஆரோக்கியம் நிலைக்கும்னு நம்பினாங்க. அதனாலதான் இன்னிவரைக்கும் பொங்கல் முடிஞ்சதும் பொண்ணுங்கள்லாம் 'காணும் பொங்கல்’ அன்னிக்கு பிறந்த வீட்டுக்கு போய், அண்ணன், தம்பிக்காக படையல் போட்டு சாமி கும்பிட்டு வர்ற பழக்கம் இருக்கு. இப்படி அக்கா, தங்கச்சி - அண்ணன், தம்பி உறவு பலமா நிலைச்சு இருக்கறதுக்காகத்தான் நம்ம மண்ணோட எந்த விசேஷத்துலயும் தாய்மாமன் முறைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.
விஜயலட்சுமி: அது மட்டுமில்லை... கல்யாணம் செய்து இன்னொரு வீட்டுக்கு அனுப்பின தன் பெண்ணை அடிக்கடி வந்து பார்த்துட்டு போறதுக்கும் இந்த சீர், சம்பிரதாயத்தை எல்லாம் ஒரு காரணமா ஏற்படுத்தினாங்க. சம்பந்தி வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டுப் போறதை கௌரவக் குறைச்சலா நினைக்கற பெண்ணைப் பெத்தவங்ககூட, இப்படி சீருங்குற பேர்ல கம்பீரமா போகலாம்தானே?!
பத்மா: ஒரு பொண்ணுக்கு அவ கணவர் எவ்வளவுதான் வாங்கிக் கொடுத்தாலும், பிறந்த வீட்டுல அவ அண்ணன், தம்பி வாங்கிக் கொடுக்கறதைத்தான் ரொம்பப் பெருமையா, சந்தோஷமா நினைச்சு நினைச்சு சந்தோஷப் பட்டுக்குவா.
நாகலட்சுமி: அது நூத்துக்கு நூறு உண்மை! என் பிறந்த வீட்டுல இருந்து சீர் வந்து இறங்கின அந்த ஒரு வாரமும், என் வீட்டுல அதேதான் பேச்சா இருக்கும். 'என் தம்பி வாங்கிக் கொடுத்த சேலை, என் தம்பி வாங்கிக் கொடுத்த பாத்திரம்’னு அது பழசாகுற வரைக்கும் சொல்லிட்டே இருப்பேன்.
விஜயலட்சுமி: இன்னொரு பக்கம்... ஏதோ பிரச்னையால நமக்கும்... அண்ணன், தம்பிகளுக்கும் இடையில ஏதாவது மனஸ்தாபம் வந்திருந்தாலும்... இந்த பொங்கல் சீர் கொடுக்கற சாக்குல அந்த மனஸ்தாபம் எல்லாம் மறைஞ்சுடும்.
ஹேமமாலினி: சரியா சொன்னீங்க... காது குத்து, சடங்குனு எல்லா விசேஷங்களும் உறவு களுக்குள்ள இருக்குற பகையை மறந்து, அன்பை வளர்க்கறதுக்குன்னே பெரியவங்க கண்டு பிடிச்ச வழிமுறை. ஆனா, அதெல்லாம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டே வருது. வீடு தேடி வந்து கொடுக்கற சீர்... இப்போ மணியார்டர்ல வந்து சேருது... அல்லது பேங்க் அக்கவுன்ட்ல டெபாஸிட் பண்ணிடறாங்க.
சுபா : வாழ்க்கை ஓடுற வேகத்துல அண்ணன், தம்பிங்க எல்லாம் நேர்ல வந்து சீர் கொடுத்துட்டு போகலையேனு வருத்தப்படுறதை விட, எவ்வளவு வேலைகளுக்கு நடுவுலயும் மறக்காம மணியார்டர் அனுப்பிடறாங்களேனு அதுலயும் சந்தோஷத்தைதானே நாம பார்க்குறோம்.
நாகலட்சுமி: எல்லாரும் சீர் வாங்குறதப் பத்தியே பேசுறீங்களே.... கொடுக்குறதப் பத்தி பேசுவீங்களா? எனக்கு அஞ்சு நாத்தனார்... அவங்க அஞ்சு பேருக்கும் வருஷம் தவறாம கொடுத்துட்டு இருக்கேன்.
விஜயலட்சுமி: ஆமாம்... நாம நம்ம அண்ணன் தம்பிகிட்டயிருந்து எவ்வளவு சந்தோஷமா வாங்குறோம்? அதே சந்தோஷத்தை நாத்தனார் களுக்கும் கொடுக்குறதுதான் நியாயம்! என் வசதிக்கு ஏத்தபடி நான் என் நாத்தனார்களுக்கு சீர் கொடுக்குறேன். வாங்கறப்ப கிடைக்கற சந்தோஷத்தைவிட... கொடுக்குறப்ப சந்தோஷம் பல மடங்கு ஆயிடுது.
பத்மா: இப்பவெல்லாம் வீட்டுக்கு ஒரு குழந்தை, ரெண்டு குழந்தைன்னு இருக்கிறதால... மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா உறவு முறைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுட்டே வருது. இருந்தாலும், நம்ம பசங் களுக்கும் இந்த சீர் சம்பிரதாயத்தையும், அதோட சந்தோஷங் களையும் சொல்லிக் கொடுத்து, தலைமுறை தாண்டியும் அதை தழைக்கச் செய்யணும்!
தோழிகள் அனைவரும் அதை மனதார வழிமொழிந்து விட்டு, 'பொங்கல் சீர் வாங்க கிளம்பணும்...’ என்றபடியே கலைந்தார்கள்!
நீங்களும் கிளம்பிட்டீங்களா.?!

0 கருத்துரைகள்:

Post a Comment