வணக்கம் போராளிகளே !

on Friday, March 9, 2012

நாச்சியாள்
வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் பெருமையும் ஆளுமையும் பதிவு செய்யப்படுவது இயல்பு. ஆனால், சில பெண்கள்... உலக வரலாறாகவும், உலகையே மாற்றிய வரலாறாகவும் வாழ்வதுதான் சுற்றும் பூமியின் வரம். ஆச்சர்யக்குறிகளாகவும், தீரமிக்க போராளிகளாகவும் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில ஆளுமைகளின் போராட்டப் பக்கங்களில் சில படபடக்கின்றன இங்கே!
பிரச்னை அல்ல... தீர்வு நாங்கள்!
பெண்கள் மீது அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாடு. அங்கே முப்பது வயதைக் கடந்தவர், மூன்று குழந்தைகளின் தாயான டவாக்கல் கார்மன். கையில் அரசியல் அதிகாரம் எதுவுமில்லை, ஒரு சாதாரண பத்திரிகையாளர். ஆனால், அதன் மூலமே பெண் பத்திரிகையாளர்களை ஒன்று திரட்டி, இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
'முஸ்லிம் பெண், பர்தா அணியாமல் பொது இடத்தில் நடக்கலாமா?’ என்று மதப்பெரியவர்கள் கண்டித்தபோது... 'பர்தா அணிவது என்பது கலாசார ரீதியானது; இஸ்லாம் அதைக் எங்கும் கட்டாயப்படுத்தவில்லை’ என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.
'பெண்கள் நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டுள்ளோம்; நாம் யாருடைய ஒப்புதலுக்கும் அனுமதிக்கும் காத்திராமல், எழுந்து நின்று போராடுவதன் மூலம்தான் நம் பலத்தை நிரூபிக்க முடியும்’ என்று அறிவுப்பூர்வமாக பெண்களையும் நாட்டையும் சிந்திக்கத் தூண்டினார்.
இதற்காக... மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள், நாடு கடத்தல்கள் என்று தொடர் துன்பத்துக்கு ஆளாகிக் கொண்டிருந்தாலும்... போராடிக் கொண்டே இருக்கிறார் டவாக்கல் கார்மன்...  முன்னிலும் அதிகமான நெஞ்சுரத்துடன்!
 அகிம்சை ஆயுதம் மலர்த்திய மாற்றம்!
கணவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரை அரவணைத்து நோயிலிருந்து மீட்டு எடுக்க மனம் போராடுகிறது. ஒரு கணம் யோசிக்கிறார் அவர்... 'இப்போது  நாட்டை விட்டு வெளியேறினால், நான் எப்போதும் என் நாட்டுக்குத் திரும்பி வராதபடி ராணுவ ஆட்சியாளர்கள் செய்துவிட்டால்..? ’ என்று தீர்க்கமாக முடிவெடுத்து, கணவனின் மரணத்தின்போதும் வீட்டுச் சிறையிலேயே இருந்தார். பிள்ளைகளைப் பிரிந்து வாழும் துயரத்தையும் தாங்கினார். அவர்... மியான்மர் போராளி ஆங் சாங் சூகி!
ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதால், 1988-ல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர், 1990-ல் பொதுத்தேர்தல் போட்டியிட்டு பெரும்பான்மையாக வெற்றிபெற்றார். ஆனாலும், ஆட்சி அமைக்கவிடாமல், மறுபடியும் வீட்டுச் சிறையில் தள்ளியது கொடுங்கோல் ராணுவம். உலக நாடுகளின் நெருக்கடி அதிகமாகவே, நவம்பர் 2010-ல் விடுதலையானார். நாட்டுக்காக வாழ்க்கை முழுக்க தியாகம் செய்த சூகிக்கு... 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசு  வழங்கப்பட்டிருக்கிறது. வரும் ஏப்ரலில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட தெம்போடு தயாராகி வருகிறார்.
ஃபேஸ்புக் மூலம் ஒரு புரட்சி!
'இளம் தலைமுறைக்குப் பொறுப்பே இல்லை; இன்டெர்நெட், ஃபேஸ்புக், செல்போன் என்று பொழுதைக் கழிப்பதில்தான் ஆர்வம் இவர்களுக்கு’ என்று முந்தைய தலைமுறையின் விமர்சனம், கோபம், அதிருப்தி அனைத்தையும் வாங்கி அடுக்கிக் கொண்டிருக்கிறது இளைய தலைமுறை. இவர்களுக்கு மத்தியில், 'ஃபேஸ்புக்கை புரட்சிக்கும் பயன்படுத்தலாம்' என்று திசைகாட்டி, எகிப்து நாட்டில் புரட்சியை வெடிக்க வைத்திருக்கிறார் அஸ்மா மஹ்ஃபூஸ்!
எகிப்தில் அதிபர் ஹூஸ்னி முபாரக் நடத்திவரும் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, தீ மூட்டிக்கொண்ட நான்கு இளைஞர்களின் மரண அவஸ்தையின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை, தன்னுடைய இணையதள பிளாக் பகுதியில் வெளியிட்டார் அஸ்மா.
இந்த இளைஞர்களில் ஒருவர் இறந்துவிட, அதைக் கேலி செய்தவர்களின் குரல்தான் அஸ்மாவைத் தட்டி எழுப்பியது. 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்’ என்று ஃபேஸ்புக்கில் கணக்கு ஆரம்பித்தவர், 'அரசியல் உரிமைகள் கிடைக்காவிட்டாலும், வாழும் தகுதியான மனித உரிமையாவது கிடைக்க வேண்டும்’ என்று கலகக் குரல் எழுப்பினார். எகிப்து முழுவதும் காட்டுத் தீயாகப் பரவி, கடந்த 2011 ஜனவரி 25-ம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடினர்; புரட்சி வெடித்தது. ஹுஸ்னி முபாரக் அதிகாரத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார்!
 தனி மனுஷி அல்ல... தேசத்தின் போராளி!  
'வாழ்க்கை முடிந்து போனதும், கூடான என் உடலை தயவுசெய்து தூக்கிச் சென்று 'தந்தை கூப்ரூவின் மலை’ உச்சியில் வைத்துவிடுங்கள்; அது உலோகக் கருவாக மாறட்டும்; வரும் தலைமுறைக்கு அது உபயோகப்படட்டும்; இனிவரும் காலங்களில், நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்... உலகின் ஒவ்வொரு மூலைக்கும்’
- தன் மரணம்கூட, தான் நேசிக்கும் மண்ணுக்கும் மக்களுக்கும் உபயோகப்படட்டும் என்று சிந்திக்கிற மன உரம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? அது, ஐரோம் ஷர்மிளா சானுவுக்கு வாய்த்து இருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கிறது 'ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’. இதன்படி இந்திய ராணுவம் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லலாம்; தாக்கலாம்; அடிக்கலாம்; தண்டனைக்கு உள்ளாக்கலாம். 11 வருடங்களுக்கு முன்பு மாலோம் என்கிற இடத்தில் பேருந்துக்காகக் காத்து நின்றவர்களைக் காரணமின்றிச் சுட்டது ராணுவம். 10 பேர் அப்போதே இறந்தார்கள். அடுத்த மூன்றாவது நாள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் ஷர்மிளா, 'சிறப்புச் சட்டத்தை திரும்ப பெறு' என்று குரல்கொடுத்தபடி!
'தற்கொலைக்கு முயல்கிறார்' என்று கைது செய்து, கட்டாயப்படுத்தி டியூப் வழியாக திரவ உணவை செலுத்தி வருகிறது அரசு. ஆனாலும், அயராமல் போராடி வருகிறார் 40 வயது ஷர்மிளா. தொடர்ந்து 11 ஆண்டுகளாக பட்டினியாகக் கிடப்பதால், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்து, எப்போது வேண்டுமானாலும் மரணம் நெருங்கலாம் என்கிற கொடுஞ்சூழல். என்றாலும் போராட்டத்தைத் தொடர்கிறார்... நீங்கள் அவரை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை!
இந்த நூற்றாண்டின் பெண் போராளிகளுக்கு வணக்கங்கள்!

1 கருத்துரைகள்:

Post a Comment