''உடையில் இல்லை குறை... மனதில் இருக்கிறது கறை!''

on Friday, March 9, 2012

நாச்சியாள்
படங்கள்: கே.கார்த்திகேயன், வி.செந்தில்குமார்

ஆடை என்பது நாகரிகத்தின் வளர்ச்சி. ஒரு நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் முதல் குறியீடு... ஆடைதான்! ஆனால், 'அந்த ஆடையே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்துவதற்கு காரணம்' என்கிற கருத்து, படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லா தரப்பு மக்களிடமும் இருக்கிறது. அதன் உட்சபட்ச வெளிப்பாடாகத்தான், 'பெண்கள் உடம்பு தெரியற மாதிரி டிரெஸ் பண்றதாலதான், அதிகமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்குது’ என்று அண்மையில் கருத்து தெரிவித்து இருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் சி.சி.பட்டீல் (சட்டசபையில் செல்போன் மூலமாக நிர்வாணப் படம் பார்த்து, பதவியை பறி கொடுத்தவர்).
''சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் புரையோடிப் போயிருக்கும் இந்த எண்ணத்துக்கும்... உண்மை நிலைக்கும்... தொடர்பு உண்டா?'' என சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சிலரிடம் கேட்டோம்.
'இந்தியன் ஐ.ஏ.எஸ். அகாடமியின்’ நிறுவனர் சுஜாதா, ''இன்றைக்கு நாம் உடுத்துகிற ஆறு முழ சேலை... 16 கஜம், 8 கஜம் எனப் பல நிலைகளைத் தாண்டி வந்தது. 1940-களில் வந்த படங்களைப் பார்த்தால்... தமிழ்நாட்டுப் பெண்கள்கூட தலையில் முக்காடு போட்டு இருப்பார்கள். அதற்காக அன்று பெண்கள் மேல் வன்முறை நிகழவே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ஆண்கள் தங்கள் அதிகார மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும், தங்களின் தனி மனித ஒழுக்க மீறலை நியாயப்படுத்தவும் சொல்கிற சப்பைக் கட்டு இது'' என்று ஒளிந்திருக்கும் உண்மையை, ஆவேசத்துடன் சொன்னவர், தொடர்ந்தார்...
''ஓர் ஆண் குழந்தைக்கு, அவன் வளரும் குடும்பச் சூழலும், சுற்றுப்புறமும், கல்விச் சாலையும், மீடியாவும் ஒரு பெண்ணைப் பற்றி என்னவிதமான மதிப்பீடுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே, ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவனின் மதிப்பீடு அமையும். சேலை கட்டுகிற பெண் கவர்ச்சியாக இல்லை, பேன்ட் - ஷர்ட் போடுகிற பெண் கவர்ச்சியாக இருக்கிறாள் என்பது... பார்க்கிறவனின் மனநிலையைப் பொறுத்தது. ஒரு பெண்ணிடம் கவர்ச்சியை மட்டும் தேடும் ஆணுக்கு, அவள் முழுக்க முழுக்கப் போர்த்திக் கொண்டு இருந்தாலும் அது கவர்ச்சியாகத்தான் தெரியும். அந்த எண்ணம்தான் பாலியல் பலாத்காரத்துக்கும், வன்முறைக்கும் தூண்டுமே தவிர... ஒரு பெண் தன் உடல் தெரியும்படி உடுத்துவது பலாத்காரத்துக்குக் காரணமென்று சொல்வது அழுகிப்போன மனதின் வெளிப்பாடு'' என்று வார்த்தையில் வாள் வீசினார் சுஜாதா.
இதே கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்களின் ஒட்டுமொத்தக் கருத்தை தன்னுடைய குரலில் சொன்னார் எம்.சி.ஏ. மாணவர் ராஜா. ''ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மை. ஒரு பெண் உடுத்துகிற உடையை வைத்துதான் அவளின் குணத்தையே பெரும்பாலானவர்கள் முடிவு செய்கிறோம். உடலின் பெரும்பகுதி தெரியும்படி ஒரு பெண் வரும்போது, அவளைப் பார்த்தால் உள்ளுக்குள் எரிச்சல் கலந்த கோபம் வரும். ஆனால், 'அவள் இப்படி மோசமாக ஆடை உடுத்தி வருகிறாளே... அதற்காக அவளை பலாத்காரம் செய்தால் என்ன?’ என்கிற கேவலமான சிந்தனை வராது. காரணம், ஆண்களுக்குள்ளும் ஒழுக்கம், சுயகட்டுப்பாடு இருக்கிறது'' என்றார் உரத்த குரலில்.
''ஒரு பெண் தன் உடல் பாகங்கள் தெரியும்படி உடை உடுத்தி வரும்போது, ஒரு ஆண் கிளர்ச்சி அடைவான்'' என்கிறார் மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார்.
''ஒரு பெண் கவர்ச்சியாக உடை உடுத்தி வரும்போது அதனைப் பார்க்கும் ஆணின் 'லிம்பிக் சிஸ்டம்’ அவனுடைய உணர்ச்சியைத் தூண்டும்; இது இயற்கையான விஷயம். ஆனால், அப்படி உண்டாகும் கிளர்ச்சியை அவன் சிறுமூளை, 'டேய்... ஏதும் ஏடாகூடமா யோசிக்காதே’ என்று கட்டுப்படுத்தும். மூளையின் கட்டுப்பாடும், தனி மனித ஒழுக்கம், சமூக ஒழுக்கத்தில் சிறந்தவனும் உடனே அதைக் கட்டுப்படுத்துகிறான். அதற்கேற்றாற்போல் அதுவும் சில நொடிகளில் தோன்றி மறைந்து போகிற உணர்வுதான்'' என்று அழகாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தவர்,
''குடிபோதையில் இருக்கும் ஆணின் சிறுமூளை கட்டுப்பாட்டை இழந்து இருக்கும். அதேபோல பணத்தாலும், அதிகாரத்தாலும், சுயக்கட்டுப்பாட்டை இழந்தவர்கள்தான் பலாத்காரம் வரை செல்கிறார்கள் என்பதைத்தான் தினம் தினம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன'' என்று ஆண் உலகின் மனதை குறுக்கே வெட்டிக் காட்டினார் லட்சுமி.
இதே சாட்டையை தானும் விளாசினார் சமூக ஆர்வலர், பேராசிரியை சரஸ்வதி. ''இந்தக் கருத்து, முழுக்க முழுக்க ஆணாதிக்க வக்ர சிந்தனை. 56 வயதான பள்ளி ஆசிரியர், 6 வயது பெண் குழந்தையை பாலியல் வக்கிரத்துக்குள்ளாக்கி இருக்கிறார். அதற்குக் காரணம் அந்த குழந்தை உடுத்திய ஆடை என்று சொன்னால் அது எத்தனை அபத்தமானது? பெண்ணைப் போகப் பொருளாகவும், அடிமை களாகவும் சிந்திக்கிற ஆண், இப்படித்தான் தன்னை நியாயப்படுத்திக் கொள்வான். 'பெண் சமத்துவம் - ஆண் கண்ணியம்’ என்ற அறநெறியில், சமூக ஒழுக்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் சப்பைக்கட்டு. பெண் உடுத்துகிற உடையில் இல்லை குறை; அது ஆணின் மனதில் உள்ள குறை. அந்தக் குறையை சரி செய்யும் கல்வி... ஒரு ஆணுக்கு வீடு, கல்விக்கூடம் இரண்டிலும் சரிவர கிடைத்தால் பெண் எப்போதும் பாதுகாப்பாகவே இருப்பாள்; தலை நிமிர்ந்து நடப்பாள்'' என்றார் சரஸ்வதி முத்தாய்ப்பாக.
மனதுக்கும் ஆடை அணிவிப்போம்!

thanks to AVAL VIKATAN

1 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

ஆடை என்பது சௌகரிமாக இருப்பதற்கு என்றால் குறை இல்லை... ஆனால் பெண்கள், பல சமயங்களில் ஆண்கள் தவறாக பார்க்கிறார்கள் என்று ஆடையை சரி செய்து கொள்வது எதற்க்காக? என்று யோசிக்கும் பொழுது தவறு எங்கு இருக்கிறது என்று புரியும்... இனக்கவர்ச்சி மட்டுமே ஆடையை தேர்ந்தெடுப்பதில் செயல் படுகிறது என்று பெண் உளவியல் மருத்துவர் ஒருவரின் வாதத்துடன் என் கருத்து ஒத்து செல்வதை என் எண்ணம்...

Post a Comment