நான் எனும் அகங்காரி
எனக்குத் தர வேண்டிய
முட்டை அது
அம்மா அண்ணனுக்குத்
தந்தாள்
எனக்குத் தராவிட்டால்
இனி இந்த வீட்டில்
ஒரு போதும்
சாப்பிடமாட்டேன் என்றேன்
சிலநிமிடங்களில் முட்டை
என் தட்டில்
கல்லூரியில் கட்டாயம்
சேலைதான் கட்ட வேண்டும்
ஆணையிட்டார்கள்
சுடிதார்தான் வசதி
என்று கூட்டத்தைக்
கூட்டினேன் பிரின்ஸ்பால்
அலுவலகத்துக்கு முன்பாக
இது கலாசார கேடு
இருந்தாலும் அனுமதிக்கிறோம்
என்றார் பிரின்சிபால்
நான்கு மணி நேரத்தில் முடிக்கிற வேலையை
இரண்டு மணி நேரத்தில் முடித்தேன்
ஐந்து பேர் செய்கிற வேலையை
தனி ஆளாய் செய்து கொடுத்தேன்
பதவி உயர்வு லிஸ்டில்
என் பெயருக்கு இருட்டடிப்பு
நிர்வாகத்தின் எதிரே நின்று
கேள்வி கேட்டேன்
கேட்டது கிடைத்தது
போராளி என்கிறேன் என்னை
அகங்காரி என்கிறார்கள் அவர்கள்
0 கருத்துரைகள்:
Post a Comment