இந்தியனின் உயிருக்கு விலை 25 ஆயிரம் ரூபாயா?'

on Monday, October 17, 2011

போபால் உரத் தொழிற்சாலை விபத்துத் தீர்ப்பும்..போர்க்கொடி உயர்த்தும் சூழல் ஆர்வலர்களும்...
'யூனியன் கார்பைடு' என்ற வார்த்தையைக் கேட்டாலே, போபால் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியில் உள்ள தாய்மார்களின் வயிற்றில் உள்ள குழந்தைகள்கூட, 'ஐயோ...' என்று கதற ஆரம்பித்துவிடும். ஆம், 26 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அந்தக் கொடூர விபத்தின் பாதிப்பு தலைமுறைகளைத் தாண்டியும் தாவிக் கொண்டிருக்கிறது!
1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில், மத்திய பிரதேச மாநிலம், போபால் மாநகரில் நிகழ்ந்த யூனியன் கார்பைடு நிறுவன உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியான 'மீத்தைல் ஐஸோசயனேட்' (Methyl Isocyanate) எனும் விஷவாயு தாக்கி, ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டதுடன், லட்சக்கணக்கானவர்களை உடல் நலக் கோளாறுகள் மற்றும் உடல் ஊனத்துக்கு ஆளாக்கி வைத்துவிட்டது.
வரலாற்றில் கருப்புப் பக்கங்களாக பதிவாகி விட்ட அந்த விபத்துத் தொடர்பான வழக்கில், 26 வருடங்கள் கழித்து, போபால் முதன்மை நீதிமன்றம் இப்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு, இந்தியாவில் மட்டுமல்ல... உலக அளவிலிருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆர்வலர்களை அதிர வைத்திருக்கிறது. 'எட்டு பேருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம்'
-இதுதான் அந்தத் தீர்ப்பின் சாராம்சம்!
இதைப் பற்றி பேசும்போது, ''தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதற்கு சமம் என்பார்கள். அதைத்தான் நிரூபித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு'' என்று சாடலுடன் ஆரம்பித்த பாதுகாப்பான சூழலுக்கான மருத்துவர்கள் அமைப்பின் (டாக்டர்ஸ் ஃபார் சேஃப் என்விரான்மென்ட்), அமைப்பாளரான புகழேந்தி, ''இது விபத்து அல்ல. 'நிறுவனச் செலவுகளைக் குறைக்கிறேன்' என்ற பெயரில், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததால், செயற்கையாக நடத்தப்பட்ட கொடூரம். ஆனால், அந்நிறுவனத்தின் அப்போதைய தலைமைப் பதவியில் (சி.இ.ஓ.) இருந்த 'வாரன் ஆண்டர்ஸன்', பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லப்படவில்லை.
அந்தப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரத்தின் அதிமுக்கியத் தேவையான குடிநீர், நிலத்தடிநீர், காற்று, விவசாயம் என அனைத்தும் பாழாகிப் போயுள்ளன. சுற்றுச்சூழலுக்கும் மாபெரும் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தீர்ப்பு, இதுபோன்ற மன்னிக்க முடியாத செயல்களில் ஈடுபடப் போகிற கார்ப்பரேட் கம்பெனிகள், 'எதைப்பற்றியும் நாம் பயப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்' என்ற தைரியத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருப்பது துரதிர்ஷ்டமே! இதற்குக் காரணம்... வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அமைப்புதான். வழக்கு குறித்த ஆதாரங்கள் மிக வலுவாக இருந்தும், நீதிமன்றத்தில் அவற்றை சரியான முறையில் எடுத்து வைக்கவில்லை. மிகமிகக் குறைவான தண்டனை வழங்கப்பட்டதோடு, உடனடியாக ஜாமீனும் வழங்கப்பட்டுவிட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 470 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க வேண்டும். என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தால்... தலைக்கு வெறும் 25 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். எதிர்பாராமல் நடந்த விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 72 லட்ச ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்நிய நிறுவனம் ஒன்றின் அலட்சியத்தால் நிகழ்ந்த கொடூரத்தில் இறந்த இந்தியனின் உயிருக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது?'' என்று கொதித்த புகழேந்தி,
''பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தையும், அணுசக்தி மசோதாவையும் நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். வெறும் விஷவாயு கசிந்ததற்கே 15 ஆயிரம் உயிர்களை நாம் பறிகொடுத்திருக்கிறோம். நாளை அணுசக்தி கதிர் வீச்சால் பாதிப்பு ஏற்பட்டால்... நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
'அட்டார்னி ஜெனரல்' சோலி சொராப்ஜி, 'இந்த அணுசக்தி மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு எதிரானது' என்று கூறியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்று சொன்னார்!
''கார் விபத்து வழக்கின் தீர்ப்பு போலத்தான் இருக்கிறது தற்போதைய தீர்ப்பு'' என்று அதிகபட்ச வெறுப்புடனும், கோபத்துடனும் ஆரம்பித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன்,
''சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 'விபத்து இழப்பீட்டு மசோதா'வில், 'இந்தியாவில் தொழில் தொடங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இம்மாதிரியான விபத்துகள் நடந்தால், இழப்பீடு வழங்கத் தேவையில்லை. மத்திய அரசே 450 மில்லியன் டாலர் கோடி இழப்பீடு வழங்கும்' என்று வரையறுத்து இருக்கிறார்கள். இங்கே நடப்பது ஜனநாயகமல்ல... 'வியாபார நாயகம்' என்பதற்கு இந்த மசோதாவே சாட்சி. அப்படியிருக்கும்போது, இதுபோன்ற வழக்குகளில் நாம் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?'' என்று விரக்தியுடன் முடித்தார்.
எப்படி எதிர்பார்க்க முடியும்?

Thanks to Pasumai vikatan 25/06/2010

1 கருத்துரைகள்:

SURYAJEEVA said...

பசுமை விகடன் அப்படியே கூடங்குளம் குறித்தும் ஏதாவது எழுதினால் நலமாக இருக்கும்..
செத்த பிறகு நெஞ்சில் அடித்துக் கொள்வதை விட, சாகாமல் காப்பாற்றுவது உசிதம் அல்லவா

Post a Comment